Published : 07 May 2020 01:01 PM
Last Updated : 07 May 2020 01:01 PM
இந்தியாவின் பல மாநிலங்களிலும் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அனுமதி பெறாத நபர்கள் நுழைவதைத் தடுக்க ராஜஸ்தான் மாநிலம் அனைத்து அண்டை மாநில எல்லைகளுக்கும் சீல் வைத்துள்ளது.
ராஜஸ்தானில் கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3,317 ஆக அதிகரித்துள்ளதை அடுத்து இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 52 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இந்தியாவின் பல மாநிலங்களிலும் கரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து ராஜஸ்தான் மாநிலம் கடுமையான முடிவுகளை எடுத்துள்ளது. இதில் முக்கியமாக மாநில எல்லைகளை மூடுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.
முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் நடந்த மறுஆய்வுக் கூட்டத்துக்குப் பின்னர் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ரகு ஷர்மா, கூடுதல் தலைமைச் செயலாளர் (உள்துறை) ராஜீவா ஸ்வரூப், கூடுதல் தலைமைச் செயலாளர் (சுகாதாரம்) ரோஹித் குமார் மற்றும் பிற அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
ராஜஸ்தானில் நடந்த மறு ஆய்வுக் கூட்டத்தில் அசோக் கெலாட் கூறியதாவது:
''கடந்த சில நாட்களில் பல மாநிலங்களில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துள்ளது. கடந்த மூன்று நாட்களில் நாடு முழுவதும் சுமார் 10,000 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஏராளமான மக்கள் மாநிலத்திற்குள் அனுமதியின்றி நுழைந்து பதுங்குவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதைக் காணமுடிகிறது. இதைப் பற்றி தீர ஆராயப்பட்டதை அடுத்து மாநில எல்லைகளை மூடுவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த நெருக்கடி நேரத்தில் எங்கள் மக்களின் உயிரைப் பாதுகாப்பதே எங்கள் முன்னுரிமை.
உள்துறை அமைச்சகம் வழங்கிய வழிகாட்டுதல்களின்படி, மாநிலங்களுக்கு இடையேயான இயக்கம் அனுமதிக்கப்படும். அனைத்து வழிகாட்டுதல்களையும் பின்பற்றி மாநிலத்தின் முன் அனுமதி பெறுபவர்களுக்கு ராஜஸ்தான் செல்ல அனுமதிக்கப்படும் என்று பிற மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்குத் தெரிவிக்க தலைமைச் செயலாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அந்தந்த மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையுடன் ஒரு நபர் மாநிலத்திற்கு வெளியே செல்ல அனுமதிக்கப்படுவார். மருத்துவ அவசர நிலை அல்லது குடும்பத்தில் மரணம் ஏற்பட்டால், அதே நாளில் உள்துறை மூலம வழங்கப்பட வேண்டிய மின்-பாஸ் வழங்க ஆட்சியருக்கு உரிமை உண்டு.
வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்கள் 14 நாள் வீட்டுத் தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் விதிமீறலில் ஈடுபட்டால் அரசாங்க தனிமைப்படுத்தலின் கீழ் அவர்கள் வைக்கப்படுவார்கள். அவர்களுக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படும்''.
இவ்வாறு அசோக் கெலாட் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT