Published : 29 Aug 2015 08:40 AM
Last Updated : 29 Aug 2015 08:40 AM

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி மேலும் ஒருவர் தற்கொலை

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி கிருஷ்ணா மாவட்டத்தில் நேற்று மேலும் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.

ஆந்திர மாநில பிரிவினைக்குப் பின் தற்போது இந்த மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் எனும் பிரச்சனை தலைதூக்கி உள்ளது. இதற்காக பலர் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது.

கடந்த 11ம் தேதி திருப்பதியை சேர்ந்த முனி கோட்டி எனும் காங்கிரஸ் கட்சி தொண்டர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.

இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் நெல்லூர் கேசவ நகரை சேர்ந்த ராமிஷெட்டி லட்சுமய்யா (55) எனும் அரசு ஊழியர் ஒருவரும், மேற்கு கோதாவரி மாவட்டம், சிந்தலபுடி கிராமத்தை சேர்ந்த ராஜசேகர் (31) எனும் வாலிபரும் தற்கொலை செய்து கொண்டன‌ர்.

சோனியா மீது குற்றச்சாட்டு

இந்நிலையில் நேற்று கிருஷ்ணா மாவட்டம் விஜயவாடா அடுத்துள்ள குடிவாடா ராமாபுரம் பகுதியை சேர்ந்த ரேஷன் கடை உரிமையாளர் உதயபானு (40) என்பவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இவர் இறப்பதற்கு முன் கடிதம் எழுதி வைத்துள்ளார். அதில், ஆந்திர மாநிலத்தை அரசியல் நோக்கத்துக்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரித்துவிட்டார் எனவும், தற்போது பொருளாதார ரீதியாகவும், அனைத்து துறையிலும் முன்னேற மாநில பிரிவினை மசோதாவில் கூறியபடி சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே, இன்று (சனிக்கிழமை) மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டு மென வலியுறுத்தி ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் ஒரு நாள் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x