Published : 04 May 2020 11:12 AM
Last Updated : 04 May 2020 11:12 AM
நாட்டிலேயே முதல் முறையாக ஆப்பிரிக்க ஸ்வைன் ஃப்ளூ வைரஸ் தாக்குதல் அசாமில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸால் இதுவரை 306 கிராமங்களில் 2,500 பன்றிகள் உயிரிழந்துள்ளன.
ஆப்பிரிக்க ஸ்வைன் ஃப்ளூ வைரஸுக்கும், கரோனாவுக்கும் தொடர்பில்லை என்ற போதிலும் இந்தியாவில் இந்த ஆப்பிரிக்க ஸ்வைன் ஃப்ளூ வைரஸ் கண்டுபிடிக்கப்படுவது இதுதான் முதல் முறை என்று அசாம் மாநில கால்நடை நலத்துறை அமைச்சர் அதுல் போரா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அசாம் மாநில கால்நடை நலத்துறை அமைச்சர் அதுல் போரா நிருபர்களிடம் கூறியதாவது:
''இந்தியாவிலேயே ஆப்பிரிக்க ஸ்வைன் ஃப்ளூ வைரஸ் முதல் முறையாக அசாமில் கண்டறியப்பட்டுள்ளது. 306 கிராமங்களில் இதுவரை 2,500க்கும் மேற்பட்ட பன்றிகள் உயிரிழந்துள்ளன. அதிவேகமாகப் பரவும் வைரஸ் என்பதால், இதைத் தடுக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மத்திய அரசுக்கும் இதுகுறித்துத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா வைரஸுக்கும், ஆப்பிரிக்க ஸ்வைன் ஃப்ளூவுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. அசாமில் கண்டறியப்பட்டது ஆப்பிரிக்க ஸ்வைன் ஃப்ளூ வைரஸ் என்பதை போபாலில் உள்ள தேசிய கால்நடை நோய்கள் உயர் ஆராய்ச்சி மையம் உறுதி செய்துள்ளது. இந்த நோயிலிருந்து பன்றிகளைக் காக்கும் முறை பற்றி வல்லுநர்களிடம் கேட்டுள்ளோம். இந்த நோய் தாக்கினால் பன்றிகள் இறப்பது 100 சதவீதம் உறுதியாகும். ஆதலால், மற்ற பன்றிகளை நோய் தாக்காமல் காப்பது அவசியம்
இந்த வைரஸ் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒரு கிலோ சுற்றளவுக்கு இருக்கும் அனைத்துப் பன்றிகளின் மாதிரிகளும் எடுக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. மேலும், அண்டை மாநிலங்களிலிருந்து எந்தவிதமான பன்றிகளும், கால்நடைகளும் கொண்டுவர வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
பன்றிகளின் இறைச்சி, எச்சில், ரத்தம், திசுக்கள் மூலம் இந்த வைரஸ் பரவும். இதுவரை மாவட்டங்களுக்கு இடையே பரவவில்லை.
இதே வைரஸ் கடந்த பிப்ரவரி மாதம் சீனாவில் கண்டறியப்பட்டது. கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சீனாவின் ஜியாங் மாநிலத்தில் அதாவது அருணாச்சலப் பிரதேசத்தின் எல்லையோரத்தில் இருக்கும் பகுதியில் முதன்முதலில் பரவியது. ஆதலால் அங்கிருந்து இந்த வைரஸ் வந்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். வழக்கமாக சாலையில் சுற்றித்திரியும் பன்றிகள்தான் இந்த வைரஸால் சாகும் என்ற நிலையில் பண்ணைகளில் வளர்க்கப்படும் பன்றிகளும் இறந்துள்ளன.
இந்த வைரஸால் மனிதர்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்பதால் அச்சப்படத் தேவையில்லை. இருப்பினும் விவசாயிகளும் பண்ணை வளர்ப்போரும் பீதியடைந்துள்ள நிலையில் அவர்களுக்கு விழிப்புணர்வு ஊட்டப்படும். 13 மாவட்டங்களில் இந்தப் பணிகள் நடக்க உள்ளன''.
இவ்வாறு அதுல் போரா தெரிவித்தார்.
கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் பணியில் அசாம் மாநில அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், ஆப்பிரிக்க ஸ்வைன் ஃப்ளூ வைரஸ் தாக்குதல் மேலும் அந்த மாநில அரசுக்குப் புதிய சோதனையாக அமைந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT