Published : 02 May 2020 12:35 PM
Last Updated : 02 May 2020 12:35 PM
டெல்லியில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படைப்பிரிவில் (சிஆர்பிஎப்) கடந்த இரு வாரங்களில் 122 வீரர்களுக்கு கரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், நூற்றுக்கும் மேற்பட்டோரின் பரிசோதனை முடிவுகள் சில நாட்களில் வரவுள்ளதால் பெரும் அச்சம் நிலவுகிறது.
31-வது பட்டாலியனைச் சேர்ந்த சிஆர்பிஎப் வீரர்கள் தொடர்ந்து கரோனாவால் பாதிக்கப்பட்டு வருவதையடுத்து, டெல்லி மயூர் விஹார்-3 பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டு பாதிப்பு மேலும் பரவாதபடி பரிசோதனைகள் தொடர்ந்து வருகின்றன.
இதுகுறித்து சிஆர்பிஎப் பிரிவின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “கடந்த இரு வாரங்களில் 31-வது பட்டாலியனில் இதுவரை 122 வீரர்களுக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் 100க்கும் மேற்பட்டோரின் பரிசோதனை முடிவுகள் வர இருப்பதால் பாதிப்பு அதிகரிக்குமா எனத் தெரியவில்லை.
இதில் பாதிக்கப்பட்ட பெரும்பாலான சிஆர்பிஎப் வீரர்களுக்கு அறிகுறி இல்லாத கரோனா தொற்று இருந்துள்ளது. இவர்கள் அனைவரும் டெல்லி மன்டோலி பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முதலில் சிஆர்பிஎப் துணை ஆய்வாளர் ஒருவருக்கு கரோனா பாசிட்டிவ் உறுதியானது. அதைத் தொடர்ந்து 12 வீரர்களுக்கு கரோனா இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து பரிசோதனையைத் தீவிரப்படுத்தியபோதுதான் ஏராளமான வீரர்கள் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது” எனத் தெரிவித்தார்.
கடந்த மாதத்தில் சிஆர்பிஎப் பிரிவின் மருத்துவப் பிரிவில் பணியாற்றும் ஆண் செவிலியர் ஒருவருக்கு கரோனா இருப்பது 21-ம் தேதி கண்டறியப்பட்டது. ஆனால், அவரோ விடுமுறை முடிந்து 17-ம் தேதி முதல் பணியில் இருந்ததால் அந்த 4 நாட்களில் பலருக்கும் பரவியிருக்கலாம் என நம்பப்படுகிறது. கரோனாவில் பாதிக்கப்பட்ட ஆண் செவிலியர் அதாவது ஜவானின் குடும்பத்தில் யாருக்கும் கரோனா இல்லாதபோது எவ்வாறு கரோனா தொற்றுக்கு ஆளாகினார் என்று சிஆர்பிஎப் விசாரித்து வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT