Published : 28 Apr 2020 04:45 PM
Last Updated : 28 Apr 2020 04:45 PM
10,000 சதுர அடிக்கு அதிகமாக, அரசுக்குச் சொந்தமான இடங்களில் வாடகைக்கு இருக்கும் நிறுவனங்கள், மூன்று மாதங்களுக்கு வாடகை தர வேண்டாம் என்று கேரள அரசு அறிவித்துள்ளது.
கரோனா நெருக்கடியால் பல்வேறு துறைகளும் பாதிக்கப்பட்டுள்ளதால், கேரள அரசுக்குச் சொந்தமான இடங்களில், கட்டிடங்களில் வாடகைக்கு இருக்கும் நிறுவனங்கள், வியாபாரிகள், ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கான வாடகையைத் தர வேண்டாம். இது ஐடி மட்டுமல்லாது உணவகங்கள் உள்ளிட்ட மற்ற வியாபாரங்களுக்கும் பொருந்தும். ஐடி பூங்காக்களில் இயங்கும் இன்குபேஷன் மையங்களுக்கும் வாடகை கிடையாது.
மேலும், ஆண்டுதோறும் ஐந்து சதவீதம் ஏற்றப்படும் வாடகையும், வரும் 2020-21 நிதியாண்டில் ஏற்றப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ஜூன் மாதத்துக்குப் பிறகு கடந்த நிதியாண்டில் கொடுத்த வாடகையே தொடரும்.
மேலும், இந்த மூன்று மாதங்களுக்கான மின்சாரக் கட்டணத்துக்கு மானியம் வழங்குவது தொடர்பான விஷயத்தில் முடிவெடுக்க ஐடி பூங்காக்களின் தலைமைச் செயல் அதிகாரிகளையும் கேரள அரசு கேட்டுள்ளது.
கரோனா நெருக்கடி காரணமாக அரசுக்குச் சொந்தமான இடங்களிலிருந்து இயங்கும் நிறுவனங்களுக்கு ஆதரவு தரக் கோரி ஜிடெக் தலைவர் அரசாங்கத்திடம் விண்ணப்பம் சமர்ப்பித்ததைத் தொடர்ந்து அரசு இந்தச் சலுகையை அறிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT