Published : 02 May 2020 03:42 PM
Last Updated : 02 May 2020 03:42 PM
வளைகுடா நாடுகள், பிரிட்டன், அமெரிக்கா ஆகியவற்றில் கரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக சிக்கியிருக்கும் இந்தியர்களை தாயகம் அழைத்து வர மிகப்பெரிய திட்டத்தை மத்திய அரசு உருவாக்கி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த மிகப்பெரிய மீட்புத் திட்டத்தில் இந்திய விமானப் படை, கப்பல் படை, ஏர் இந்தியா விமானங்கள் மூன்றும் ஈடுபட உள்ளன என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கரோனா வைரஸ் பரவல் காரணமாக வளைகுடா நாடுகள், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பணி நிமித்தமாக, சுற்றுலாவுக்காகச் சென்றுள்ள இந்தியர்கள் தாயகம் திரும்ப முடியாமல் சிக்கியுள்ளனர். கரோனாவில் இந்தியர்கள் ஏராளமானோர் வேலையிழந்தும், சிலரின் விசா காலம் முடிந்தும் இந்தியாவுக்குத் திரும்ப முடியாமல் வெளிநாடுகளில் சிக்கியுள்ளனர்.
இவர்களை அழைத்து வர மிகப்பெரிய அளவில் மீட்புத் திட்டத்தை மத்திய அரசு தயார் செய்து வருகிறது. இதுகுறித்து பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் கூறுகையில், “மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்துடன் இணைந்து மிகப்பெரிய மீட்புப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்த மீட்புப் பணி எப்போது நடக்கும், யாரெல்லாம் மீட்கப்பட உள்ளார்கள், எத்தனை பேர் அழைத்துவரப் பட உள்ளார்கள் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அடுத்த வாரத்தில் முடிவு செய்யப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்திய விமானப்படையில் இருக்கும் அமெரிக்க விமானமான சி-130 ஹெர்குலஸ், சி-17 குளோப் மாஸ்டர் , ரஷ்யாவின் ஐஎல்-76 விமானம் ஆகியவை சமீப காலங்களாக மீட்புப்பணியில் சிறப்பாக ஈடுபட்டுள்ளன. இவை மீண்டும் களத்தில் இறக்கப்படலாம்.
பல்வேறு நாடுகளில் சிக்கி இருக்கும் இந்தியர்களை மீட்பது குறித்து அந்தந்த நாடுகளுடனும் மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. வளைகுடா நாடுகளில் மட்டுமல்லாமல் அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய நாடுகளிலும் சிக்கி இருக்கும் இந்தியர்களும் மீட்கப்பட உள்ளனர்.
இந்தியர்கள் தாயகம் அழைத்துவரும் முன் அவர்களுக்கு முழுமையாக கரோனா பரிசோதனை செய்யப்படுவது அவசியம். ஆனால், இவர்களை இந்திய மருத்துவர்கள் குழுவினர் பரிசோதிப்பார்களா அல்லது கரோனா இல்லை என்று அந்த நாடுஅளித்த மருத்துவச் சான்று போதுமானதா என்பதும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதேசமயம் தாயகம் அழைத்து வரும் இந்தியர்கள் அனைவரும் இந்தியா வந்ததும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்ட பின்னரே சொந்த மாநிலங்களுக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் தெரிகிறது. இந்தத் திட்டத்துக்காக எந்தெந்த நாட்டில் தங்கள் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் சிக்கியிருக்கிறார்கள் என்ற பட்டியலையும் தயார் செய்ய மாநில அரசுகளிடம் மத்திய அரசு கேட்டுள்ளது. அதற்கான பணியிலும் மாநில அரசுகள் ஈடுபட்டுள்ளன .
இதுகுறித்து இந்தியாவுக்கான குவைத் தூதர் ஜஸீம் அல் நஜீம் வெளியிட்டஅறிக்கையில், “ இந்தியாவில் சிக்கியிருந்த குவைத் நாட்டு மக்களுக்கு தேவையான உதவிகளைச் செய்து, பாதுகாப்பாக அனுப்பி வைத்த இந்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கிறோம். மேலும், 15 மருத்துவர்கள் கொண்ட குழுவை அனுப்பிவைத்தும், 2 டன் மருந்துப் பொருட்கள், மருத்துவக் கருவிகளை கடந்த ஏப்ரல் 11-ம் தேதி அனுப்பியும் கரோனா பாதிப்பு நேரத்தில் இந்தியா உதவியுள்ளது.
இந்திய மருத்துவர்கள் இரு வாரங்கள் குவைத் மருத்துவர்களுடன் சேர்ந்து பணியாற்றினார்கள். தொடர்ந்து மருந்துகள், மாத்திரைகள், பழங்கள், அனுப்பி வரும் இந்திய அரசின் நட்பை நினைத்துப் பெருமைப்படுகிறோம்.
குவைத்தில் சிக்கி இருக்கும் இந்தியர்கள், சட்டவிரோதமாக தங்கி இருக்கும் இந்தியர்களைப் பத்திரமாக மீட்டு அனுப்பி வைக்கத் தேவையான அனைத்து உதவிகளை குவைத் அரசு வழங்கும். எங்களின் சொந்த செலவிலேயே இந்தியர்களை இந்தியாவுக்கு அனுப்பி வைப்போம். அதேபோல லாக் டவுன் முடிந்து இந்தியா செல்ல விரும்பும் இந்தியர்களை தாயகம் அழைத்துச் செல்லும் இந்திய அரசின் திட்டத்துக்கும் நாங்கள் ஒத்துழைப்போம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT