Published : 07 May 2020 05:29 PM
Last Updated : 07 May 2020 05:29 PM
கரோனா வைரஸுக்கு மதுபானம் ஒன்றும் தடுப்பூசி அல்ல. இதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று கூறிய சிவசேனா, மும்பையில் மதுக்கடைகளை மீண்டும் மூடியதற்காகப் பாராட்டியுள்ளது.
கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் தொடங்கிய நாடு தழுவிய ஊரடங்கு மூன்றாவது முறையாக வரும் மே 17-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது எனினும், நாட்டின் பெரும்பாலான இடங்களில் ஊரடங்கு விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன.
மக்களின் அத்தியாவசியத் தேவைகளுக்காக விதிமுறைகள் தளர்த்தப்பட்ட நிலையில் பல்வேறு மாநிலங்களிலும் இயங்கிவந்த அரசு மதுபானக் கடைகளைத் திறக்க முடிவு செய்யப்பட்டது. கரோனா வைரஸ் பரவலை இது மேலும் அதிகப்படுத்தும் என பல்வேறு எதிர்க்கட்சிகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
கோவிட் -19 அல்லாத கட்டுப்பாட்டு மண்டலங்களில், மதுபானம் உள்ளிட்ட கடைகளைத் திறக்க மகாராஷ்டிர அரசு ஞாயிற்றுக்கிழமை அறிவித்ததை அடுத்து, திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் கடைகளுக்கு வெளியே நீண்ட வரிசைகள் காணப்பட்டன.
மும்பையிலும் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டதை அடுத்து கரோனா ஊரடங்கு விதிகளை காற்றில் பறக்கவிட்டு மக்கள் முண்டியடித்து வாங்கிச் சென்றதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. நாட்டிலேயே மும்பையில் பாதிப்புகளும் இறப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் பலத்த எதிர்ப்புகளும் விமர்சனங்களும் உருவானதால் மும்பை நகராட்சி ஆணையர் செவ்வாய்க்கிழமை இரவு மதுபானக் கடைகள் உட்பட அத்தியாவசியமற்ற அனைத்துச் சேவைகளையும் மூட உத்தரவிட்டார்.
இதுகுறித்து தனது சாம்னா பத்திரிகை தலையங்கத்தில் சிவசேனா கூறியுள்ளதாவது:
''மதுபான விற்பனையின் மூலம் ரூ.65 கோடி வருவாய் ஈட்டியதற்காக 65,000 கோவிட்-19 தொற்று பாதிப்புகள் ஏற்படுத்திக்கொள்வது மதிப்புக்குரியது அல்ல. மக்கள் மதுக்கடைகளில் கூடும்போது சமூக இடைவெளி விதிமுறைகளை மீறுகின்றனர்.
நிர்வாகம் மீண்டும் மதுக்கடைகளை மூட உத்தரவிட வேண்டியிருந்ததால் மதுப்பிரியர்களின் மகிழ்ச்சி குறுகிய காலமாக இருந்தது. ஆனால் மக்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். கரோன வைரஸுக்கு மதுபானம் ஒன்றும் தடுப்பூசி அல்ல.
மும்பையில் மட்டும், இரண்டு நாட்களில் மதுபான விற்பனையின் மூலம் கிடைத்த வருவாய் ரூ.65 கோடி. ஆனால் செவ்வாயன்று, நகரம் 635 புதிய கோவிட்-19 பாதிப்புகளினால் கிட்டத்தட்ட 30 இறப்புகள் ஒரே நாளில் அதிகரித்தன. மதுபானக் கடைகளைத் திறந்ததன் விளைவு 24 மணிநேரத்தில் காணப்பட்டது. மதுக்கடைகளைத் திறந்ததால் அதிக உயிரிழப்புகள்தான் நாம் கண்ட பலன்.
ரூ.65 கோடி வருவாய்க்கு, 65,000 கரோனா வைரஸ் தொற்று பாதிப்புகளை வாங்க (வைத்திருக்க) இனியும் நம்மால் முடியாது. கோவிட்-19க்கு மதுபானம் ஒரு தடுப்பூசி அல்ல என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
மதுபானக் கடைகளை மூடிவிட்டு, மளிகைப் பொருட்கள் மற்றும் மருத்துவக் கடைகளை மட்டுமே திறந்த நிலையில் வைத்திருக்க அனுமதிக்கும் அரசாங்கத்தின் முடிவு பாராட்டுக்குரியது''.
இவ்வாறு சிவசேனா தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT