Published : 01 May 2020 01:36 PM
Last Updated : 01 May 2020 01:36 PM
லாக்டவுன் முடியும் வரை காத்திருக்க இயலாது என்பதால் 100 கி.மீ. தொலைவு சைக்கிளில் சென்று நிச்சயித்த தேதியில் திருமணத்தை முடித்து மீண்டும் மணப்பெண்ணுடன் சைக்கிளில் திரும்பியிருக்கிறார் உ.பி.இளைஞர் ஒருவர்.
கடந்த ஏப்ரல் 15-ல் லாக்டவுன் நீட்டிக்கப்பட்ட நிலையில் மீண்டும் போக்குவரத்துக்குத் தடை, கூட்டம் சேர அனுமதியில்லை போன்ற கடுமையான விதிமுறைகள் நாடுமுழுவதும் அமல்படுத்தப்பட்டன. லாக்டவுன் நீட்டிக்கப்பட்டாலும் ஆங்காங்கே சில சுபநிகழ்வுகள் உரிய விதிமுறைகளுடன் நடைபெற்றத்தையும் காணமுடிந்தது.
உத்தரப் பிரதேசத்தில் ஹமீர்பூர் மாவட்டத்தில் நடந்துள்ள ஒரு சம்பவம் மிகவும் சுவாரஸ்யமானது. இங்குள்ள பவுதியா கிராமத்தைச் சேர்ந்தவர் கல்கு பிரஜாபதி. பத்தாம் வகுப்பு வரை படித்த இவர் ஒரு விவசாயி ஆவார்.
பிரஜாபதி, ஏப்ரல் 25-ல் இவர் தனது திருமணத்தை நடத்த நிர்வாகத்திடம் அனுமதி கோரியிருந்தார். ஆனால் அவர்களிடமிருந்து எந்தவித பதிலும் வரவில்லை. இதனால் பொறுத்திருந்து பார்த்த பிரஜாபதி திருமண நாள் நெருங்கும்போது ஒரு சைக்கிளை எடுத்துக்கொண்டு 100 கி.மீ. தொலைவில் உள்ள மணமகள் வீட்டிற்கு சாலைவழியே செல்வதென முடிவு செய்தார்.
அவருடன் உறவினர்கள்கூட யாரும் வரவில்லை, லக்னோவுக்கு தெற்கே 230 கி.மீ தொலைவில் மஹோபா மாவட்டத்தில் புனியா கிராமத்தில் தனது மணமகள் ரிங்கியின் இடத்திற்கு தனது சைக்கிளில் தன்னந்தனியாக அவர் மட்டும் சென்றார்.
இச்சம்பவம் குறித்து பிடிஐயிடம் தொலைபேசியில் பேசிய பிரஜபாதி கூறியதாவது:
"நாங்கள் திருமணத்திற்கு உள்ளூர் போலீசாரிடமிருந்து அனுமதி பெறவில்லை. மிதிவண்டியில் செல்வதைத் தவிர வேறு வழியில்லை, தனியாகவே, அங்கு செல்வது என முடிவெடுத்தேன்.
மாமியார் வீட்டில் திருமண அழைப்பிதழ்கள் எல்லாம் அச்சிட்டு வைத்திருந்தார். தீர்மானிக்கப்பட்ட தேதியில் திருமணத்திற்கு தயாராக இருந்தனர். நான்கு ஐந்து மாதங்களுக்கு முன்பே திருமணநாள் நிச்சயிக்கப்பட்டுவிட்டது. விழாவிற்கு மணமகளின் குடும்பத்தினர் என் தந்தைக்கு போன் செய்திருந்தனர், அதனால்தான் நான் அங்கு புறப்பட்டு சென்றேன்.
என்னிடம் மோட்டார் சைக்கிள் இருந்தாலும், எனக்கு ஓட்டுநர் உரிமம் இல்லை. சைக்கிள் மிகவும் எளிது. அனைவரின் ஆலோசனையின்படியும் எந்தவொரு நோய்த்தொற்றிலிருந்தும் என்னைக் காப்பாற்றிக் கொள்ள என் வாயில் ஒரு கைக்குட்டை கட்டிக்கொண்டேன். நான் காலையில் ஜீன்ஸ் மற்றும் டி-ஷர்ட்டில் புறப்பட்டேன்.
சுவாரஸ்யமாக, திருமண நிகழ்வு ஒரு கிராம கோவிலில் நடந்தது. தம்பதி நாங்கள் உள்பட கலந்துகொண்ட சிற்சில உறவினர்களும் சாதாரணத் துணிகளில் முகக்கவசம் போல கட்டியிருந்தோம். புகைப்படங்களும் எடுக்கப்பட்டன. வாயில் துணிகட்டிய நானும் மணமகளும் காட்சியளிப்பது பின்னால் நினைத்துப் பார்க்க ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
திருமணத்தின்போது மிகவும் அவசியமான சடங்குகள் மட்டுமே நடைபெற்றன, கிராமவாசிகளுக்கு ஒரு விருந்து உட்பட மீதமுள்ள செயல்பாடுகளுக்கு கரோனா வைரஸ் லாக்டவுன் முடிவதற்காக நாங்கள் காத்திருக்கிறோம். அப்போது மீண்டும் புதிய திருமண அழைப்பிதழை அச்சிட்டு பல ஆண்டுகளாக எங்களை அழைத்த அனைவரையும் அழைப்போம், மீதமுள்ள திருமண சடங்குகளையும் முடிப்போம்.
இதில் சிரமம் என்று ஏதாவது இருந்தால் அது ஒன்றே ஒன்றுதான். அது என்னவெனில் என் புது மனைவியை சைக்கிள் பில்லியனில் அமரவைத்து மீண்டும் 100 கி.மீ.தூரம் எங்கள் சொந்த ஊருக்கு அழைத்து வந்தது. நான் இரட்டை சுமைகளுடன் திரும்பி வந்தேன். என் கனவில் கூட, என் கால்களுக்கு இத்தகைய வலி இருக்கும் என்று நான் நினைத்ததில்லை.
என்னால் தூங்க முடியவில்லை, அதை சரிசெய்ய மாத்திரைகள் எடுக்க வேண்டியிருந்தது. எனினும் எங்கள் இரு குடும்பத்தினருக்கும் இத்திருமணம் மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.'' என்றார்.
''லாக்டவுன் முடியும்வரை திருமணத்திற்காக பிரஜாபதி ஏன் காத்திருக்கவில்லை'' என்பது குறித்த கேள்விக்கு, அவர் பதிலளிக்கையில் ''எனது தாயார் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார். இதனால் வீட்டில் பிரச்சினைகள் ஏற்பட்டுவருகின்றன. குடும்பத்தில் சமைக்கவும் யாரும் இல்லையென்பதாலும் இந்த அவசரம். தவிர, லாக்டவுன் அகற்றப்படுவதற்கு எவ்வளவு காலம் ஆகும் என்பதும் எங்களுக்குத் தெரியாது," என்று அவர் மேலும் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT