Published : 02 May 2020 01:08 PM
Last Updated : 02 May 2020 01:08 PM
டெல்லி சிறுபான்மை ஆணையத்தின் தலைவர் ஜபருல் இஸ்லாம் கான் சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்தைப் பதிவிட்டதால் அவர் மீது டெல்லி போலீஸ் சிறப்புப் பிரிவு தேசத்துரோக வழக்குப் பதிவு செய்துள்ளது.
இதுகுறித்து டெல்லி சிறப்புப் பிரிவு போலீஸார் தரப்பில் கூறுவதாவது:
“கடந்த செவ்வாய்க்கிழமை, சிறுபான்மை ஆணையத்தின் தலைவர் ஜபருல் இஸ்லாம் கான் சமூக வலைதளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைப் பதிவிட்டார். இந்தக் கருத்துக்கு பல்வேறு தரப்பிலும் கண்டனங்கள் வந்ததால் சில மணிநேரங்களில் அதை நீக்கிவிட்டார்.
ஆனால், வசந்த் குஞ்ச் பகுதியைச் சேர்ந்த ஒருவர் ஜபருல் இஸ்லாம் கான் மீது போலீஸில் புகார் அளித்தார். அதில் இரு சமூத்தினரின் ஒற்றுமையைக் குலைக்கும் வகையில், பகைமை ஏற்படுத்தும் வகையில் திட்டமிட்டு ஒரு கருத்தை ஜபருல் இஸ்லாம் பதிவிட்டுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, இவ்வழக்கு டெல்லி சிறப்பு போலீஸாரின் சைபர் பிரிவுக்கு மாற்றப்பட்டது. அந்தப் புகாரின் அடிப்படையில் ஜபருல் கான் மீது கடந்த மாதம் 30-ம் தேதி ஐபிசி பிரிவு 124(ஏ), 153(ஏ) ஆகிய இரு பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கை சைபர் பிரிவு விசாரித்து வருகிறது”.
இவ்வாறு டெல்லி சிறப்புப் பிரிவு போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சிறுபான்மை ஆணையத்தின் தலைவர் ஜபருல் இஸ்லாம் கான் தனது சமூக வலைதளப் பதிவுக்கு மன்னிப்பு கோரினார். இருப்பினும் அவரை அந்தப் பதிவியிலிருந்து நீக்கி வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என பாஜக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
ஜபருல் கான் விடுத்த அறிவிப்பில், “நாடு கரோனா வைரஸை எதிர்த்துப் போராடி வரும்போது, மருத்துவ அவசர நிலையில் இருக்கும்போது இதுபோன்ற கருத்துகளைத் தெரிவித்திருக்கக் கூடாது. என் கருத்துகளால் யாரேனும் மனது புண்பட்டிருந்தால் மன்னிப்புக் கோருகிறேன்” என்று தெரிவித்திருந்தார்.
டெல்லியில் நடந்த கலவரம் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்தை ஜபருல் இஸ்லாம் கான் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT