Published : 27 Apr 2020 12:39 PM
Last Updated : 27 Apr 2020 12:39 PM
குஜராத் மாநிலத்தில் நாளுக்கு நாள் கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழப்பு அதிகரித்து வருவதற்கு சீனாவின் வூஹான் நகரைத் தாக்கிய எல்-வகை கரோனா வைரஸ் காரணமாக இருக்கலாம் என வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
கரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் தொடங்கியபோது, பாஜக முதல்வர் விஜய் ரூபானி ஆளும் குஜராத் மாநிலத்தில் மிகச்சிலர்தான் பாதிக்கப்பட்டிருந்தனர். பாதிப்புக்குள்ளான மாநிலங்கள் பட்டியலில் 10-வது இடத்துக்கும் கீழே இருந்தது. ஆனால் கடந்த 10 நாட்களுக்குள் குஜராத் மாநிலத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும், உயிரிழப்பும் திடீரென அதிகரித்துள்ளது.
குஜராத் மாநிலத்தில் இதுவரை 3 ஆயிரத்து 301 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 151 பேர் உயிரிழந்துள்ளனர். 300 பேர் குணமடைந்துள்ளனர். பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை திடீரென்று அதிகரிப்பதற்கும், உயிரிழப்புக்கும் சீனாவின் வூஹான் நகரைத் தாக்கிய எல்-வகை கரோனா வைரஸ் காரணமாக இருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
ஏனென்றால் சீனாவின் வூஹான் நகரைத் தாக்கிய எல்-வகை கரோனா வைரஸால்தான் அதிகமான உயரிழப்பு நேர்ந்தது. அதேபோல குஜராத்திலும் எல்-வகை கரோனா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என ஆய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர். ஆனால், இதுவரை அந்தத் தகவலை ஆய்வாளர்கள் உறுதி செய்யவில்லை.
கரோனா வைரஸில் எஸ்-வகை வைரஸால் அதிக அளவு உயிர் சேதத்தை ஏற்படுத்த முடியாது ஆனால் எல்-வகை கரோனா வைரஸால் அதிகமான உயிரிழப்பை உண்டாக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது
அகமதாபாத்தில் உள்ள குஜராத் உயிரித் தொழில்நுட்ப ஆய்வு மையத்தைச் (ஜிபிஆர்சி) சேர்ந்த இயக்குநர் ஆராய்ச்சியாளர் ஜி.சி.ஜோஷி கூறுகையில், “வெளிநாடுகளில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளைப் பரிசோதித்தபோது அதில் எல்-வகை கரோனா வைரஸ் அமைப்பை அதிகம் ஒத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
உலக அளவில் கரோனா வைரஸால் அதிகமான உயிரிழப்புகளைச் சந்தித்த நாடுகளில் எல்லாம் எல்-வகை கட்டமைப்பைக் கொண்ட கரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக இருந்துள்ளது. குறிப்பாக சீனாவின் வூஹான் நகரில் எல்-வகை கரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக இருந்தது.
நோயாளிகளின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில் பலவற்றிலும் எல்-வகை கட்டமைப்பு கரோனா வைரஸ்தான் அதிகமாக இருந்தது. ஆனால் எஸ்-வகை கரோனா வைரஸ் கட்டமைப்பு பெரியளவுக்கு இல்லை.
எஸ்-வகை, எல்-வகை கரோனா வைரஸ் இடையே அதிகமான வேறுபாடு இருக்கிறது. அந்த வைரஸ் பெருகுவதிலும் தனது உருவத்தை மாற்றிவதிலும்கூட சதவீதத்தின் அடிப்படையில் வேறுபாடு இருக்கிறது. கரோனா வைரஸில் அதிகமான உயிரிழப்பை தரக்கூடியது எல்-வகை கட்டமைப்பைக் கொண்ட கரோனா வைரஸ்தான் என்பது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. இது வூஹான் நகரில் மட்டுமே காணப்பட்டது.
ஆனால், இதுவரை குஜராத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளிடம் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில் அது எல்-வகை கரோனா வைரஸ் கட்டமைப்பா என்று கண்டுபிடிக்கவில்லை. அது தொடர்பாக ஆய்வும் நடத்தவில்லை. ஆனால், உயிரிழப்பு அதிகமாக இருந்தால் எல்-வகை கரோனா பாதிப்பு இருக்கும்” எனத் தெரிவித்தார்
தொற்றுநோய் தடுப்பு வல்லுநர் அதுல் பட்டேல் நிருபர்களிடம் கூறுகையில் “ குஜராத்தில் எஸ்-வகை கரோனா வைரஸைவிட எல்-வகை கரோனா வைரஸ்தான் அதிகமாக இருக்கும் என்று சந்தேகிக்கிறோம். அதனால்தான் அதிகமான உயிரிழப்புகளை கொண்டுவர முடியும். எல்-வகை கரோனா வைரஸ் பிறப்பிடம் சீனாவின் வுஹான் நகரமாகும்” என்று ஜோஷி தெரிவித்தார்.
எஸ்-வகை, எல்-வகை கரோனா வைரஸ் என்றால் என்ன?
ஷாங்காய் நகரில் உள்ள பெக்கிங் பல்கலைக்கழகம் கரோனா வைரஸ் அல்லது கோவிட்-19 குறித்து நடத்திய முக்கிய ஆய்வில், எஸ்-வகை, எல்-வகை என்று இரு கரோனா வைரஸ்கள் இருக்கின்றன என்று அறிவித்தது
.
இதில் எல்-வகை கட்டமைப்புடைய கரோனா வைரஸ் மிகவும் வேகமானவை. மனிதர்களைத் தாக்கினால் வேகமான உயிரிழப்பை தரக்கூடியது. உயிரிழந்தவர்களில் 70 சதவீதம் எல்-வகை கரோனா வைஸால் இறந்துள்ளனர். மீதமுள்ளவர்கள் எஸ்-வகை வைரஸால் இறந்துள்ளனர்.
சீனாவின் வூஹான் நகரில்தான் எல்-வகை கரோனா வைரஸ் அதிகமாக இருந்தது.
ஆனால், எஸ்- வகை கரோனா வைரஸ்கள் புதிதாகப் பாதிக்கப்படும் மக்களிடம் இருந்தது. ஆனால் இந்த வகை வைரஸால் அதிகமான உயிரிழப்பு ஏற்படாது. இந்த வைரஸைப் பரப்புவதற்கான வாய்ப்புதான் அதிகமாக இருக்குமே தவிர உயிரிழப்பு அதிகமாக இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT