Published : 08 May 2020 01:28 PM
Last Updated : 08 May 2020 01:28 PM
நொய்டா சாம்சங் மொபைல் தொழிற்சாலை இன்று மீண்டும் இயங்கத் தொடங்கியது. அடுத்த சில வாரங்களில் சுமார் 3,000 தொழிலாளர்கள் இந்தத் தொழிற்சாலையில் பணிபுரிவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.
ஊரடங்கு மே 17-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் கரோனா பாதிப்பு தன்மைக்கேற்ப விதிமுறைகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. தொழிற்சாலைகள் குறைந்த தொழிலாளர்களுடன் செயல்பட மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதித்துள்ளது.
ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து, உத்தரப் பிரதேச அரசு மே 3-ம் தேதி அன்று அதன் கடுமையான நடைமுறைக்கு திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை வெளியிட்டது.
மீண்டும் சாம்சங் தொழிற்சாலை இயக்கப்படுவது குறித்து சாம்சங் நிறுவனத்தின் தென்மேற்கு ஆசியாவின் தலைவர் பார்த்தா கோஷ் கூறியதாவது:
''லாக்டவுனில் தளர்த்தப்பட்ட விதிமுறைகளுக்கேற்ப தொழில்துறை நிறுவனங்கள் நகர்ப்புறங்களில் செயல்பட அனுமதிக்கப்படும் என்று அரசாங்கம் கூறியிருந்தது. அதேநேரம் கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தொழிற்சாலைகளில் சமூக இடைவெளி பின்பற்றப்படும். பணியிடங்களில் இரண்டு ஷிப்டுகளுக்கும் 1 மணிநேர வித்தியாசம் இருக்கும்.
நொய்டா சாம்சங் மொபைல் தொழிற்சாலை வெள்ளிக்கிழமை மீண்டும் தொடங்கியது. இத்தொழிற்சாலையில் உள்ள மொத்த பணியாளர்கள் எண்ணிக்கை 10 ஆயிரம். ஆனால் தறபோது 30 சதவீதப் பணியாளர்களே தொழிற்சாலையில் பணிபுரியமுடியும் என்ற சூழலில் சுழற்சி முறையில் பணியாற்ற தொழிலாளர்கள் பேருந்துகள் மூலம் தொழிற்சாலைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இவர்கள் உத்தரப் பிரதேசத்தையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் சேர்ந்தவர்கள் ஆவர்.
அடுத்த சில வாரங்களில் 3000 தொழிலாளர்களைக் கொண்டு சாம்சங் தொழிற்சாலை இயங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
மூலப்பொருட்களைப் பெறுவதற்கான தளவாடங்கள் இன்னும் சிக்கலானவையாக இருப்பதால், இந்த நிறுவனங்கள் தற்போதுள்ள உதிரிப்பொருட்களைக் கொண்டு பணியாற்றத் தொடங்கும். மேலும் பணிக்கு வந்துள்ள தொழிலாளர்களைக் கொண்டு உற்பத்தி செயல்முறையைத் தொடர ஏற்பாடுகளைச் செய்ய முயலும்''.
இவ்வாறு பார்த்தா கோஷ் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT