Published : 07 May 2020 12:50 PM
Last Updated : 07 May 2020 12:50 PM

விஷவாயுக் கசிவு துயரம்: பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு- பொறுப்பேற்காத நிர்வாகம்- தொழிற்சாலையை மூட வலுக்கும் குரல்கள்

விசாகப்பட்டிணத்தின் வேங்கடாபுரம் கிராமத்தில் உள்ள தொழிற்சாலையின் ஸ்டைரீன் விஷவாயுக் கசிவினால் 8 பேர் பலியாகி ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டதையடுத்து எல்.ஜி.பாலிமர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை மூட வேண்டும் என்ற குரல்கள் வலுத்து வருகின்றன.

ஸ்டைரீன் என்பது ஈதன்பென்ஸீன், வினில் பென்சீன், ஃபினைலிதீன் என்றும் வழங்கப்படுகிறது. இது புற்றுநோயை உருவாக்குவதாகும்.

கண், உடல் தொடர்பு, மூக்கால் முகர்வது போன்றவை கேன்சருக்கு வழிவகுக்கும் என்று ஆய்வாளர்களால் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

தற்போது ஹோமிபாபா கேன்சர் மருத்துவமனையின் முன்னாள் இயக்குநர் டாக்டர் ரகுநந்த ராவ் ஸ்டைரீன் பற்றி கூறும்போது, “ஸ்டைரீன் என்பது பாலிஸ்டைரீன் பிளாஸ்டிக்குகள், மற்றும் ரெசின்கள் உற்பத்தியில் பயன்படுத்துவதாகும் இதனால் கண் எரிச்சல், உணவுப்பாதை குடல் பிரச்சினைகள் ஏற்படலாம்” என்றார்.

ஒருவரினுள் இது எந்த அளவுக்கு உள்ளே செல்கிறதோ அதைப்பொறுத்து நுரையீரல் பாதிப்பும் மைய நரம்பு மண்டலச் சேதமும் ஏற்படும்.

இந்நிலையில் விஷவாயுக் கசிவினால் 8 பேர் பலியாக விசாகப்பட்டிணம் எல்.ஜி.பாலிமர்ஸ் நிறுவனத்துக்கு சீல் வைக்க வேண்டும் என்ற குரல்கள் வலுத்து வருகின்றன.

சி.ஐ.டி.யு. மாநில தலைவர் நரசிங்க ராவ் கூறும்போது, நிறுவனத்தை முதலில் மூட வேண்டும், நிர்வாக அதிகாரிகளைக் கைது செய்து விசாரிக்க வேண்டும், இது நிர்வாகத்தின் அலட்சியத்தினால் விளைந்ததே. இந்தத் தொழிற்சாலை விரிவாக்கத்துக்கு அனுமதி அளித்தவர்களையும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று சாடினார்.

ஐ.என்.டி.யு.சி தொழிற்சங்கத் தலைவர்கள் மந்த்ரி ராஜசேகர் மற்றும் ராமச்சந்திர ராவ் கூறும்போது, “1997-ல் 60 உயிர்களைப் பலி வாங்கிய ஹெபிசிஎல் விஷாகா சுத்திகரிப்பு ஆலையின் வெடிப்பை நினைவூட்டுகிறது இந்த விஷவாயுக் கசிவு. அரசு உடனே தொழிற்சாலையை மூட உத்தரவிட வேண்டும், அலட்சியமாகச் செயல்பட்ட நிர்வாக அதிகாரிகளை கைது செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளனர்.

முன்னாள் அமைச்சரும் தெலுங்கு தேசம் தலைவருமான பண்டாரு சத்யநாராயண மூர்த்தி கூறும்போது நிறைய விபத்துகள் நடந்த பிறகும் எல்.ஜி.பாலிமர்ஸ் ஆலைக்கு முன்னுரிமை அளிக்கின்றனர் அதிகாரிகள். அவர்களுக்கு அனைத்து அனுமதிகளும் கிடைப்பது எப்படி? விரிவாக்கம் செய்வது எப்படி? விசாகில் உள்ள அனைத்து நச்சுத் தொழிற்சாலைகளையும் மூட நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

பாஜக தலைவர் என்.விஷ்ணுகுமார் ராஜு கூறும்போது, கடுமையான ரசாயன நாற்றமும் விபத்தின் தன்மையும் நிர்வாகத்தினரின் கிரிமினல் அலட்சியத்தைக் காட்டுகிறது என்று சாடினார்.

பொறுப்பேற்காத நிறுவனம்:

முன்னாள் எம்.எல்.ஏ பல்லா சீனிவாச ராவ், கூறும்போது, நிர்வாகம் இன்னும் கூட பொறுப்பை ஏற்க மறுத்து வருகிறது. மீட்புக்கோ பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணத்துக்கோ எந்த வித பொறுப்பையும் நிர்வாகம் ஏற்கவில்லை.

சிபிஎம் மாநிலத் தலைவர் பி.கங்காராவ், உடனடியாக ஆலையை மூட வேண்டும். நகரில் உள்ள அனைத்து ஆலைகளிலும் பாதுகாப்பு தணிக்கை நடததப்பட வேண்டும் என்றார்.

சமூக ஆர்வலரும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான இ.ஏ.எஸ். சர்மா, ’அயல்நாட்டு நிறுவனம் ஒன்று இந்தியாவில் எப்படி இவ்வளவு அலட்சியமாக ஆலையை நடத்த முடிகிறது. அதுவும் லாக்-டவுன் நாடு முழுதும் நடக்கும் போது இவர்கள் எப்படி அனுமதிக்கப்பட்டார்கள்? என்று சாடினார்.

இந்தியாவில் வர்த்தகம் சுலபம் என்பதற்காக அளிக்கப்படும் அனுமதிகள்:

இந்தியாவில் வணிகம் சுலபம் இங்கு வந்து முதலீடு செய்யுங்கள் இங்கு தொழில் நடத்துவது சுலபம் என்று கூறிக்கொண்டு மக்கள் உயிரைப் பணயம் வைப்பதாக சமூக ஆர்வலர்கள் விமர்சிக்கின்றனர், அயல்நாட்டு நிறுவனங்களுக்கு சுற்றுச்சூழல், வனத்துறை வானிலை மாற்ற அமைச்சகம் எளிதாக அனுமதி அளித்து விடுகின்றன. அதாவது இந்தியாவில் தொழில்களுக்குத் தடையில்லை என்பதை நிரூபிப்பதற்காக.

இந்நிலையில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சர்மா கேட்கிறார், “சுற்றுச்சூழல் விதிமுறைகளுக்கு இணங்காத இந்த நிறுவனத்துக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பாக எதற்காக விரிவாக்கம் செய்ய என்.ஓ.சி. வழங்கப்பட்டது?” என்று சாடினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x