கரோனா வைரஸ் அறிகுறிகள் மிகவும் லேசானதாக இருந்தால் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளும் வசதி இருந்தால் வீட்டிலேயே தனிமையில் இருந்து மற்றவர்களுடன் தொடர்பைத் துண்டித்துக் கொள்ளுங்கள் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் புதிய வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
இதற்கு முன், வெளியிட்ட வழிகாட்டி நெறிமுறைகளில், “தனிமைப்படுத்தும் பகுதியில் வசிப்போருக்கு லேசாகவோ அல்லது மிதமாகவோ அல்லது தீவிரமாகவோ கரோனா அறிகுறிகள் இருந்தால், உடனடியாக கோவிட்-19 சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்திருந்த நிலையில், இப்போது சுகாதாரத்துறை அமைச்சகம் இவ்வாறு தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று இரவு வெளியிட்ட புதிய வழிகாட்டி நெறிமுறைகள் பின்வருமாறு:
ஒருவர் கரோனா வைரஸ் பாதித்துள்ளதற்கான லேசான அறிகுறிகளுடன் உள்ளார் என்று மருத்துவர் மூலம் உறுதி செய்யப்பட வேண்டும்.
கரோனாவில் பாதிக்கப்பட்ட அந்த நோயாளி தனது உடல்நிலை குறித்த தகவல்களை அடிக்கடி மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிக்கும் கண்காணிப்புக் குழுவுக்கும் தெரிவிக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட நபருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் மருத்துவர்கள் ஆலோசனையின், பரிந்துரையின்படி முன்னெச்சரிக்கையாக ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம்.
பாதிக்கப்பட்ட நபருக்கு கரோனா வைரஸ் அறிகுறி மிகவும் லேசாகத்தான் இருக்கிறது என்று மருத்துவர்கள் உறுதி செய்தால், வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள போதுமான வசதிகள் இருந்தால், அனைவரின் தொடர்பையும் துண்டித்துக்கொண்டு தனிமைப்படுத்திக் கொள்ளலாம்.
பாதிக்கப்பட்ட நபர் தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளும் நிலையில் அவருக்கு உதவுவதற்காக உதவியாளர் ஒருவரை நியமிக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட நபர் மத்திய அரசின் ஆரோக்கிய சேது செயலியை அவரின் ஸ்மார்ட் போனில் பதிவிறக்கம் செய்து, எப்போதும் தொடர்பில் இருக்குமாறு இணையதள வசதி இருக்குமாறு பார்க்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட நபருக்கு ஏதேனும் திடீர் உடல்நலக் குறைபாடு ஏற்பட்டால் அதாவது மூச்சு விடுவதில் சிக்கல், தீவிரமான காய்ச்சல், மார்பு வலி, அழுத்தமான மனநிலை, முகம், உதட்டுப் பகுதியில் எரிச்சல், வீக்கம் இருந்தால் உடனடியாக மருத்துவ அதிகாரிக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.
வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நபர் வீட்டிலேயே குறிப்பிட்ட காலம் வரை இருந்தால் மருத்துவ அதிகாரிகள் ஆய்வின்படி அவர்களுக்கு கரோனா அறிகுறிகள் இல்லை, அதிலிருந்து குணமடைந்தவிட்டார் எனத் தெரிவித்தால், அவர்களின் தனிமைப்படுத்துதல் வீட்டிலயே முடிந்துவிடும்.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் கணிப்பின்படி கரோனா வைரஸால் பாதிக்கப்படும் நோயாளிகளில் 80 சதவீதம் பேருக்கு பெரிதாக பாதிப்புஏற்படுவதில்லை. 20 சதவீதம் பேருக்கு மட்டுமே மூச்சுவிடுதலில் சிரமம், மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய நிலை, ஐசியூவில் இருக்க வேண்டிய நிலை தேவைப்படுகிறது. 80 சதவீத நோயாளிகளுக்கு கரோனா அறிகுறிகளைக் குணப்படுத்தும் சிகிச்சையளித்தாலே போதுமானது. 15 சதவீதம் பேருக்கு ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது எனத் தெரிவித்துள்ளது.
WRITE A COMMENT