Published : 07 May 2020 08:33 PM
Last Updated : 07 May 2020 08:33 PM
மகாராஷ்டிர எதிர்க்கட்சித் தலைவர்களுடன் உரையாடிய முதல்வர் உத்தவ் தாக்கரே இம்மாத இறுதிக்குள் மாநிலத்தில் கரோனா வைரஸ் தொற்றுநோய் பாதிப்பு தடுக்கப்பட்டுவிடும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
மத்திய அரசு மாநிலத்துடன் ஒத்துழைத்து வருவதாகவும், பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடலுக்கும் வழிகாட்டுதலுக்கும் எளிதில் கிடைப்பதாகவும் அவர் காணொலி மூலம் உரையாற்றிய கூட்டத்தில் தெரிவித்தார்.
இதுகுறித்து முதல்வர் அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் எதிர்க்கட்சிகளுடன் கலந்தாலோசனை செய்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
கூட்டத்தில் முதல்வர் உத்தவ் தாக்கரே கலந்துகொண்டு பேசியதாவது:
"ஊரடங்கு காரணமாக, ஏப்ரல் மாதத்தில் நோயாளிகளின் எண்ணிக்கை (கடுமையாக) உயரவில்லை. மே மாதத்திலும் நாம் அதைப் போலவே கவனித்துக்கொள்ள வேண்டும். மும்பையில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, அரசாங்கம் போதுமான தனிமைப்படுத்தும் மையங்களை உருவாக்கியுள்ளது. இந்த மாத இறுதிக்குள் தொற்றுநோய் கட்டுப்படுத்தப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசு மாநிலத்துடன் ஒத்துழைத்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடலுக்கும் வழிகாட்டுதலுக்கும் எளிதில் கிடைக்கிறார்.
நோய்த்தொற்று இடங்களாக வளர்ந்து வரும் மாலேகான் மற்றும் அவுரங்காபாத் நகரங்களில் உள்ள கட்டுப்பாட்டு மண்டலங்களில் வசிக்கும் மக்கள் விதிகளைப் பின்பற்ற வேண்டும். மேலும் உள்ளூர் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் நிர்வாகத்துடன் ஒத்துழைக்க வேண்டும்''.
இவ்வாறு முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
இக்கூட்டத்தில் கலந்துகொண்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் பேசியதையும் முதல்வர் அலுவலகம் தனது செய்திக்குறிப்பில் வெளியிட்டுள்ளது. மேலும், கூட்டத்தில் கலந்துகொண்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் இந்த நெருக்கடியின்போது தாங்கள் அரசாங்கத்துடன் இருப்பதை உறுதி செய்துள்ளனர்.
துணை முதல்வர் அஜித் பவார் கூறுகையில், ''பண்ணைக் கடன் தள்ளுபடியில் பயன் பெறாத விவசாயிகளுக்கு பயிர்க் கடன்களைப் பெறும் எதிர்க்கட்சித் தலைவர்களும் உதவ வேண்டும்'' என்று தெரிவித்தார்.
மருத்துவ ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்க: தேவேந்திர பட்னாவிஸ்
''மும்பையின் நிலைமை குறித்து கவனம் செலுத்த வேண்டிய அவசியம் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தை மேம்படுத்த வேண்டியது மிகமிக அவசியம், மருத்துவ ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஒரு திட்டம் இருக்க வேண்டும்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களை தங்கள் சொந்த மாநிலங்களுக்கு அழைத்துச் செல்ல மாநில அரசு அதிக ரயில்களைக் கோர வேண்டும்.காவல் படையின் மன உறுதியை உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும், தொழில்கள் புத்துயிர் பெறுவதற்கு மண்டல வாரியான நிபுணர் குழுக்களை உருவாக்க பரிந்துரைக்கிறேன்'' என்று மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் வலியுறுத்தினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT