Published : 30 Apr 2020 08:49 AM
Last Updated : 30 Apr 2020 08:49 AM
மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த விவியன் லால்ரெம் சங்கா (28), சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த 23-ம் தேதி மாரடைப்பால் அவர் உயிரிழந்தார். ஊரடங்கு காரணமாக அவரது உடலை சென்னையில் அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
எனினும், மிசோரம் அரசு கேட்டுக் கொண்டதன் பேரில் விவியனின் உடலை அவரது சொந்த ஊருக்கு கொண்டுசெல்ல முடிவு செய்யப்பட்டது. கடந்த 25-ம் தேதி இரவு அவரது உடலுடன் சென்னையில் இருந்து மிசோரமுக்கு ஆம்புலன்ஸ் புறப்பட்டது. சென்னையைச் சேர்ந்த ஓட்டுநர்கள் சின்னதம்பி, ஜெயேந்திரன் ஆம்புலன்ஸை ஓட்டினர். விவியனின் நண்பர் ரஃபேல் உடன் சென்றார்.
மூன்று நாட்களில் சுமார் 3,000 கி.மீ. தொலைவை கடந்து மிசோரம் தலைநகர் அய்ஸ்வால் அருகேயுள்ள மாடல்வெங் பகுதிக்கு நேற்று முன்தினம் ஆம்புலன்ஸ் சென்றடைந்தது. அங்கு விவியனின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
முன்னதாக கொல்கத்தா, சிலிகுரி, குவாஹாட்டி உள்ளிட்ட நகரங்களில் மிசோரம் மக்கள் சாலையில் திரண்டு நின்று ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு மரியாதை செலுத்தினர். அய்ஸ்வாலில் மிசோரம் மாநில அமைச்சர் பெய்ச்ஹு நேரில் சென்று தமிழகஓட்டுநர்களுக்கு நன்றி தெரிவித்தார். இருவருக்கும் தலா ரூ.2,000-ஐவழங்கினார். மிசோரம் மாநில பாரம்பரிய உடைகளையும் அளித்தார்.
இதுதொடர்பாக மிசோரம் முதல்வர் ஜோரம்தங்கா ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், “3,000 கி.மீ.தொலைவுக்கு பல்வேறு இன்னல்களை கடந்து, இளைஞர் விவியனின் உடலை ரஃபேல், ஜெயேந்திரன், சின்னதம்பி ஆகியோர் மிசோரமுக்கு கொண்டு வந்துள்ளனர். அவர்கள்தான் உண்மையான ஹீரோக்கள். அவர்களுக்கு மிசோரம் மக்கள் சார்பில் வீரவணக்கம் செலுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT