Published : 08 May 2020 08:18 AM
Last Updated : 08 May 2020 08:18 AM
கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக வெளி நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணியை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
இதன்படி, மாலத்தீவில் இருந்து 1,000 இந்தியர்களை அழைத்து வருவதற்காக, கடற்படையின் ஐஎன்எஸ் ஜலஷ்வா, ஐஎன்எஸ் மாகர் என்ற 2 போர்க் கப்பல்கள் மும்பையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டன. இதுபோல ஐக்கிய அரபு அமீரகத்தில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டு வருவதற்காக ஐஎன்எஸ் ஷர்துல் என்ற கப்பல் துபாய் விரைந்துள்ளது.
இந்நிலையில் ஐஎன்எஸ் ஜலஷ்வா நேற்று மாலத்தீவு தலைநகர் மாலே சென்றடைந்தது. இதுகுறித்து கடற்படை செய்தித் தொடர்பாளர் விவேக் மத்வால் கூறும்போது, “மீட்புப் பணிக்கு ஏற்றவாறு இந்தக் கப்பலில் உரிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மீட்கப்படும் அனைவருக்கும் பயணத்தில் அடிப்படை வசதிகளும், மருத்துவ வசதிகளும் அளிக்கப்படும். உரிய பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படும்” என்றார்.
‘சமுத்திர சேது’ (கடற்பாலம்) என்ற திட்டத்தின் கீழ் அனுப்பி வைக்கப்பட்டுள்ள இந்த 3 கப்பல்களும் கேரள மாநிலம் கொச்சிக்கு வந்து சேரும். பின்னர் அங்கிருந்து அனைவரும் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். இந்த 3 கப்பல்கள் தவிர, 12 நாடுகளில் இருந்து சுமார் 1,500 இந்தியர்களை அழைத்துவர மே 7 முதல் ஒரு வாரத்துக்கு 64 விமானங்கள் இயக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT