Published : 28 Apr 2020 02:51 PM
Last Updated : 28 Apr 2020 02:51 PM
மே மாத இறுதிக்குள் ஆர்டி- பிசிஆர் கருவிகள் தயாரிக்கப்பட்டு விடும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் தெரிவித்துள்ளார்.
கரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அறிகுறி தெரியாத வீடுகளில் இருக்கும் பாதிக்கப்பட்டவர்கள் மூலம் இந்த நோய் சமூகப்பரவல் நிலையை அடையாமல் இருக்க ரேபிட் டெஸ்ட் கிட் எனப்படும் விரைவு சோதனை கருவி மூலம் பரிசோதனை செய்யப்பட உள்ளது.
இதில், பரிசோதனை முடிவுகள் 15 நிமிடத்திற்குள்ளாகவே முடிவுகள் கிடைக்கும். ஒரு நாளைக்கு நிறைய பேரின் ரத்த மாதிரிகளை சோதனை செய்யலாம். ஆனால், இது மட்டுமே இறுதியான கரோனா பரிசோதனை முடிவு இல்லை.
இதனைத் தொடர்ந்து உண்மையான கரானா பரிசோதனை என்பது மூக்கு அல்லது தொண்டையில் ஸ்வாப் செய்து எடுக்கப்படும் சளி, இரத்தம் ஆகியவற்றை பரிசோதிக்கும் பிசிஆர் சோதனைதான். இதன் மூலமே கொரோனா இருக்கிறதா இல்லையா என்பது முடிவு செய்யப்படும்.
சளி மூலம் எவ்வளவு வைரஸ் வெளிப்படுகிறது, எப்படி எடுக்கப்படுகிறது, மாதிரிகள் ஆய்வகத்துக்கு கொண்டு செல்லும் அவகாசம் ஆகியவை குறித்து இந்த முடிவுகளிலும் வேறுபாடுகள் இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. சிலருக்கு இருமுறை கூட இந்த சோதனை மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் இந்த சோதனைதான் மிக முக்கியமானது.
இந்தநிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் கூறியதாவது:
இந்தியாவிலேயே ஆர்டி- பிசிஆர் கருவிகள் தயாரிக்க முடியும். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. மே மாத இறுதிக்குள் தயாராகும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஒப்புதலுக்கு பிறகு தயாரிப்பு தொடங்கும். முதல்கட்டமாக 1 லட்சம் ஆர்டி- பிசிஆர் கருவிகள் தயாரிக்க திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT