Published : 06 May 2020 09:48 AM
Last Updated : 06 May 2020 09:48 AM
இந்தியாவைச் சேர்ந்த பொறியியல் சார் ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சிலின் பிரத்தியேகமான முன்முயற்சியின் கீழ் புகழ்பெற்ற இந்திய, சர்வதேச நிறுவனங்களைச் சேர்ந்த 40 பொருளாதார நிபுணர்களும் அறிஞர்களும் கொரோனா வைரஸ் தாக்குதலின் விளைவாக ஏற்பட்டுள்ள பொருளாதார, சமூக, அரசியல் ரீதியான தாக்கங்கள் குறித்த தங்கள் மதிப்பீடுகளை செய்துள்ளனர்.
இந்த வைரஸ் தாக்குதலுக்குப் பிந்தைய உலகத்தில் உலகமயமாதல் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ள நிலையில் சீனாவிற்கு மாற்றான உற்பத்தி மையமாக இந்தியா எவ்வாறு உருவெடுக்கக் கூடும் என்பது பற்றியும் அவர்களின் இந்த மதிப்பீடு ஆய்வு செய்துள்ளது.
ஊரடங்கின் விளைவாக ஏற்பட்டுள்ள சவால்கள், வர்த்தகத்தின் மீதான தாக்கம், ஏற்றுமதி மற்றும் சிறு, குறு தொழில்களின் மீதான பாதிப்பு, பொருளாதார ரீதியான அரசியல் முடிவுகளுக்கு ஏற்பட்டுள்ள சவால்கள் ஆகியவை குறித்த விரிவான ஆய்வின் அடிப்படையில் அமைந்த இந்தக் கட்டுரைகளின் தொகுப்பினை வளரும் நாடுகளுக்கான ஆராய்ச்சி மற்றும் தகவல் அமைப்பின் ஏசியன் – இந்தியா மையத்தின் கூட்டுறவோடு இந்தியாவின் பொறியியல் சார் ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் உருவாக்கியுள்ளது.
கரோனா வைரஸ் தாக்குதல்:
இந்தியப் பொருளாதாரத்திற்கான சவால்கள் – வர்த்தகம் மற்றும் வெளியுறவுக்கொள்கை மீதான தாக்கங்கள்” என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்தக் கட்டுரைத் தொகுப்பு இந்த நெருக்கடி இந்தியப் பொருளாதாரத்தின் மீது ஏற்படுத்தியுள்ள தாக்கத்தின் வீச்சை ஆய்வு செய்கிறது. ஏற்றுமதிக்கான கண்ணோட்டத்தில் பார்க்கும் போது இந்தத் தாக்கம் மேலோட்டமானதா? அல்லது ஆழமானதா? மீண்டெழுவதற்கான வாய்ப்புகள் உள்ளதா? போன்ற கேள்விகளை கட்டுரைகள் அலசி ஆராய்கின்றன. உலகளாவிய இந்த வைரஸ் தாக்குதலை எதிர்த்துப் போராடும் அதே நேரத்தில் வர்த்தகம் எதிர்கொள்ளும் உடனடியான சவால்கள், வருவாய் இழப்பு ஆகியவற்றை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்து பொருளாதார நிபுணர்கள், அறிஞர்கள் பலரும் தங்களது ஆழமான கருத்துக்களை இவற்றில் வெளிப்படுத்தியுள்ளனர்” என தங்களது கூட்டுப்பங்களிப்பு குறித்து எழுதுகையில் பொறியியல் சார் ஏற்றுமதி ஊக்குவிப்புக் கவுன்சிலின் நிர்வாக இயக்குநர் திரு. சுரஞ்சன் குப்தா மற்றும் வளரும் நாடுகளுக்கான ஆராய்ச்சி மற்றும் தகவல் அமைப்பின் பேராசிரியர் டாக்டர்.பிரபிர் டே ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர்.
கரோனா வைரஸ் தாக்குதல் குறித்த பல்வேறு வகையான சித்திரங்களை முன்வைக்கும் மதிப்பிற்குரிய இந்தப் பொருளாதார நிபுணர்களும், அறிஞர்களும் உலகின் புகழ்பெற்ற நிறுவனங்கள், பல்கலைக்கழகங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம், சர்வதேசப் பொருளாதார ஆராய்ச்சிக்கான இந்திய ஆராய்ச்சிக் கவுன்சில், சுற்றுச்சூழல் மற்றும் வனம் சார் அறிவியல்களுக்கான பள்ளி, வாஷிங்டன் பல்கலைக்கழகம், வெளிநாட்டு வர்த்தகத்திற்கான இந்திய நிறுவனம், மேலாண்மைக்கான இந்திய நிறுவனம், ஜாதவ்பூர் பல்கலைக்கழகம் ஆகியவையும் இவற்றில் அடங்கும்.
“இந்த வைரஸ் பரவும் வேகத்தை இதுவரை இந்தியா கட்டுப்படுத்தியுள்ள போதிலும் கொரோனா வைரஸ் தாக்குதலானது ஏற்கனவே நமது நாட்டின் வழக்கமான பொருளாதாரச் செயல்பாடுகள், வாழ்க்கைக்கான நடவடிக்கைகள் அனைத்தையும் சீர்குலைத்துள்ளது. இந்தியாவின் வர்த்தகம் மிக மோசமான பாதிப்பிற்கு ஆளாகியுள்ளது. மக்கள் திடீரென தங்கள் வருவாயை இழந்து நிற்கின்றனர். இதன் விளைவாக பொருள்களுக்கான தேவையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. இத்தகைய நிலையில் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கென கவர்ச்சிகரமான நிதி மற்றும் பண ஊக்கத்திட்டங்களை இந்தியா அறிவித்துள்ளது. இந்த வைரஸ் தாக்குதலானது வெளியுறவு மற்றும் வர்த்தக ரீதியான கொள்கைகளில் வலுவான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது” என வளரும் நாடுகளுக்கான ஆராய்ச்சி மற்றும் தகவல் அமைப்பின் தலைவரான டாக்டர் மோகன் குமார் கூறியுள்ளார்.
செயல்பாட்டாளர்களின் கள அறிக்கையைப் பகிர்ந்து கொண்ட வகையில் பொறியியல் சார் ஏற்றுமதி ஊக்குவிப்புக் கவுன்சிலின் தலைவர் திரு. ரவி சேகால் கூறுகையில், “தங்கள் நாட்டு வர்த்தகத்தைப் பாதுகாப்பதற்கான தற்காப்புக் கொள்கைகள், இறக்குமதிகளின் மீதான வரிவிதிப்புப் போட்டி, தன்னிச்சையான பொருளாதாரத் தடைகள், சர்வதேச வர்த்தக அமைப்பின் பேச்சுவார்த்தைகள் செயலற்றுப்போன நிலை, பொருளாதார, நிதி அமைப்புகளின் வலிமை தேய்ந்து கொண்டே போகும் நிலை, உலகத் தலைவர்களிடையே பரஸ்பர நம்பிக்கை, பட்டறிவு, முன்முயற்சி ஆகியவை வலுவற்றுப்போன நிலை ஆகியவை அதிகரித்துக் கொண்டே வந்த பின்னணியில் உலகளாவிய பொருளாதார ஒழுங்கு செயல்பட்டு வந்தது. இத்தகையதொரு மிக மோசமான தருணத்தில்தான் இந்த வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது.” என்று அவர் குறிப்பிட்டார்.
நமது நினைவிற்கு எட்டியவரையில் மிகவும் மோசமான உலகளாவிய நெருக்கடியை எவ்வாறு சமாளிப்பது என முயற்சிக்கும் அதே நேரத்தில், உலகத்தின் உயர்மட்டப் பொருளாதார நிபுணர்கள், அறிஞர்கள் ஆகியோரின் பல்வேறு வகையான கருத்துக்களையும், மதிப்பீடுகளையும் கவுன்சில் ஆழமாக ஆய்வு செய்யும் என அவர் கூறியதாகவும் பொறியியல் சார் ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் பத்திரிக்கைக் குறிப்பு தெரிவிக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT