Last Updated : 08 May, 2020 12:37 PM

1  

Published : 08 May 2020 12:37 PM
Last Updated : 08 May 2020 12:37 PM

2 மாதங்களில் ரூ.5.66 லட்சம் கோடி கடன் வழங்கிய பொதுத்துறை வங்கிகள்; லாக்டவுன் தளர்த்தப்பட்ட பின் பொருளாதாரம் மீளும்: நிர்மலா சீதாராமன் நம்பிக்கை

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் : கோப்புப்படம்

புதுடெல்லி

கடந்த 2 மாதங்களில் பொதுத்துறை வங்கிகள் மூலம் ரூ.5.66 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. லாக்டவுன் தளர்த்தப்பட்ட பின் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாாரமன் நம்பிக்கை தெரிவித்தார்.

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் ஊடரங்கு அமல்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து 3-வது கட்ட லாக்டவுன் வரும் மே 17-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த லாக்டவுன் காலகட்டத்தில் தொழிற்சாலைகள், நிறுவனங்கள், சிறு, குறுந்தொழில்கள் மூடப்பட்டதால் பொருளாதார நடவடிக்கை முற்றிலும் முடங்கியுள்ளது.

லாக்டவுன் காலகட்டத்தில் ஏழை, கூலித்தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் மத்திய அரசு ரூ.1.70 லட்சம் கோடி மதிப்பிலான நிதியுதவியை கடந்த மார்ச் 26-ம் தேதி அறிவித்தது. மேலும், ஜன்தன் வங்கிக் கணக்கில் பெண் பயனாளிகளுக்கு நேரடியாக பணத்தைப் பரிமாற்றம் செய்து வருகிறது. குறுகியகால கடனுக்கான வட்டியையும் ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது. பரஸ்பர நிதித்துறைக்கு ரூ.50 ஆயிரம் கோடி நிதியையும் ரிசர்வ் வங்கி விடுவித்தது.

இந்த சூழலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ட்விட்டரில் வங்கிகள் வழங்கிய கடன் குறித்துப் பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

''கடந்த மார்ச், ஏப்ரல் மாதத்தில் 41.81 லட்சத்துக்கும் அதிகமான வங்கிக்கணக்கு உடையவர்களுக்கு ரூ.5.66 லட்சம் கோடி கடன் வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. சிறு,குறு, நடுத்தரத் தொழில்கள், சில்லறை வணிகம், வேளாண்மை, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இந்தக் கடன் வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. லாக்டவுன் தளர்த்தப்பட்டபின் கடன் தொகை வழங்கப்படும். பொருளாதாரமும் மீளும்.

லாக்டவுன் காரணமாக தொழிலில் ஏற்பட்டுள்ள முடக்கத்தால் கடனுக்கான தவணை செலுத்துவதில் 3 மாதம் அவகாசம் எடுத்துக்கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அளித்த காலக்கெடுவை 3.2 கோடி வாடிக்கையாளர்கள் பயன்படுத்தியுள்ளனர். அவர்களின் கடன் தொகையை வசூலிப்பதில் வங்கிகளும் அவகாசம் வழங்கியுள்ளன.

மார்ச் 1-ம் தேதி முதல் மே 4-ம் தேதி வரை வீட்டுக்கடன் நிறுவனங்கள், வீட்டு வசதி நிறுவனங்களுக்கு ரூ.77,383 கோடி கடனை பொதுத்துறை நிறுவனங்கள் வழங்கியுள்ளன. மேலும் டிஎல்டிஆர்ஓ அடிப்படையில் ரூ.1.08 லட்சம் கோடி நிதியும் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதத்திலிருந்து 27 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு மேல் பொதுத்துறை வங்கிகளைக் கடனுக்காக அணுகியதில் ரூ.26,500 கோடி கடன் வழங்கப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருகின்றன'' எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x