Published : 02 May 2020 04:46 PM
Last Updated : 02 May 2020 04:46 PM
விடுதி அறைகளைக் காலி செய்துவிட்டு மாணவர்கள் உடனடியாக வீடு திரும்ப வேண்டும் என்று டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்தியாவில் கரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் இதுவரை 37, 336 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லி நகரத்தில் மட்டும் கரோனா பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை 3738.
இந்நிலையில் நாளுக்கு நாள் கரோனா பரவல் அதிகம் இருப்பதால் விடுதியிலிருந்து வெளியேறி, மாணவர்கள் தங்கள் சொந்த வீடுகளுக்கு செல்லுமாறு டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.
டெல்லி ஜாமியா மிலியா இஸ்லாமியப் பல்கலைக்கழகம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
''புதிய கல்வி அமர்வு செப்டம்பர் மாதம் முதல் தொடங்கும். எனவே, மாணவர்கள் விடுதி அறைகளைக் காலி செய்துவிட்டு வீடுகளுக்குத் திரும்ப வேண்டும். மாநில அரசுகளின் இடமாற்றம் மற்றும் பயண நெறிமுறைகளின் ஏற்பாட்டின்படி தங்குமிடங்களை விட்டு உடனடியாக சொந்த ஊர்களுக்குப் புறப்படத் தயாராகுங்கள்.
கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் பல்கலைக்கழகம் மூடப்பட்டது. வழக்கமான மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதத்தில் அதேநேரத்தில் புதிய கல்வி அமர்வு செப்டம்பர் முதல் தொடங்கும்.
தற்போது டெல்லியிலிருந்து வெவ்வேறு மாநிலங்களுக்கு மாணவர்கள் திரும்பிச் செல்ல போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தங்கள் வீடுகளுக்குச் செல்ல முடியாமல் விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்கள் இந்த சந்தர்ப்பத்தில் விடுதிகளைக் காலி செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பல்கலைக்கழகத்தின் அருகாமையில் உள்ள பகுதிகள் ஹாட் ஸ்பாட்களாக அறிவிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன.
எதிர்காலத்தில் தளவாடங்கள் மற்றும் மனிதவளத் தேவைகளைப் பராமரிப்பது பல்கலைக்கழகத்திற்குக் கடினம். சுத்திகரிப்பு, பராமரிப்பு மற்றும் தொடர்ச்சியான தனிமைப்படுத்தும் வசதிகளுக்காகவும் விடுதிகள் தேவைப்படுகின்றன. எனவே, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் விடுதிகளை முழுமையாகக் காலி செய்ய வேண்டும்''.
இவ்வாறு ஜாமியா மிலியா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT