Published : 07 May 2020 03:36 PM
Last Updated : 07 May 2020 03:36 PM
மகாராஷ்டிராவின் பல்வேறு பகுதிகளிலிருந்து தங்கள் மாநிலங்களுக்குத் திரும்பும் 4,627 புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பயணச் செலவை ஏற்றுக்கொண்டுள்ளதாக மகாராஷ்டிரா காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
லாக்டவுன் காரணமாக பணியிடங்களில் சிக்கிய புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த இடங்களுக்கு திரும்புவதற்கு ஏற்ப கடந்த மே 1ம் தேதியிலிருந்து சிறப்பு ரயில்களுக்கு உத்தரவிட்டது மத்திய உள்துறை அமைச்சகம். இப்பணியில் 115 சிறப்பு ரயில்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான டிக்கெட் செலவை அந்தந்த மாநிலங்கள் பயணிகளிடம் வசூலித்து ஒப்படைக்க வேண்டும் என்று கூறியிருந்தது. இதற்காக பரவலாக எதிர்ப்பு உருவானது.
நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி ''வெளிநாட்டில் சிக்கியிருக்கும் நம்முடைய குடிமக்களுக்காக இலவசமாக விமானப் பயணத்தை ஏற்பாடு செய்கிறது மத்திய அரசு. குஜராத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கான போக்குவரத்திற்காகவும் உணவிற்காகவும் 100 கோடி ரூபாய் செலவிடப்படும்போது பிரதமரின் கரோனா நிதிக்காக ரயில்வே அமைச்சகம் 151 கோடி ரூபாயை தானமாக அளிக்கும்போது, தொழிலாளர்களுக்காக இலவச ரயில் போக்குவரத்தை அளிக்க முடியாதா?'' என்ற கேள்வியை எழுப்பியிருந்தார்.
ஆனால் இவரது கேள்விக்கு மத்திய அரசு தரப்பிலிருந்து எந்தபதிலும் வராத நிலையில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான பயணச்செலவை காங்கிரஸ் ஏற்கும் என்றும் சோனியா காந்தி அறிவித்தார். அவரது அறிவிப்பை ஏற்ற அம்மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் டி.கே. சிவகுமார் அம்மாநில காங்கிரஸ் கமிட்டி சார்பாக கர்நாடக மாநில போக்குவரத்துக் கழகத்திற்கு ஒரு கோடி ரூபாய் தருவதாக அறிவித்தார்.
தற்போது மகாராஷ்டிரா காங்கிரஸும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் செலவை ஏற்க முன்வந்துள்ளது. இதுகுறித்து மகாராஷ்டிர அமைச்சர் பாலாசாகேப் தோராத் தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் அறிவிப்பின்படி, கடந்த இரண்டு நாட்களில் மகாராஷ்டிராவின் பல்வேறு பகுதிகளிலிருந்து தங்கள் மாநிலங்களுக்குத் திரும்பும் 4627 ஏழை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பயணச் செலவை மகாராஷ்டிரா காங்கிரஸ் ஏற்கிறது.
நாக்பூரிலிருந்து முசாபர்பூருக்கும், வார்தா முதல் பாட்னா வரையிலும் ரயிலில் பயணிக்கும் 2019 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அனைவரின் டிக்கெட்டுகளுக்கும் காங்கிரஸ் கட்சி பணம் செலுத்தியுள்ளது. இதற்கான பணிகளில் ஈடுபட்ட எரிசக்தி அமைச்சர் நிதின் ரவுத், கால்நடை பராமரிப்பு அமைச்சர் சுனில் கேதார், எம்.எல்.ஏ ரஞ்சித் காம்ப்ளே ஆகியோருக்கு சிறப்பு வாழ்த்துக்கள். மற்றும் பாதுகாப்பு அமைச்சர் விஜய் வதேட்டிவார் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பலுபாவ் தனோர்கரின் வழிகாட்டுதலின் கீழ், 239 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பாட்னாவுக்குச் செல்வதற்கான போக்குவரத்து செலவை சந்திரபூர் நகரம் மற்றும் கிராமப்புற மாவட்ட காங்கிரஸ் குழு ஏற்றுக்கொண்டுள்ளது.
இது தவிர, காங்கிரஸ் கட்சி புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் சுகாதார பரிசோதனைகளும் உறுதிசெய்யப்பட்டுள்ளது, படிவங்களை நிரப்ப அவர்களுக்கு உதவியது, மேலும் அவர்களுக்கு பயணம், நீர், உணவு, சானிடைசர்கள், முகக்கவசங்கள் போன்றவற்றை வழங்கியது.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பயணத்தை எளிதாக்குவதற்கு, மகாராஷ்டிர பிரதேச காங்கிரஸ் குழுவின் ஆலோசனையின் பேரில், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு ஹெல்ப்லைன் அமைக்கப்பட்டுள்ளது.''
இவ்வாறு மகாராஷ்டிர அமைச்சர் பாலாசாகேப் தோராத் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT