Last Updated : 08 May, 2020 01:22 PM

 

Published : 08 May 2020 01:22 PM
Last Updated : 08 May 2020 01:22 PM

வந்தே பாரத் மிஷன்: வங்கதேசத்தில் தவித்த 186 மாணவர்கள் தாயகம் அழைத்து வரப்படுகின்றனர்; ஸ்ரீநகரில் தங்கவைப்பு

டாக்கா விமானநிலையத்திலிருந்து தாயகம் புறப்படத் தயாராகிய இந்திய மாணவர்கள்: படம் |ஏஎன்ஐ.

டாக்கா

கரோனா வைரஸால் கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் இந்தியாவுக்குள் வரமுடியாமல் வங்கதேசத்தில் தவித்த 186 மாணவர்கள் சிறப்பு ஏர் இந்தியா விமானம் மூலம் ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகருக்கு அழைத்து வரப்படுகின்றனர்.

வந்தே பாரத் மிஷன் திட்டத்தில் முதல்கட்டமாக வங்கதேசத்திலிருந்து மாணவர்கள் அழைத்து வரப்பட்டு அங்கு தங்கவைக்கப்படுகின்றனர்.

வந்தே பாரத் மிஷன் மூலம் வெளிநாடுகளில் தங்கியிருக்கும் இந்தியர்களை மத்திய அரசு ஏர் இந்தியா விமானங்கள், இந்திய கடற்படை கப்பல்கள் மூலம் அழைத்து வருகிறது. அபுதாபி, துபாயிலிருந்து ஏற்கனவே இரு விமானங்கள் மூலம் அழைத்து வரப்பட்ட இந்தியர்கள் கேரளாவில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மாலத்தீவிலிருந்தும், துபாயிலிருந்தும் கப்பல்கள் இன்று புறப்படுகின்றன.

இதற்கிடையே வங்கதேசத்தில் சிக்கித் தவித்த இந்திய மாணவர்களை அழைத்து வர சிறப்பு ஏர் இந்தியா விமானம் டாக்காவுக்கு இன்று சென்றது. டாக்கா நகரில் உள்ள இந்தியத் தூதரகம் ஏற்கெனவே உருவாக்கியிருந்த இணையதளம் மூலம் தாயகம் திரும்ப விருப்பம் தெரிவித்து ஏராளமான இந்திய மாணவர்கள் பதிவு செய்திருந்தனர்.

இதன்படி 186 இந்திய மாணவர்கள் டாக்காவிலிருந்து ஸ்ரீநகருக்கு நேரடியாக அழைத்துச் செல்லப்படுகின்றனர். டாக்கா விமானநிலையத்தில் இந்திய மாணவர்களுடன் இந்தியத் தூதர் ரிவா கங்குலி கலந்து பேசி அவர்களை வழியனுப்பி வைத்தார்.

அப்போது இந்தியத் தூதர் ரிவா கங்குலி ட்விட்டரில் பதிவிட்ட செய்தியில், “வந்தே பாரத் மிஷன் திட்டத்தின் மூலம் வங்கதேசத்திலிருந்து 186 இந்திய மாணவர்களை அழைத்துக்கொண்டு ஏர் இந்தியா விமானம் சற்று நேரத்தில் நேரடியாக ஸ்ரீநகருக்குப் புறப்படும். இந்த விமானத்தில் மாணவர்கள் மட்டுமே பயணிக்கிறார்கள். இந்த மாணவர்களுடன் தொடர்ந்து இந்தியத் தூதரகம் தொடர்பில் இருந்ததால், அவர்களின் பாதுகாப்பை கல்லூரி நிர்வாகம் கவனித்துக்கொண்டது.

வங்கதேசத்தில் இருக்கும் இந்தியர்களை அழைத்துச்செல்ல மொத்தம் 7 விமானங்கள் இயக்கப்பட உள்ளன. ரமலான் பண்டிகை வரவுள்ள நேரத்தில் மாணவர்கள் தாயகம் திரும்ப ஆர்வமாக உள்ளனர். இந்திய மாணவர்களைப் பாதுகாப்பாக அனுப்பி வைக்க உதவிய வங்கதேச அரசுக்கு நன்றி தெரிவிக்கிறோம்” எனத் தெரிவித்திருந்தார்.

வந்தே பாரத் மிஷன் மூலம் தங்களை அழைத்து வந்த மத்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் மாணவர்கள் நன்றி தெரிவித்தனர். மேலும் மாணவர்கள் பயிலும் கல்லூரி சார்பிலும் இந்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x