Published : 06 May 2020 08:21 PM
Last Updated : 06 May 2020 08:21 PM
65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, தொற்றும் தன்மை அல்லாத வேறு நோய்கள் இருந்தால் ஆயுஷ்மான் பாரத் சுகாதார, நல மையங்களில் முன்னுரிமை அடிப்படையில் மருத்துவப் பரிசோதனைகள் செய்ய வேண்டும் என மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் கோவிட்-19 மேலாண்மைக்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத் தேவையை சமாளிப்பதற்கான ஆயத்த நிலை குறித்து காணொலி மூலம் ஹர்ஷ் வர்த்தன் ஆய்வு செய்தார்.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன், குஜராத் துணை முதல்வர் மற்றும் சுகாதார அமைச்சர் நிதின்பாய் பட்டேல், மகாராஷ்டிரா சுகாதாரத் துறை அமைச்சர் ராஜேஷ் டோப்பே ஆகியோருடன் இன்று உயர்நிலை ஆய்வு நடத்தினார். மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே, மத்திய மாநில அரசுகளின் உயரதிகாரிகள் ஆகியோரும் இதில் பங்கேற்றனர். இந்த இரு மாநிலங்களிலும் கோவிட்-19 நோய்த் தாக்குதல் மேலாண்மைக்குத் தேவையான ஆயத்த நிலைகள் குறித்தும், தற்போதைய நிலவரம் குறித்தும் கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன் பேசியதாவது:
மாநிலங்களின் கோரிக்கையின் அடிப்படையில், மத்தியில் இருந்து அதிகாரிகளைக் கொண்ட கூடுதல் குழுக்கள் அனுப்பப்படும். டெல்லி எய்ம்ஸ் மூலம் கிடைக்கும் உதவியையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கோவிட்-19 பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பது குறித்து தேசிய தொலை மருத்துவ ஆலோசனை மையத்தின் மூலம் வழிகாட்டுதல் வசதி கிடைக்கிறது.
அந்த மையத்தில் டெல்லி எய்ம்ஸ் டாக்டர்கள், சிறப்பு நிபுணர்கள் நேரடியாக இருந்து ஆலோசனைகள் கூறுகின்றனர். இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நாட்டில் எந்தப் பகுதியில் இருந்தும் இந்த மையத்தைத் தொடர்பு கொள்வதற்கு ஒரே தொலைபேசி எண் (+91 9115444155) தரப்பட்டுள்ளது.
ஆரோக்கிய சேது செல்போன் செயலிபற்றியும், 1921 என்ற எண்ணுக்கு டயல் செய்து உடனே இணைப்பை துண்டிப்பதன் மூலம் மிஸ்டு கால் கொடுத்து ஆரோக்கிய சேது குரல்வழி ஆலோசனை வசதியைப் பெறுதல் குறித்தும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
சாதாரண கைபேசிகள் அல்லது தொலைபேசிகள் வைத்திருப்பவர்கள் அதற்கேற்ப இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, தொற்றும் தன்மை அல்லாத வேறு நோய்கள் இருந்தால் ஆயுஷ்மான் பாரத் சுகாதார, நல மையங்களில் முன்னுரிமை அடிப்படையில் மருத்துவப் பரிசோதனைகள் செய்ய வேண்டும் என மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT