Published : 04 May 2020 01:17 PM
Last Updated : 04 May 2020 01:17 PM
கேரளத்தின் எர்ணாகுளம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் தனது முகாம் இல்லத்தில் வீட்டுத்தோட்டம் அமைத்திருக்கிறார். பொதுமுடக்க காலத்துச் சவாலாக பொதுமக்களும் வீட்டுத் தோட்டம் அமைக்க வேண்டும் என இவர் விடுத்த அழைப்பைத் தொடர்ந்து எர்ணாகுளம் மாவட்டத்தில் பலரும் இப்போது ஆர்வத்துடன் வீட்டுத்தோட்டங்களை அமைத்து வருகின்றனர்.
எர்ணாகுளம் புறநகர் மாவட்ட எஸ்.பி.யாக இருப்பவர் கார்த்திக். திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரத்தைப் பூர்விகமாகக் கொண்ட இவர், ஆலுவாவில் உள்ள தன் முகாம் இல்லத்தில் வீட்டுத் தோட்டம் அமைத்திருக்கிறார். இந்த பொதுமுடக்க சமயத்தில் இவரது வீட்டுக்கான காய்கனித் தேவையை இவரது வீட்டுத் தோட்டமே பூர்த்தி செய்து வருகிறது.
தனது மகன் ப்ரஜித் விநாயக் உடன் சேர்ந்து வீட்டுத் தோட்டத்தில் விளைந்த காய்கறிகளைப் பறிக்கும் புகைப்படத்தை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு வீட்டுத் தோட்ட சவாலுக்கும் அழைப்புவிடுத்தார் கார்த்திக். இதையடுத்து, இப்போது மாவட்டத்தில் நூற்றுக் கணக்காணோர் வீட்டுத்தோட்டம் அமைப்பதில் தீவிரம் காட்டிவருகின்றனர். இதை கேரள டிஜிபியான லோக்நாத் பெகாரா வெகுவாகப் பாராட்டியிருப்பதோடு, இதை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்று அனைத்து மாவட்டக் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறார்.
இதுகுறித்து எஸ்.பி கார்த்திக் 'இந்து தமிழ் திசை'யிடம் கூறுகையில், “நான் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன். ஐபிஎஸ் ஆகும் முன்பு விவசாய வேலையும் பார்த்திருக்கிறேன். எர்ணாகுளம் முகாம் இல்லத்துக்கு வந்த உடன் வீட்டின் பின்னால் இடம் இருப்பதைப் பார்த்துவிட்டு உடனே வீட்டுத் தோட்டம் அமைத்துவிட்டேன். எனது வீட்டுத் தோட்டத்தில் முட்டைக்கோஸ், புதினா, வெண்டை, கத்தரி, தக்காளி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, பச்சை மிளகாய், முடக்கத்தான் கீரை ஆகியவை இருக்கின்றன.
முழுக்க இயற்கைவழி வேளாண்மைதான் செய்கிறேன். ஆரோக்கியமான காய்கனிகளைச் சாப்பிட வேண்டும் என்னும் நோக்கத்தில் அமைக்கப்பட்ட வீட்டுத்தோட்டம், இந்த பொதுமுடக்க சமயத்தில் ரொம்பவும் கைகொடுத்து வருகிறது. என் வீட்டுத் தேவைக்கு வெளியில் இருந்து காய்கள் வாங்கவேண்டிய அவசியமே ஏற்படவில்லை.
பொதுமக்களுக்கும் வீட்டுத் தோட்டத்தின் அவசியத்தை உணர்த்தும் வகையில் விழிப்புணர்வுக்காக, காய் பறிக்கும் புகைப்படத்தை ‘வீட்டுத் தோட்ட சவால்’ என முகநூலில் பதிவிட்டேன். உடனே, ஏற்கெனவே வீட்டுத்தோட்டம் வைத்திருப்பவர்கள் அதன் முன் நின்று செல்ஃபி எடுத்து பதில் பதிவு போட்டனர். எஸ்.பி.யே பாராட்டுவது அவர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்தது. இன்னும் சிலரோ அவர்களும் தோட்டம்போட விரும்புவதாகவும், ஆனால், பொதுமுடக்கம் இருப்பதால் விதைகள் கிடைக்கவில்லை எனவும் வருத்தப்பட்டனர்.
உடனே, இதை வேளாண்மைத் துறையின் கவனத்துக்குக் கொண்டு சென்றேன். அவர்கள் 5,000 பாக்கெட் விதைகளைக் கொடுத்தார்கள். அதை என் ஆளுகைக்குட்பட்ட 34 காவல் நிலையங்களுக்கும் பிரித்துக் கொடுத்தேன். போலீஸார் எப்போதுமே ரோந்துப் பணியிலேயே இருப்பதால் அந்த, அந்தப் பகுதிகளில் ரோந்து சென்றபோது விதை கேட்ட மக்களிடம் விநியோகிக்கவும் முடிந்தது.
மாற்றம் நம்மில் இருந்துதான் வரவேண்டும். குறைந்தபட்சம் அவரவர் குடும்ப ஆரோக்கியத்தை முன்னிறுத்தியேனும் வீட்டுத் தோட்டம் அமைக்க வேண்டியதன் அவசியத்தை பொதுமுடக்கம் நமக்கு உணர்த்தியிருக்கிறது. பரபரப்பான பணிகளுக்கு மத்தியில் வீட்டுத்தோட்டத்தில் செலவழிக்கும் சில நிமிடங்கள் மனதுக்கும் இளைப்பாறுதலாக இருக்கிறது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT