Last Updated : 03 May, 2020 04:59 PM

1  

Published : 03 May 2020 04:59 PM
Last Updated : 03 May 2020 04:59 PM

தமிழக அரசின் அனுமதிக்காக 3 பேருந்துகளுடன் 2 தினங்களாக வாரணாசியில் காத்திருக்கும் தமிழர்கள்

புதுடெல்லி

கரோனாவால் வெளிமாநிலங்களை சிக்கியவர்களை ஊருக்கு அனுப்ப மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இதன்படி, தமிழக அரசின் அனுமதிக்காக 3 பேருந்துகளுடன் 2 தினங்களாக 66 தமிழர்கள் காத்திருக்கின்றனர்.

உத்திரப்பிரதேசத்தின் தெய்வீகத்தலமான வாரணாசியில் இருப்பது காசி விஸ்வநாதர் கோயில். தமிழகத்தில் இருந்து புனிதயாத்திரைக்கு வந்த சுமார் 600 தமிழர்கள் இந்நகரில் சிக்கியுள்ளனர்.

கடந்த மார்ச் 20 முதல் வாரணாசியின் குமாராசமி மடம், ஸ்ரீகாசி நாட்டுக்கோட்டை நகரச்சத்திரம், கவுடியா மடம் உள்ளிட்டப் பல்வேறு பகுதிகளில் தங்கியுள்ளனர். இவர்களுக்கு குமாரசாமி மடம், நாட்டுக்கோட்டை சத்திரம் மற்றும் வாரணாசி அரசு நிர்வாகம் ஆகியவை உதவுடன் அன்றாடம் உணவு வழங்கப்படுகிறது.

இவர்களில் கடந்த ஏப்ரல் 14 இல் 127 தமிழர்கள் 3 பேருந்துகளில் கிளம்பி சென்னை வந்து சேர்ந்தனர். இவர்கள் அனைவரும் திருவள்ளூர் மாவட்டத்தில் கரோனா மருத்துவப் பரிசோதனை செய்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களில் மேலும் 22 புதுச்சேரி தமிழர்கள் நேற்று மதியம் ஒரு பேருந்தில் கிளம்பி வழியில் உள்ளனர். இந்தப் பட்டியலில் மேலும் 3 பேருந்துகளில் செல்ல 66 தமிழர்கள் தயாராக உள்ளனர்.

இவர்களது விவரங்கள் அனைத்தும் இருதினங்களுக்கு முன் தமிழக அரசிற்கு வாரணாசி மாவட்ட ஆட்சியர் அனுப்பியிருந்தார். இதை பெற்ற தமிழக அரசின் பொறுப்பு அதிகாரியின் அலுவாகம் பரிசீலனை செய்து ‘லாக்டவுன் பாஸ்’ வழங்க அனுமதி அளிப்பதாகக் கூறி இருந்தது.

இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் தமிழர்களான உபி மாநில அதிகாரிகள் வட்டாரம் கூறும்போது,

‘இப்பணிக்காக தமிழர்களாக இரு உயர் ஐஏஎஸ் அதிகாரிகள் தமிழகத்தின் பொறுப்பு அலுவலகத்தின் தொடர்பில் இருந்தனர்.

திடீர் என நேற்று காலையில் இருந்து அவர்களிடம் எந்த பதிலும் வரவில்லை. அனைவரையும் கிளம்பிச் செல்ல தமிழக அரசு அனுமதி வழங்கிய பிறகு தான் வாரணாசி நிர்வாகம் லாக்டவும் பாஸ் வழங்கும்.’ எனத் தெரிவித்தனர்.

மூன்று தினங்களுக்கு முன் மத்திய அரசு சார்பில் வெளிமாநிலங்களை சிக்கியவர்கள் தம் ஊர் திரும்பலாம் என்ற அறிவிப்பு வெளியானது. இதனால், உடனடியாக தமக்கும் அனுமதி கிடைத்து விடும் என வாரணாசியில் சிக்கிய தமிழர்க நம்பியிருந்தனர்.

இதற்காக, 3 பேருந்துகளையும் தமது செலவில் வாடகைக்கு பேசியும் கிளம்பும் நிலையில் தயாராக உள்ளன. இதன்மூலம், தம் வீடுதிரும்ப உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் முதியவர்கள் ஆவர்.

இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் ஸ்ரீநாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரத்தில் சிக்கியவர்களில் சிலர் கூறும்போது, ‘காங்கிரஸ் எம்.பியான கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட பலரின் மூலமாகவும் எங்கள் காத்திருப்பு தகவல், தமிழக முதல்வர் கவனத்திற்கு சென்று விட்டது.

வெளிமாநிலங்களில் சிக்கிய ராஜஸ்தான், மபி, உபி உள்ளிட்டவர்கள் தம் வீடு திரும்பும் செய்தி 2 தினங்களாக வெளியாகி வருகிறது. தில் தமிழக அரசு மட்டும் தம் தமிழர்களை திரும்ப அழைப்பதில் தாமதிப்பது ஏன் எனப் புரியவில்லை.’ எனத் தெரிவித்தனர்.

இதனிடையே, உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் சொந்த மாவட்டமான கோரக்பூரிலும் 32 தமிழர்கள் சிக்கியுள்ளனர். இவர்களுக்காகவும் 2 பேருந்துகள் தயார்செய்யப்பட்டு தமிழக அரசின் அனுமதிக்காகக் காத்திருக்கிறது.

தற்போது இருதினங்களாக தமிழக அரசிடம் இருந்து எந்த தகவலும் வராமையால் உபியில் சிக்கிய தமிழர்களில் பலரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஏனெனில், அனைவரும் சுமார் 1900 கி.மீ தொலைக் கடக்க, குறைந்தது 4 தினங்கள் பேருந்துகளில் பயணம் தேவைப்படும்.

இவர்கள் தமிழக எல்லையில் நுழைந்ததும், கரோனா மருத்துவப் பரிசோதனை அனைவருக்கும் செய்யப்படும்.

அதன் பிறகு கரோனா தொற்று இல்லை என்றாலும் அனைவரும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவர்.

அதன் பிறகே அனைவரும் தம் வீடு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். இச்சூழலில், வாரணாசியில் சிக்கிய தமிழர்களில் மேலும் சுமார் 400 பேர் மிஞ்சியுள்ளனர். தற்போது மூன்றாவது முறையாக லாக்டவுன் நீட்டிக்கப்பட்ட நிலையில், இவர்களும் தமிழகம் திரும்பும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x