Published : 30 Apr 2020 09:59 AM
Last Updated : 30 Apr 2020 09:59 AM
சென்னையைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியும், தற்போது வெளியுறவுத்துறையில் பணியாற்றி வருபவருமான டி.எஸ். திருமூர்த்தி ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்
இதற்கு முன் ஐ.நா.வுக்கான நிரந்தரத் தூதர் பணயிடத்தில் சயது அக்பரூதின் இருந்து ஐ.நாவின் பல்வேறு முக்கிய விவாதங்கள், முக்கியப் பிரச்சினைகளில் இந்தியாவின் நிலைப்பாட்டை ஸ்திரமாக எடுத்துரைத்தார். இப்போது அந்த பதவிக்கு 1985-ம் ஆண்டு ஐஏஎஸ் பேட்ஜ் அதிகாரி திருமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பு ஜெய்ஷ் இ முகமது மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக ஐநா அறிவிக்க இந்தியா சார்பில் எடுத்த முயற்சியில் அக்பரூதின் முக்கியப் பங்காற்றினார். பலமுறை இந்தியாவின் முயற்சிகளுக்கு சீனா முட்டுக்கட்டை போட்ட போதிலும் மனம்தளராமல் எடுத்துரைத்து அக்பரூதின் செயலாற்றினார். கடந்த 2016-ம் ஆண்டிலிருந்து ஐ.நாவுக்கான நிரந்தர தூதராக செயல்பட்ட அக்பரூதீன் ஓய்வு பெற்றதைத்தொடர்ந்து திருமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்
இதற்கான முறைப்படியான அறிவிப்பை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் நேற்று இரவு வெளியிட்டது. அதில் “ ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி, தூதராக இந்திய ஐஏஎஸ் அதிகாரி திருமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டது
தற்போது மத்தியவெளியுறவுத்துறையில் பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளராக திருமூர்த்தி முக்கிய பொறுப்பில் இருந்து வருகிறார். கடந்த 1962-ம் ஆண்டு மார்ச் 7-ம் தேதி சென்னையில் பிறந்தவரான திருமூர்த்தி, இளங்கலை வணிகவியல் பட்டம் பெற்று, சட்டம் பயின்றார். அதன்பின் ஐஏஎஸ் தேர்வில் 1985-ம் ஆண்டு தேர்ச்சி பெற்று வெளியுறவுத்துறையில் பணியாற்றினார். கெய்ரோ, ஜெனிவா, காசா, வாஷிங்டன், ஜகார்த்தா ஆகிய நகரங்களில் இந்திய தூதராகங்களில் முக்கியப் பொறுப்பில் பணியாற்றியுள்ளார்
மேலும் வங்கதேசம், பூடான், இலங்கை, மாலத்தீவு, மியான்மர் ஆகிய நாடுகளுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் இணைச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். பாலஸ்தீனம், மலேசியா, ஜகார்தாவில் இ்ந்தியத்தூதராகவும் திருமூர்த்தி பணியாற்றியுள்ளார்
சிறந்த எழுத்தாளரான திருமூர்த்தி, கிஸ்ஸிங் தி ஹெவன் மானசரோவர் யாத்ரா, கிளைவ் அவென்யு, சென்னைவாசி ஆகிய நூல்களை எழுதியுள்ளார். திருமூர்த்தியின் மனைவி கவுரி திருமூர்த்தி, முன்னாள் டென்னிஸ் வீரர் ராமநாதன் கிருஷ்ணனின் மகள். திருமூர்த்தி கவுரி தம்பதிக்கு மகன்,மகள் உள்ளனர். இவர்களின் மகள் பவானி திருமூர்த்தியும் இந்திய டென்னி்ஸ் வீராங்கனை என்பதுகுறிப்பிடத்தக்கது
மேலும், ஆஸ்திரியாவுக்கான இந்தியத் தூதராக ஜெய்தீப் மஜும்தார் நியமிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான், ஆப்கன், ஈரான் நாடுகளுக்கான இணைச்செயலாளராக இருந்து வந்த தீபக் மிட்டல் கத்தார் நாட்டுக்கான தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். பஹ்ரைன் நாட்டுக்கான தூதராக பியூஷ் ஸ்ரீவஸ்தவாவும், ஸ்லோவேனியா நாட்டின் தூதராக நம்ரதா எஸ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT