Published : 28 Apr 2020 12:56 PM
Last Updated : 28 Apr 2020 12:56 PM
பிரதமர் மோடியுடன் காணொலி மூலம் நேற்று நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் பங்கேற்காதது முறையற்றது என்று மாநில பாஜக விமர்சித்துள்ளது.
நாட்டில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில் கடந்த மாதம் 24-ம் தேதி நள்ளிரவு முதல் நாடு முழுவதும் லாக் டவுனை மத்திய அரசு கொண்டு வந்தது. கரோனா பாதிப்பு குறையாததையடுத்து ஏப்ரல் 15-ம் தேதி முதல் மே 3-ம் தேதி வரை 2-ம் கட்டமாக லாக் டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த லாக் டவுன் காலத்திலும் கரோனா வைரஸ் பாதிப்பு 30 ஆயிரத்தை நெருங்குகிறது. 900க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஊரடங்கு கொண்டுவருவதற்கு முன்பும், முதல்கட்ட லாக் டவுன் முடியும் முன்பும் மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இதில் 9 மாநில முதல்வர்கள் மட்டுமே பங்கேற்றிருந்தனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் பங்கேற்காமல் தலைமைச் செயலாளர் டாம் ஜோஸ் மட்டும் பங்கேற்றார். மிகச்சில முதல்வர்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும் என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டதால் முதல்வர் பினராயி விஜயன் தவிர்த்துவிட்டதாகக் கூறப்பட்டது.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறிய குற்றச்சாட்டிலும், பிரதமர் மோடியுடன் குறிப்பிட்ட சில முதல்வர்களுக்கே கூட்டத்தில் பேச அனுமதிக்கப்படுகிறது. அவர்களும் தங்கள் கருத்தை எடுத்து வைக்க முடியவில்லை எனத் தெரிவித்தார்.
இந்த சூழலில் கேரள மாநில பாஜக தலைவர் கே.சுரேந்திரன் விடுத்த அறிக்கையில் , “ ஒட்டுமொத்த தேசமும் கரோனா வைரஸ் பெருந்தொற்று நோய்க்கு எதிராகப் போராடி வருகிறது. ஆனால், பிரதமர் மோடியுடனான ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் பினராயி விஜயன் பங்கேற்காமல் புறக்கணித்தது முறையற்ற செயல்பாடு.
கடந்த கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் பினராயி விஜயன் இந்தக் கூட்டத்தில் ஏன் பங்கேற்கவில்லை? கடந்த கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர்களில் பெரும்பலானோர் திங்கள்கிழமை கூட்டத்தில் பங்கேற்றனர். முதல்வர் பினராயி விஜயன் பங்கேற்காததை அவர் நியாயப்படுத்திப் பேச முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் பினராயி விஜயன் பதில் அளிக்கையில், “பிரதமர் மோடியுடனான ஆலோசனைக் கூட்டத்தில் நாங்கள் சில விஷயங்களைப் பேசத் திட்டமிட்டிருந்தோம். ஆனால், ஞாயிற்றுக்கிழமை அமைச்சரவைச் செயலாளர் அளித்த தகவலில், சில முதல்வர்களுக்கு மட்டுமே பிரதமருடன் பேசுவதற்கு வாய்ப்பு கொடுப்போம் எனத் தெரிவித்தார். அதனால் நான் பங்கேற்வில்லை என்பதைத் தெரிவித்துவிட்டேன். மே 15-ம் தேதிவரை லாக் டவுன் நீட்டிக்க கேரள அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது” எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT