Published : 01 May 2020 08:34 AM
Last Updated : 01 May 2020 08:34 AM

மளிகை பொருட்கள் வாங்க கடைக்கு சென்று மணமகளுடன் திரும்பிய உ.பி. இளைஞர்

லக்னோ:

உத்தரபிரதேச மாநிலம் காஸியாபாத் நகரைச் சேர்ந்தவர் சஞ்சய் (26). இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரும், அதே பகுதியைச் சேர்ந்த சவீதா என்ற பெண்ணும் ஒருவரையொருவர் காதலித்து வந்துள்ளனர்.

தங்கள் காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு வரும் என எண்ணிய அவர்கள், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர், இருவரும் அவரவர் வீட்டுக்குச் சென்றுவிட்டனர். திருமண சான்றிதழை வாங்கிய பின்னர், வீட்டுக்கு அழைத்துச் செல்வதாக சவீதாவிடம் சஞ்சய் கூறியுள்ளார். ஆனால், அதன் பிறகுதான் கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்ட்டது.

ஊரடங்கு முடிந்ததும் மனைவியை அழைத்து வரலாம் என பொறுமையாக இருந்த சஞ்சய்க்கு, இரண்டாம்கட்ட ஊரடங்கு அறிவிப்பு பெரும் சோதனையாக அமைந்தது. இதனிடையே, ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படலாம் என செய்திகள் வெளியானதால் அவர் பொறுமை இழந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மளிகைப் பொருட்கள் வாங்கி வருவதாக கூறி வெளியில் சென்ற சஞ்சய், தனது காதல் மனைவியுடன் வீடு திரும்பினார். இதை சற்றும் எதிர்பாராத அவரது பெற்றோர், அவர்கள் இருவரையும் வீட்டுக்குள் அனுமதிக்க மறுத்துவிட்டனர். மேலும், அவர்கள் மீது காவல் நிலையத்திலும் புகார் அளித்தனர். இதன் பேரில் அங்கு வந்த போலீஸார், புதுமணத் தம்பதியரை மன்னித்து வீட்டுக்குள் அனுமதிக்குமாறு சஞ்சயின் பெற்றோரிடம் சமாதானம் பேசி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x