Published : 04 May 2020 07:56 AM
Last Updated : 04 May 2020 07:56 AM
கரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை சமாளிக்கும் வகையில், தனது மாநிலஅமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களின் ஊதியத்தில் 30 சதவீதத்தை குறைத்தார் முதல்வர் யோகி ஆதித்யநாத். மேலும் எம்.எல்.ஏ.க்களின் தொகுதி வளர்ச்சி நிதி ஒரு வருடத்திற்கு நிறுத்திவைப்பு, அரசு அதிகாரிகள், அலுவலர்களின் அகவிலைப்படி ஒன்றரை வருடங்களுக்கு நிறுத்திவைப்பு மற்றும் அரசு அதிகாரிகள் ஊதியத்தின் 6 வகையான சலுகைகள் நிறுத்தி வைப்பு என சிலகடினமான முடிவுகளை உத்தரபிரதேச அரசு எடுத்திருந்தது.
இதற்கிடையே, கோடை விடுமுறைக்காக பல அதிகாரிகள் அரசுசெலவில் சுற்றுலா செல்ல அனுமதிபெற்றிருந்தனர். முன்கூட்டியே பெறப்பட்ட இந்த அனுமதிகள் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் மாவட்ட அளவிலான கூட்டங்களை காணொலி காட்சிகள் மூலம் மட்டும் நடத்தவேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது.
இதற்காக நடப்பு நிதி ஆண்டில்உத்தரபிரதேச அரசு ரூ.672.28 கோடிஒதுக்கி இருந்தது. அரசு அலுவலர் மற்றும் அதிகாரிகளின் பயிற்சிகளும் நிறுத்தி வைக்கப்பட்டு அதன்மூலம் ரூ.181.68 கோடி சேமிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சிக்கன நடவடிக்கைகளால் உத்தரபிரதேச அரசுக்கு சுமார் ரூ.900 கோடி சேமிக்கப்பட்டிருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் உத்தரபிரதேச அரசுஅதிகாரிகள் வட்டாரம் கூறும்போது, "அரசு அலுவலகங்களில் மேஜை, நாற்காலிகள் மற்றும் இதரதேவைகளுக்கான செலவு ரூ.130.32கோடி ஆகும். அதேபோல, அரசுஅதிகாரிகள் மற்றும் அலுவலர்களின் பணிமாற்றங்களாலும் ஆண்டுக்கு ரூ.130 கோடி செலவு ஏற்படும். கரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் இவ்விரண்டிலும் பெரும்பாலான தொகையை சேமிக்க அரசு திட்டமிடுகிறது" என்றனர்.
நாட்டின் மிகப்பெரிய மாநிலங்களின் ஒன்றான உத்தரபிரதேச மாநிலத்தில் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் பொருளாதார நெருக்கடி அதிகம் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு துறைகளில் ஏற்படும் இழப்பை உத்தரபிரதேச அரசு இப்போதே கணக்கிடத் தொடங்கி உள்ளது. இதன் காரணமாகவே பல்வேறு சிக்கன நடவடிக்கைகளில் அம்மாநில அரசு இறங்கி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT