Published : 06 May 2020 09:04 AM
Last Updated : 06 May 2020 09:04 AM
ஆந்திராவில் இதுவரை 1,717 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், வழக்கறிஞர் கிஷோர், உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுத்துள்ளார். அதில், “ஆளும் ஒய்எஸ்ஆர்காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்களான ரோஜா, மதுசூதன ரெட்டி, சஞ்சீவய்யா, வெங்கட கவுடு, விடதல ரஜினி ஆகியோர் கரோனா வைரஸ் தொற்று மேலும் பரவ காரணமாகி உள்ளனர்.
குறிப்பாக இவர்கள் தேசிய தொற்று நோய் நிவாரண சட்டத்தை மீறி பொதுமக்களை அதிக அளவில் ஒன்று கூடச் செய்து அவர்களுக்கு கரோனா தொற்றை பரப்பி உள்ளனர். எனவே, இந்த 5 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் விசாரணை நேற்று காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. அப்போது “யாராக இருந்தாலும் தேசிய தொற்று நிவாரண சட்டத்தை மீறக்கூடாது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 5 எம்எல்ஏக்களும் சுய விளம்பரத்திற்காக மக்களை ஒன்று திரட்டி உள்ளனர். இதுவரை அந்தஎம்எல்ஏக்களுக்கு கரோனாவைரஸ் தொற்று பரிசோதனை செய்யப்பட்டதா?, நிபந்தனைகளை மீறிய அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுத்ததா? என்பது குறித்து ஒரு வாரத்திற்குள் விளக்கம் அளிக்க வேண்டும்” என ஆந்திர அரசு, டிஜிபி, மற்றும் சம்மந்தப்பட்ட எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT