Published : 07 May 2020 07:48 AM
Last Updated : 07 May 2020 07:48 AM

துப்பறியும் நிபுணர் ‘பெலூடா’ பெயரில் கரோனா வைரஸை விரைவாக கண்டறியும் சோதனை அறிமுகம்

புதுடெல்லி

கரோனா வைரஸ் தொற்றை விரைவாக கண்டறிய உதவும் சோதனை முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சோதனை முறைக்கு பிரபல துப்பறியும் கதாபாத்திரமான பெலுடாவின் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் பரவலை தடுக்க, நாடு முழுவதும் அதற்கான மருத்துவ பரிசோதனைகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், தொற்றை விரைவாகக் கண்டறிய உதவும் கரோனா பரிசோதனையை இந்திய அறிவியல் ஆராய்ச்சிக் கழகம் (சிஎஸ்ஐஆர்) கண்டுபிடித்துள்ளது.

மாசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம், கலிபோர்னியா பல்கலைக்கழகம் மற்றும் பெர்க்லிபல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் இதுபோன்ற ஒரு பரிசோதனைக்கு, ‘டிடெக்டர் ஷெர்லாக்' என்று பெயரிட்டுள்ளனர். அதேபோல், இந்தியாவில் சிஎஸ்ஐஆர் கண்டறிந்துள்ள பரிசோதனை முறைக்கு, 'பெலுடா' என பெயரிடப்பட்டுள்ளது. இது, மறைந்த பிரபல திரைப்பட இயக்குநர் சத்யஜித் ரே கதைகளில் வரும் துப்பறியும் நிபுணர் கதாபாத்திரத்தின் பெயர் என்பது குறிப்பிடத்தக்கது.

பேப்பர் ஸ்டிரிப் என்று அழைக்கப்படும் நீண்ட காகித துண்டில் இந்த சோதனை நடத்தப்படுகிறது. டாடா சன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்த பெலுடா சோதனை முறை அறிமுகம் செய்யப்படுகிறது. இதன்மூலம் விரைவாக கரோனா வைரஸ் தொற்றை கண்டறியலாம். இது முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே கண்டுபிடிக்கப்பட்ட சோதனை முறையாகும். அதிக அளவிலான சோதனைகளுக்கு இது உதவும்.

சிஎஸ்ஐஆர்-ன் ஐஜிஐபி ஆய்வகத்தில் இது உருவாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சிஎஸ்ஐஆர் தலைமை இயக்குநர் சேகர் சி.மான்டே கூறும்போது, “இந்த பெலுடா சோதனை முறைக்காக சிஎஸ்ஐஆர்-ஐஜிஐபி ஆய்வகம், டாடா சன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. விரைவில் இந்த சோதனை முறை அமலுக்கு வரும்” என்றார்.

கரோனா வைரஸ் தொற்று இருப்பதை பரிசோதனை மூலம் துரிதமாகக் கண்டறியும் ‘ரேபிட் டெஸ்ட் கிட்’ என்ற கருவி சரியாக வேலை செய்யாததால், அதில் பரிசோதனை நடத்த இந்தியா தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x