Published : 27 Apr 2020 02:48 PM
Last Updated : 27 Apr 2020 02:48 PM
மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் கரோனா பரிசோதனைக் கருவியான ரேபிட் கிட் டெஸ்ட் கருவிகளை 150 சதவீத லாபத்தில் சிலர் விற்பனை செய்கிறார்கள். இதில் பிரதமர் மோடி உடனடியாகத் தலையிட்டு, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
கரோனா வைரஸ் இருக்கிறதா என்பதை மக்களுக்கு முதல் கட்டமாகக் கண்டறியும் ரேபிட் டெஸ்ட் கருவிகளை மாநில அரசுகளுக்கும், மத்திய அரசுக்கும் சில நிறுவனங்கள் 150 சதவீத லாபத்தில் விற்பனை செய்துள்ளன என்று ஊடகங்களிலும் நாளேடுகளிலும் செய்தி வெளியானது. ரூ.225 மதிப்புள்ள இந்த ரேபிட் டெஸ்ட் கருவி ரூ.600க்கு விற்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடிக்கு வலியுறுத்திப் பதிவிட்டுள்ளார். அதில், ''கரோனா வைரஸ் பெருந்தொற்று பேரிடருக்கு எதிராக தேசமே போராடி வருகிறது. ஆனால், இன்னும் சிலர் இந்த நேரத்தில் கூட லாபம் சம்பாதிக்கிறார்கள்.
இதுபோன்ற ஊழல் மிக்கவர்களின் மனநிலையைப் பார்த்து வெட்கப்படுகிறேன். சிலர் 150 சதவீத லாபத்தில் கருவிகளை விற்றுள்ளனர். பிரதமர் மோடி இதில் தலையிட்டு கொள்ளை லாபம் சம்பாதித்தவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற செயலை தேசம் ஒருபோதும் பொறுக்காது” எனத் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியின் தலைமைச் செய்தித் தொடர்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா ட்விட்டரில் பதவிட்ட கருத்தில், “ரூ.225 மதிப்புள்ள ரேபிட்கிட் கருவியை ரூ.600க்கு மாநில அரசுக்கு விற்பனை செய்தது வெட்கக்கேடு, மனிதத் தன்மையில்லாதது. கரோனா பரிசோதனைக் கருவியிலும் ஊழலா அல்லது மாநில அரசுக்கு லாபமா?
ஒரு ரேபிட் கிட் ரூ.225க்கு இறக்குமதி செய்யப்படுகிறது. ஆனால் ரூ.600்க்கு வாங்கப்படுகிறது. 166.66 சதவீதம் லாபமா. வெட்கக்கேடு. மனதநேயமில்லையா. பிரதமர் மோடி பொறுப்பேற்பேரா?” எனக் கேட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT