Published : 04 May 2020 07:08 AM
Last Updated : 04 May 2020 07:08 AM

ரூ.400 மதிப்புள்ள நொறுக்குத் தீனிக்காக ரூ.2.22 லட்சத்தை இழந்த மும்பை தொழிலதிபர்

மும்பை

மும்பை புறநகர் பகுதி போரிவலியைச் சேர்ந்த 40 வயதான தொழிலதிபர் ஒருவர், ஆன்லைனில் உணவுப் பொருட்கள் ஆர்டர் செய்திருக்கிறார். டெலிவரி செய்யப்பட்ட பிறகு அவற்றில் ரூ.400 மதிப்புள்ள 2 நொறுக்குத் தீனி பாக்கெட்டுகள் குறைந்திருக்கின்றன. அதுபற்றி விசாரிக்க அந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்பு கொள்ள முயற்சித்திருக்கிறார்.

சேவை மைய தொடர்பு எண்ணை கூகுளில் தேடி தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அந்த எண் இணைய மோசடியில் ஈடுபடுபவர்கள் அந்நிறுவனத்தின் பெயரில் பதிவேற்றிய போலி தொடர்பு எண்ணாகும். அந்த எண்ணை தொடர்பு கொண்ட தொழிலதிபரிடம் மோசடி நபர், லாவகமாக பேசி வங்கி விவரங்களை வாங்கியுள்ளார். வங்கிக் கணக்கு எண், பதிவு செய்யப்பட்ட மொபைல் எண், ஏடிஎம் கார்டு எண், சிவிவி எண் என யாருக்கும் பகிர கூடாத அனைத்து விவரங்களையும் கொடுத்திருக்கிறார்.

பின்னர் மோசடி நபர் இவரது எண்ணுக்கு லிங்க் ஒன்றை அனுப்பி அதை வேறு எண்ணுக்கு அனுப்புமாறு கூறியிருக்கிறார். பின்னர் தொழிலதிபரின் எண்ணுக்கு வந்த ஒன் டைம் பாஸ்வேர்டையும், அவரது யுபிஐ பரிவர்த்தனை ரகசிய எண்ணையும் கேட்டிருக்கிறார். அவற்றையும் தொழிலதிபர் வழங்க, அவரது கணக்கில் இருந்து ரூ.2.25 லட்சத்தை எடுத்திருக்கிறார்கள்.

இதுதொடர்பாக தொழிலதிபர்புகார் அளிக்க எப்ஐஆர் பதிவுசெய்யப்பட்டுள்ளது. ஆனால், இணைய மோசடி புலனாய்வு அதிகாரி ரிதேஷ் பாட்டியா இதுகுறித்து கூறுகையில், “இந்த ஊரடங்கு காலத்தில் இதுபோன்ற மோசடிகள் நடக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. மக்கள் கவனமாக இருக்க வேண்டும். ஆனால், எவ்வளவுதான் விழிப்புணர்வு கொடுத்தாலும், பல மோசடி செய்திகள் வந்தாலும் தொடர்ந்து எப்படிதான் ரகசிய விவரங்களைப் பகிர்கிறார்கள் என்பதுதான் புரியவில்லை” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x