Published : 30 Apr 2020 02:28 PM
Last Updated : 30 Apr 2020 02:28 PM
குறு, சிறு, நடுத்தரத் தொழிற்சாலைகள், நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் 2-வது கட்ட பொருளாதார நிதித்தொகுப்பு நாளை (வெள்ளிக்கிழமை) அறிவிக்கப்படலாம் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாட்டில் உள்ள முக்கியத் தொகுதிகளை கருத்தில் கொண்டு அங்கு நடக்கும் தொழில்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் மிகப்பெரிய அளவில் பொருளாதார ஊக்க அறிவிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த 2-ம் கட்ட பொருளாதார நிதித்தொகுப்பில் குறு, சிறு, மற்றும் நடுத்தரத் தொழில்கள், விவசாயிகள், பெண்கள், ஏழைகள், புலம்பெயர் தொழில்கள், பிற விளிம்புநிலைப் பிரிவினர் ஆகியோருக்கு பொருளாதார ஊக்க அறிவிப்புகள் இருக்கலாம். இதற்கான தீவிரமான ஆலோசனையில் மத்திய நிதியமைச்சகம் கடந்த சில வாரங்களாக ஈடுபட்ட நிலையில், திட்டங்களுக்கான வரையறைகள் முடிக்கப்பட்ட நிலையில் நாளை மே1-ம் தேதி அறிவிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நடவடிக்கையில் 2-வது பொதுமுடக்கத்தைக் கொண்டு வந்து மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதனால் தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள், சிறு, குறுந்தொழில்கள் மூடப்பட்டுள்ளன. சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதால் மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்கிறார்கள்.
இதில் வருமானமின்றி பாதிக்கப்பட்ட ஏழைகள், கூலித் தொழிலாளர்கள் ஆகியோருக்கு உணவுப் பாதுகாப்பு, பணம் ஆகியவற்றை வழங்கும் வகையில் ரூ.1.70 லட்சம் கோடி பொருளாதார நிதித்தொகுப்பை நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் கடந்த மாதம் அறிவித்தார்.
இந்நிலையில், 2-வது கட்டமாக மிகப்பெரிய பொருளாதார நிதித்தொகுப்பை அறிவிக்க மத்திய அரசு தயாராகி வந்தது. 2-வது கட்ட பொருளதார நிதித்தொகுப்பில் சிறு, நடுத்தர நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள், போக்குவரத்து, சுற்றுலாத்துறை, விமானத்துறை ஆகியவற்றுக்குச் சலுகை அளிக்கும் வகையில் அறிவிப்புகள இருக்கும் எனத் தெரிகிறது.
மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கும் வகையில் குறிப்பிட்ட 5 பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களை உற்பத்தியில் ஈடுபடுத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்கள் நேரடியாகவே, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், தொழிற்சாலைகளையும் அடையும் வகையில் திட்டங்கள் இருக்கும் எனத் தெரிகிறது.
இதுகுறித்து அக்குயிட் ரேட்டிங் நிறுவனம் மதிப்பிடுகையில், “மத்திய அரசு தொழில் நிறுவனங்களுக்கு பொருளாதார ஊக்க அறிவிப்பு ரூ.11.2 லட்சம் கோடி மதிப்பிட்டில் இருக்கும். ஏற்கெனவே பொருளாதார இழப்பு மிகப்பெரிய அளவுக்குச் சென்றுவிட்ட நிலையில் அதை ஈடுகட்டும் வகையில் அறிவிப்பு இருக்கும். எல்லா மாநிலங்களுக்கும் சரிசமமான அளவில் நிதித்தொகுப்பு இல்லாமல் அந்தந்த மாநிலங்களின் நிதிச்சூழலுக்கு ஏற்றார்போல் இருக்கும்” எனத் தெரிவித்துள்ளது.
இதன்படி குறைந்த நிதிப் பற்றாக்குறை இருக்கும் வலிமையான மாநிலங்கள் கூடுதலாக ரூ.3 லட்சம் கோடி வரை கடன் பெறலாம். குறிப்பாக கர்நாடகா, குஜராத், தமிழகம், மகாராஷ்டிரா, ஹரியாணா, தெலங்கானா மாநிலங்களின் நடப்பு நிதிச்சூழல் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் சிறப்பாக இருப்பது குறிப்பிடத்தக்கது
சிறு, நடுத்தர உற்பத்தி நிறுவனங்களுக்கான புதிய கடன் உத்தரவாத திட்டம், ஏழைகளுக்குப் பணப் பரிமாற்றம், உணவு தானியங்கள் கூடுதலாக வழங்கும் திட்டம், பிரதமர் கிஷான் திட்டத்தில் கூடுதலாகப் பணம் வழங்குதல் போன்ற திட்டங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT