Published : 02 May 2020 06:02 PM
Last Updated : 02 May 2020 06:02 PM
கேரளத்தின் கார்த்திகாயினி பாட்டிக்கு அவ்வளவு அறிமுகம் தேவையில்லை. 95 வயதில் இடைநின்ற கல்வியை மீண்டும் பயின்று இந்திய அளவில் பிரபலம் ஆனவர். இந்த ஆண்டு மகளிர் தினத்தில், மத்திய அரசால் பெண்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான ‘நாரிசக்தி புரஸ்கார்’ விருதை கார்த்திகாயினி பாட்டிக்கு வழங்கி கவுரவித்தது மத்திய அரசு.
விருதினைப் பெறுவதற்காக டெல்லி சென்ற கார்த்திகாயினியிடம் பிரதமர் நரேந்திர மோடியும் ஆசி பெற்றார். அந்த கார்த்திகாயினி பாட்டி, இப்போது தனது இரண்டு மாத முதியோர் உதவித் தொகையை கேரள முதலமைச்சரின் கரோனா நிவாரண நிதிக்குத் தந்து மீண்டும் கவனம் ஈர்த்துள்ளார்.
படித்தவர்கள் அதிகம் நிறைந்த மாநிலமான கேரளத்தில், கடந்த 2011-ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி 18.5 லட்சம் பேர் கல்வியறிவு அற்றவர்களாக உள்ளனர். இந்த நிலையை மாற்றி, அனைவரையும் படிப்பறிவில் மிளிரச் செய்யும் வகையில் கேரள எழுத்தறிவு இயக்கம் தீவிரமாகச் செயலாற்றி வருகிறது. அதன் மூலம் கல்வி கற்றவர்தான் கார்த்திகாயினி. இந்த வயதிலும் படித்ததை நினைவில் வைத்துத் தேர்வு எழுதி, நல்ல மதிப்பெண்ணும் பெற்று முத்திரை பதித்தார். காமன்வெல்த் அமைப்பின் கற்றல் நல்லெண்ணத் தூதராகவும் இருக்கிறார் கார்த்திகாயினி பாட்டி.
தான் உண்டு... தனது படிப்புண்டு எனத் தொடர்ந்து படிப்பில் மட்டுமே கவனம் செலுத்திவந்த கார்த்திகாயினி பாட்டியைக் கரோனா நோய் குறித்த பரவலான செய்திகளும், அதனால் ஏற்பட்டிருக்கும் கேரளத்தின் பொருளாதாரச் சேதங்களும் ரொம்பவே சங்கடப்படுத்தின. உடனே, கேரள உள்ளாட்சித்துறை அமைச்சர் மொய்தீனைத் தொடர்புகொண்டு கேரள முதலமைச்சரின் கரோனா நிவாரணத்துக்குத் தனது பங்களிப்பை வழங்குவதாகவும், ’அது குறைவான தொகை... ஆனால் என்னால் முடிந்த தொகை’ என்று தயங்கியபடியே சொல்லியிருக்கிறார். கார்த்திகாயினி பாட்டியின் சேவை மனப்பான்மையை ஊக்குவிக்கும் விதத்தில் அடுத்த சிலநிமிடங்களில் அவரது வீட்டுக்கே போய் நிதியைப் பெற்றார் அமைச்சர் மொய்தீன்.
அப்போது கார்த்திகாயினி பாட்டி, தனது இரண்டு மாத முதியோர் உதவித் தொகையான 3,000 ரூபாயை அமைச்சரிடம் கொடுத்தார். அமைச்சர் மொய்தீன், டெல்லியில் கார்த்திகாயினி பாட்டிக்கு வழங்கப்பட்ட நாரிசக்தி புரஸ்கார் விருதைப் பார்வையிட்டு அந்த அனுபவங்கள் குறித்தும் அவருடன் நீண்டநேரம் உரையாடினார்.
95 வயது கார்த்திகாயினி பாட்டியின் சேவை மனம், மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT