Published : 07 May 2020 09:54 AM
Last Updated : 07 May 2020 09:54 AM
விசாகப்பட்டிணம் கோபால்பட்டிணத்தில் உள்ள எல்.ஜி.பாலிமர்ஸ் ரசாயன ஆலையில் ஸ்டைரீன் என்ற ரசாயன வாயு கசிவினால் 3 கிமீ தூரம், 5 கிராமங்கள் பாதிக்கப்பட்டன. இதில் 5 பேர் பலியாகியுள்ளதாகக் கூறப்படுகிறது, சுமார் 200க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பலர் மூச்சுவிடச் சிரமம், மற்றும் வாந்தி ஆகியவற்றினால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது, சுமார் 1000 பேர் வரை இந்த வாயு தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இன்று அதிகாலை 2.30-3 மணியளவில் இந்த வாயுக்கசிவு ஏற்பட்டது. இதில் வெங்கடாபுரம், பத்மபுரம், பி.சி.காலனி, கம்பாபலேம் ஆகிய கிராம மக்கள் பாதிக்கப்பட்டனர்.
அதிகாலை 3 மணிக்கு சைரனில் போலீஸார் மக்களை எச்சரித்தனர். ஆம்புலன்ஸ்கள், ஆந்திர அரசுப் பேருந்துகள், போலீஸ் வேன்கள் மக்களை வெளியேற்ற பயன்பட்டன.
போலீஸ் கமிஷனர் ராஜிவ் குமார் மீனா கூறும்போது, “சுமார் 100 முதல் 200 பேருக்கு மூச்சுத் திணறல், வாந்தி ஏற்பட்டது. இவர்கள் நகரில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் இதுவரை யாரும் பலியானதாக அதிகாரப் பூர்வ தகவல்கள் இல்லை. ஆனால் 3 பேர் பலியானதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஸ்டைரீன் என்ற இந்த வாயுக் கசிந்துள்ளது, ஆனால் மக்களுக்கு ஒன்றும் தெரியவில்லை. குடியிருப்புப் பகுதிகளில் போலீசார் கதவுகளை உடைத்து வீட்டில் உள்ளவர்களை வெளியேற்றியுள்ளனர்.
2000 பேர் வெளியேற்றம்
வாயுக்கசிவினால் சுமார் 2000 பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர், பல ஊர்வாசிகள் தாங்களாகவே வெளியேறிவிட்டனர்.
மாவட்ட கலெக்டர் வி.வினய் சந்த், 300 படுக்கைகள் தயாராக இருப்பதாகவும் மக்கள் ஈரம் தோய்ந்த முகக்கவசம் அணியுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்றார்.
தேசியப் பேரிடர் குழு மக்களை வெளியேற்ற அங்கு விரைந்துள்ளனர்.
முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி இந்த வாயுக்கசிவு குறித்து விசாரிக்க விசாகப்பட்டிணத்துக்கு வரவிருக்கிறார். மாவட்ட ஆட்சியர் துரித நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT