Last Updated : 28 Aug, 2015 09:00 PM

 

Published : 28 Aug 2015 09:00 PM
Last Updated : 28 Aug 2015 09:00 PM

பிஹார் சட்டப்பேரவை தேர்தல்: அதிக மக்கள் திரளைக் கூட்டுவது யார் என்பதில் கடும் போட்டி

பிஹாரில் அறிவிக்கப்படவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, நிதிஷ் குமார், லாலு பிரசாத் யாதவ் மற்றும் காங்கிரஸ் இணைந்து ஆகஸ்ட் 30 அன்று முதல் பிரச்சாரக் கூட்டம் நடைபெறுகிறது. இதன்மூலம், யாருடைய பிரச்சாரக் கூட்டத்தில் அதிக மக்கள் கூடுகிறார்கள் என்பதில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் தேசிய ஜனநாயக முன்னணி கூட்டணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

பிஹாரில் வரும் செப்டம்பர் மற்றும் அக்டோபரில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதற்காக, முன்கூட்டியே அம் மாநில அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தை துவங்கி நடத்தி வருகின்றன. இங்குள்ள முக்கிய எதிர்கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் சார்பிலும் பிரதமர் நரேந்தர மோடி மூன்று கூட்டங்களில் கலந்து கொண்டு பிரச்சாரத்தை துவக்கி வைத்துள்ளார். இவரது கூட்டம் கடைசியாக கடந்த வாரம் கயாவில் நடைபெற்றது. இங்கு இதுவரை எந்த அரசியல் கட்சிக் கூட்டங்களுக்கும் இல்லாத அளவில் மக்கள் கூடிய இருந்ததாகக் கருதப்படுகிறது.

இதையும் மிஞ்சும் வகையில் பிஹார் மாநில ஆளும் கட்சியான ஐக்கிய ஜனதா தளம், அதன் கூட்டணிக் கட்சிகளான ராஷ்ட்ரிய ஜனதா மற்றும் காங்கிரஸ் ஆகிய மூன்றும் இணைந்து முதன் முறையாக, ‘ஸ்வபிமான்’ எனும் பெயரில் ஒரு மாபெரும் கூட்டத்தை இன்று கூட்டுகின்றன.

தலைநகரான பாட்னாவின் காந்தி மைதானத்தில், இம்மூன்று கட்சிகளின் தலைவர்கள் மேடை ஏறி பிரச்சாரம்செய்யவிருக்கின்றனர். இதில், கடைசியாக கயாவில் நடந்த மோடியின் கூட்டத்தை விட அதிக மக்கள் எண்ணிக்கையை கூட்ட முயற்சிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ‘தி இந்து’விடம் ஐக்கிய ஜனதா தளத்தின் பிஹார் மாநில தலைவர் பஸிஸ்தா நாரயண் சிங் கூறுகையில், ‘எங்கள் ஸ்வபிமான் கூட்டத்தில் கடல் போல் மக்கள் வெள்ளம் வரும். இதற்காக, மாநிலம் முழுவதிலும் இருந்தும் வரும் மக்களுக்கு எங்கள் கட்சியின் எம்பி, எம்.எல்.ஏ மற்றும் எம்.எல்.சிக்கள் தலா குறைந்தது 5000 பேரை அழைத்து வருவதுடன் அவர்களுக்கு உணவுடன் தங்கும் இடமும் ஏற்பாடு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தக் கூட்டம், இதுவரை பிஹாரில் எந்தக் கட்சிகளுக்கும் இல்லாத அளிவில் இருக்கும்.’ எனத் தெரிவித்தார்.

இதை அடுத்து மோடியின் அடுத்த கூட்டம் செப்டம்பர் 1-ல் பிஹாரின் பாகல்பூரில் நடைபெற உள்ளது. இதில், அதிக மக்களை கூட்ட அவரது கட்சியினர் தீவிர ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x