Published : 27 Apr 2020 08:22 AM
Last Updated : 27 Apr 2020 08:22 AM
கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் கடந்த மாதம் 25-ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் அனைத்து நீதிமன்றங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் முக்கியமான வழக்குகளை மட்டுமே உச்ச நீதிமன்ற நீதிபதிகள் காணொலி காட்சி மூலம் விசாரித்து வருகின்றனர்.
வழக்கமாக உச்ச நீதிமன்றத்தில் 16 நீதிபதிகள் அமர்வு செயல்படும். பொதுவாக, உச்ச நீதிமன்றத்தில் சராசரியாக ஒரு மாதத்தில் சுமார் 3,500 வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்படும். ஆனால் தற்போது இரண்டு அல்லது 3 அமர்வுகள் மட்டுமே வழக்குகளை விசாரிக்கின்றன.மார்ச் 23 முதல் ஏப்ரல் 24 வரையிலான ஒரு மாதத்தில் மொத்தம் 593 வழக்குகள் விசாரிக்கப்பட்டுள்ளன. இதில் 215 வழக்குளுக்கு தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதுபோல, கடந்த ஒரு மாதத்தில் 84 மறுஆய்வு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
காணொலி காட்சி மூலம் விசாரணை நடைபெறும்போது சில நேரங்களில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு விசாரணை தடைபடுவது உண்டு. வழக்கறிஞர்களின் வீடு, அலுவலகங்களில் உள்ள இணையதள இணைப்பால் இந்தப் பிரச்சினை ஏற்பட்டதாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன. வீடுகளில் இருந்தவாறு நீதிபதிகள் விசாரணையை காணொலி காட்சி மூலம் மேற்கொள்கின்றனர். இதற்காக, நீதிபதிகளின் வீடுகளுக்கு 100 எம்பிபிஎஸ் திறனுள்ள அதிவேக இணையதள இணைப்பை மத்திய அரசு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.- பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT