Published : 28 Apr 2020 05:34 PM
Last Updated : 28 Apr 2020 05:34 PM
கேரள மாநிலத்தில் கரோனா பாதிப்பைச் சமாளிக்கும் வகையில் அரசு ஊழியர்களின் ஊதியத்தில் மாதந்தோறும் 6 நாள் ஊதியம், 5 மாதங்கள் பிடிக்கப்படும் என்று அரசு பிறப்பித்த உத்தரவுக்கு 2 மாதங்கள் தடை விதித்து உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
கரோனா வைரஸால் கேரள மாநிலம் அடைந்த பாதிப்பைச் சரிசெய்ய போதுமான நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அரசு சமீபத்தில் ஓர் உத்தரவைப் பிறப்பித்தது.
இதன்படி கேரள மாநிலத்தில் மாதம் ரூ.20 ஆயிரத்துக்கும் குறைவாக ஊதியம் வாங்குவோருக்கு 6 நாட்கள் ஊதியம் அடுத்த 5 மாதங்களுக்குப் பிடிக்கப்படாது. மாநில அரசு நிறுவனங்கள், ஆசிரியர்கள், பொதுத்துறை நிறுவனங்கள், அரசு, தனியார் கூட்டு நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்டவற்றில் பணியாற்றுவோருக்கு மட்டும் பிடிக்கப்படும்.
மேலும், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், வாரிய உறுப்பினர்கள், உள்ளாட்சி உறுப்பினர்கள், ஆணையங்களில் இருப்போர் ஆகியோரின் ஊதியம் 30 சதவீதம் பிடிக்கப்படும் எனத் தெரிவித்தது. அதேசமயம் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ஒரு மாத ஊதியத்தை ஏற்கெனவே அளித்தவர்களுக்கு இது பொருந்தாது எனத் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், இந்த உத்தரவை எதிர்த்து கேரள நீர் ஆணையப் பணியாளர் அமைப்பு, காங்கிரஸின் ஐஎன்டியுசி, கேரள வித்யூதி மஸ்தூர் சங்கம் ஆகியவை இணைந்து கேரள உயர் நீதிமன்றத்தில் கேரள அரசின் ஊதியப் பிடித்தம் உத்தரவுக்கு எதிராகத் மனுத்தாக்கல் செய்தது. அரசியலமைப்புச் சட்டம் 300-ஏ பிரிவு சொத்துரிமைக்கான அம்சம் ஊதியத்துக்கும் பொருந்தும், எந்தச் சட்டத்தின் படி ஒருவரின் சொத்தைக் கட்டாயமாக எடுக்க முடியாது என மனுவில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், ஊழியர்களின் ஊதியத்தை வலுக்கட்டாயமாக எடுத்துக்கொள்ள அரசுக்கு உரிமையில்லை. ஊழியர்கள் தாங்களாக முன்வந்து மட்டுமே நன்கொடை வழங்க முடியும். இவ்வாறு ஊதியத்தைப் பிடித்தம் செய்யும் உத்தரவு தவறானது எனத் தெரிவித்திருந்தனர்.
இந்த மனு உயர் நீதிமன்ற நீதிபதி குரியன் தாமஸ் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அந்த மனுவை விசாரித்த நீதிபதி தாமஸ், “ மாநில அரசின் உத்தரவில் பல்வேறு சந்தேகங்களுக்குரிய முகாந்திரங்கள் இருக்கின்றன என்பதால் இந்த உத்தரவை அடுத்த இரு மாதங்களுக்கு செயல்படுத்தத் தடை விதிக்கப்படுகிறது” என்று உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT