Published : 03 May 2020 08:07 AM
Last Updated : 03 May 2020 08:07 AM
கரோனா போராளிகளுக்கு நன்றி தெரிவிக்கும் முப்படையினரின் திட்டத்துக்கு பிரதமர் மோடியும் அமைச்சர் அமித் ஷாவும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத்நேற்று முன்தினம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது ராணுவத் தளபதி எம்.எம்.நரவனே, விமானப்படைத் தளபதி ஆர்.கே.எஸ். பதாவ்ரியா, கடற்படைத் தளபதி கரம்பிர் சிங் ஆகியோரும் உடன் இருந்தனர்.
அப்போது பிபின் ராவத் கூறும்போது, “கரோனா வைரஸ் பரவல் தடுப்பு, பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நாட்டு மக்கள்ஆதரவாக இருந்து வருகின்றனர். இதுபோல, இப்பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள், காவல் துறையினர், ஊடக துறையினர் உள்ளிட்டோருக்கு முப்படைகளின் சார்பில், நன்றி தெரிவிக்க விரும்புகிறோம்.
இதன்படி, ஞாயிற்றுக்கிழமை (இன்று) விமானப்படையினரின் சாகசம் நடைபெறும். கடற்படை கப்பல்கள் மின் விளக்குகளால் ஜொலிக்க உள்ளன. ராணுவத்தினர் பேண்டு வாத்தியங்கள் இசைக்கஉள்ளனர். மேலும் மருத்துவமனைகள் மீது பூ இதழ்கள் தூவப்படும்” என்றார்.
இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் அடுத்தடுத்த பதிவுகளில் கூறியிருப்பதாவது:
கரோனா வைரஸுக்கு எதிராக நம் நாடு கடுமையாக போரிட்டு வருகிறது. இதில் துணிச்சலான மருத்துவ பணியாளர்கள் முன் வரிசையில் நின்று போரிட்டு வருகிறார்கள். அவர்கள் மிகவும் சிறப்பானவர்கள். அவர்களையும் அவர்களுடைய குடும்பத்தினரையும் நாட்டு மக்கள் பாராட்டுகின்றனர்.
நம் நாட்டை எப்போதும் பாதுகாக்கும் பணியில் முப்படை வீரர்கள் விழிப்புடன் உள்ளனர். மேலும்பேரிடர் காலங்களிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்கள் உதவி வருகின்றனர். அந்த வகையில், கரோனா வைரஸிலிருந்து நாட்டைவிடுவிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள போராளிகளுக்கு புதுமையான முறையில் நன்றி தெரிவிக்க நமது முப்படையினர் திட்டமிட்டுள்ளனர். இதற்காக அவர்களுக்கு நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
இதுகுறித்து மத்திய உள்துறைஅமைச்சர் அமித் ஷா ட்விட்டரில் கூறும்போது, “கரோனா போராளிகளுக்கு நன்றி தெரிவிக்கும் முப்படையினரின் முடிவு வரவேற்கத்தக்கது. இதன் மூலம் மருத்துவர்கள், சுகாதாரம் மற்றும் துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு மன உறுதியும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். இந்த இக்கட்டான தருணத்தில், கரோனா போராளிகளுக்கு நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து நன்றி தெரிவிப்போம்” என பதிவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT