Published : 27 Apr 2020 05:08 PM
Last Updated : 27 Apr 2020 05:08 PM
கரோனா வைரஸ் ஒருவருக்கு இருக்கிறதா என்பது குறித்த முதல்கட்டப் பரிசோதனை நடத்தும் ரேபிட் டெஸ்ட் கிட்டின் விலை ஜிஎஸ்டி வரி உட்பட அதிகபட்சமாக ரூ.400க்கு மேல் நிர்ணயிக்கக்கூடாது என்று டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
ரேர் மெடாபாலிக்ஸ் அண்ட் அராக் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்திடம் இருந்து 5 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட்டை வாங்க ஐசிஎம்ஆர் ஒப்பந்தம் செய்திருந்தது. ஒவ்வொரு ரேபிட் டெஸ்ட் கிட்டும் ரூ.600 என்று விலை நிர்ணயிக்கப்பட்டு கடந்த மார்ச் 27 மற்றும் 28-ம் தேதிகளில் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இந்த ரேர் மெடாபாலிக்ஸ் அண்ட் அராக் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனம் மேட்ரிக்ஸ் லேப் என்ற இறக்குமதியாளர் மூலம் மொத்தம் 5 லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகளை இறக்குமதி செய்ய ஒப்பந்தம் செய்திருந்தது. இதன் மொத்த விலை ரூ.30 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இதன்படி முதல் கட்டமாக 2.76 லட்சம் கருவிகள் இறக்குமதி செய்யப்பட்டு அது ஐசிஎம்ஆர்க்கு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள கருவிகள் தரப்பட வேண்டும். ஆனால், சீனாவிலிருந்து இன்னும் ரேபிட் கிட் வரவில்லை.
இதற்கிடையே மேட்ரிக்ஸ் நிறுவனம் தனக்கு முழுமையான தொகையைக் கொடுத்தால்தான் மீதமுள்ள 2.24 லட்சம் கருவிகளை ஒப்படைக்க முடியும் எனத் தெரிவித்துவி்ட்டது.
இதில் மேட்ரிக்ஸ் நிறுவனம் சீனாவிலிருந்து ஒரு ரேபிட் கருவியை தலா ரூ.275க்கு வாங்குகிறது. இதை ஐசிஎம்ஆர் அமைப்புக்கு ரேர் மெடாபாலிக்ஸ் அண்ட் அராக் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனம் மூலம் ரூ.600க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த வகையில் மேட்ரிக்ஸ் நிறுவனத்துக்கு ரூ.21 கோடியும், ஏஜென்சி நிறுவனமான ரேர் மெடாபாலிக்ஸ் அண்ட் அராக் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்துக்கு ரூ.9 கோடி கிடைக்கும்.
இந்த சூழலில், ரேர் மெடாபாலிக்ஸ் அண்ட் அராக் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. அதில், “ தாங்கள் 5 லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகளை மேட்ரிக்ஸ் நிறுவனத்திடம் ஆர்டர் செய்தோம். அதற்கு முன்பணமாக ரூ.12.75 கோடி செலுத்திவிட்டோம். மீதமுள்ள ரேபிட் கருவியை வழங்கினால் ஐசிஎம்ஆர் அமைப்பிடம் வழங்கி மீதிப் பணத்தைப் பெற முடியும். ஆனால் மீதமுள்ள ரூ.8.25 கோடியை வழங்கினால்தான் ரேபிட் கருவியை விடுவிக்க முடியும் என்று மேட்ரிக்ஸ் நிறுவனம் தெரிவிக்கிறது. ரேபிட் பரிசோதனைக் கருவியை வழங்க உத்தரவிட வேண்டும்” எனத் தெரிவித்திருந்தது.
இந்த வழக்கு டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி நஜ்மி வாஜிரி முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அவர் பிறப்பித்த உத்தரவு:
''நாட்டில் கரோனா வைரஸ் பெருந்தொற்று தீவிரமடைந்திருக்கும் சூழலில் மக்கள் கடந்த மாதம் 24-ம் தேதி முதல் வீட்டுக்குள் முடங்கி இருக்கிறார்கள். கடந்த ஒரு மாதமாக நாட்டின் பொருளாதாரம் ஸ்தம்பித்துள்ளது.
கரோனா தொற்றுநோய் கட்டுப்பாட்டில் இருப்பதாக மக்களுக்கு அரசு உறுதியளிக்கவும், மக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்காக முன்னணிப் போரில் ஈடுபடும் அமைப்புகளுக்கு நாடு முழுவதும் மிகக் குறைந்த செலவில் அதிக பரிசோதனைக் கருவிகள் அவசரமாக கிடைக்க வேண்டும்,
இதன்படி ஒரு ரேபிட் டெஸ்ட் கிட்டுக்கு 65 சதவீதம் லாபம் வைத்துக்கொள்ளலாம். அதாவது ரூ.155, ரூ.245க்கு இறக்குமதி செய்யப்பட்டால், ரூ.155 சேர்த்து ஒரு ரேபிட் கிட்டின் விலை ஜிஎஸ்டி உட்பட ரூ.400க்கு மேல் செல்லக்கூடாது. நாடு முழுவதும் மக்களின் பரிசோதனைக்காக இந்த ரேபிட் கிட் விரைவாக வழங்கப்பட வேண்டும்”.
இவ்வாறு நீதிபதி நஜ்மி வாஜிரி உத்தரவிட்டார்.
ஏற்கெனவே ஐசிஎம்ஆர் அமைப்பு, தமிழக அரசுக்கும் ரேபிட் டெஸ்ட் கிட் ரூ.600 என்ற விலையில் வழங்கப்பட்டுவிட்ட நிலையில், அடுத்து வரும் கருவிகள் ரூ.400 விலையில் சப்ளை செய்யப்பட வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT