Published : 04 May 2020 03:15 PM
Last Updated : 04 May 2020 03:15 PM
கரோன வைரஸால் நாட்டில் மோசமாகப் பாதிக்கப்பட்ட டெல்லி உள்பட 9 மாநிலங்களில் இருக்கும் 20 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டு அந்த மாவட்டங்களுக்கு மத்திய சுகாதாரக் குழுவை மத்திய அரசு அனுப்புகிறது.
இந்த மத்திய சுகாதாரக் குழுவினர் மாநில அரசுகளின் சுகாதாரக் குழுவுக்குத் தேவையான உதவிகளைச் செய்து கரோனா வைரஸ் பரவலையும், பாதிப்பைும் கட்டுக்குள் கொண்டு வருவர்.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின்படி கரோனாவின் தாக்கம் அதிகமாக இருக்கும் 130 மாவட்டங்கள் சிவப்பு மண்டலங்களாகவும் குறைவாக இருக்கும் 284 மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலங்களாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன. கரோனா இல்லாத 319 பச்சை மண்டலங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில் சிவப்பு மண்டலங்களில் இருக்கும் 130 மாவட்டங்களில் 20 மாவட்டங்களில் கரோனாவி்ன் பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கணக்கின்படி, மகாராஷ்டிராவில் மும்பை, தானே, புனே, மத்தியப் பிரதேசத்தில் போபால், இந்தூர், குஜராத்தில் அகமதாபாத், சூரத், வதோதரா, டெல்லியில் தென்கிழக்கு டெல்லி, மத்திய மாவட்டம், ராஜஸ்தானில் ஜெய்ப்பூர், ஜோத்பூர், உத்தரப் பிரதேசத்தில் லக்னோ, ஆக்ரா, தெலங்கானாவில் ஹைதராபாத், தமிழகத்தில் சென்னை, மேற்கு வங்கத்தில் கொல்கத்தா, ஆந்திராவில் குர்னூல், குண்டூர், கிருஷ்ணா ஆகிய மாவட்டங்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த மாவட்டங்களுக்கு மத்திய சுகாதாரக் குழுவினர் விரைவில் அனுப்பப்பட உள்ளனர். இந்தக் குழுவில் தேசிய நோய்க் கட்டுப்பாட்டு மையம் (என்சிடிசி), எய்ம்ஸ், ஜிப்மர், அனைத்திந்திய பொதுநலம் மற்றும் சுகாதார அமைப்பு ஆகியவற்றிலிருந்து இடம் பெறுவார்கள். இவர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து நிலவரம், முன்னேற்றம் ஆகியவற்றைக் கண்டறிந்து மாநிலங்களின் கூடுதல் தலைமைச் செயலாளர், முதன்மைச் செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர் ஆகியோருக்கு அறிக்கைகளையும், பரிந்துரைகளையும் அனுப்புவார்கள்.
இந்த 9 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசங்களுக்குச் செல்லும் மத்திய சுகாதாரக் குழுவினர் மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் துணையுடன் செயல்படுவார்கள்.
இந்த 9 மாநிலங்கள், யூனியன் பிரதேசத்தில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் (12,974), குஜராத்தில் (5,428), டெல்லியில் (4,549), தமிழகத்தில் (3,023), மத்தியப் பிரதேசத்தில் (2,846), ராஜஸ்தானில் (2,886), மேற்கு வங்கத்தில் (963), உத்தரப் பிரதேசத்தில் (2,645), ஆந்திரப் பிரதேசத்தில் (1,583), தெலங்கானாவில் (1,082) நோயாளிகள் உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT