Published : 26 Apr 2020 05:57 PM
Last Updated : 26 Apr 2020 05:57 PM
கரோனா வைரஸைக் கையாளும் விஷயத்தில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசில் ஜனநாயகப் பொறுப்பு ஒட்டுமொத்தமாக இல்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி சாடியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெய்சூரி பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது:
''கரோனா வைரஸைச் சமாளிக்க போதுமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று இல்லாமல், நிர்வாகிகள் ஆழ்ந்து சிந்திக்காமல் எடுத்த முடிவுகளால் தங்களின் திறமையின்மையை நிரூபித்துவிட்டனர்.
40 நாட்கள் லாக் டவுனின் கடைசி வாரத்தில் இருக்கிறோம். ஆனால், நீங்கள் மக்களுக்கு வெறும் 4 மணி நேரம் மட்டுமே அவகாசம் கொடுத்துவிட்டு திடீரென லாக் டவுனை அறிவித்துவிட்டீர்கள். லாக் டவுனால் வரும் பின்விளைவுகளை எதிர்கொள்ள மக்களும், மாநில அரசும் முழுமையாகத் தயாராகவிடாமல் அறிவித்துவிட்டீர்கள்.
லாக் டவுன் அமலாகியதிலிருந்து, புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் குடியிருப்பு, வாழ்வாதாரத்தை இழந்து தங்கள் கிராமத்துக்கும், வீட்டுக்கும் செல்வதைக் காண முடிகிறது. சமூகப் பரவலைத் தடுக்க சமூக விலகல் வேண்டும் எனும் அம்சம் இந்த லாக் டவுனில் நிராகரிக்கப்பட்டுவிட்டது.
உலகில் உள்ள மற்ற தலைவர்கள் போல் அல்லாமல் மக்கள் பிரச்சினைகளைப் பற்றி ஊடகங்களிடம் பேசாமல், சந்திக்காமல் நீங்கள் இருந்து வருகிறீர்கள். பெரும்பாலான நாடுகளில் உள்ள தலைவர்கள் ஊடகங்களை வழக்கமாகச் சந்தித்து, கேள்விகளுக்குப் பதில் அளிக்கிறார்கள்
ஊடகங்களைச் சந்தித்து பதில் அளிக்கும் இந்த வழிதான் நம்பகத்தன்மையாகவும், மக்களுக்கு நம்பிக்கையாகவும் இருக்கும். இந்த அரசு கரோனா வைரஸைச் சமாளிக்க தகுதியானது, சூழலை எதிர்கொள்ளும் என நம்புவார்கள்.
கேரள முதல்வர் நாள்தோறும் ஊடகங்களைச் சந்தித்துப் பேசுகிறார். அதன் மூலம் மக்களுக்கு நம்பிக்கையூட்டுகிறார். உங்களின் ஆட்சியில் ஜனநாயக நம்பகத்தன்மையே ஒட்டுமொத்தமாக இல்லை.
கடந்த 5 ஆண்டுகளில் ரூ.7.76 லட்சம் கோடி கடன் பெற்ற பெரிய கோடீஸ்வரர்கள், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மத்திய அரசால் கடன் தள்ளுபடி செய்ய உங்கள் அரசால் முடிந்தது. அப்படியென்றால், பெரும்பான்மையான மக்களுக்கு உணவு வழங்கவும், நிதியுதவி வழங்கும் உங்கள் அரசுக்கு நிதிப்பற்றாக்குறை இருக்கக்கூடாது.
அவசரகதியில் நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட லாக் டவுனின் போதே புலம்பெயர் தொழிலாளர்கள் பிரச்சினை தொடங்கிவிட்டது. ஆனால், மாநில அரசுகள்தான் தொழிலாளர்களுக்கு உறைவிடம், உணவு, பராமரிப்பு அனைத்தையும் வழங்க வேண்டும் என்றும் லாக் டவுன் காலத்தில் சமூக விலகலையும் கடைபிடிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு கூறியது. இது நியாயமில்லாதது. இதுவரை மாநில அரசுகளுக்கு ஜிஎஸ்டி நிலுவைத் தொகை வழங்கப்படவில்லை. உண்மையில் அனைத்து மாநிலங்களுக்கும் நிதி பரவலாக வழங்கப்படுவது அவசியம்தானே.
பிரதமர் பெயரில் ஒரு தனியார் அறக்கட்டளை நிதி திரட்டுகிறது. அதற்கு அரசியல் அதிகாரமும் வழங்கப்படுகிறது. அந்த அறக்கட்டளைக்கு தணிக்கையும் இல்லை, அரசின் தலைமை கணக்குத் தணிக்கையாளரும் தணிக்கை செய்ய முடியாது.
அரசு ஊழியர்களின் ஊதியம் கட்டாயமாக எடுக்கப்பட்டு இந்த அறக்கட்டளைக்கு மாற்றப்பட்டு வருகிறது. முறையாக அந்தப் பணம் பிரதமர் நிவாரண நிதிக்குத்தான் செல்ல வேண்டும். கரோனா வைரஸை எதிர்த்துப் போராடும் மாநில அரசுகளின் கரங்களை வலுப்படுத்த இந்த நிதியைப் பயன்படுத்த வேண்டும். மத்திய அரசும் தேவையில்லாத செலவுகளைக் குறைக்க வேண்டும்.
மத்திய அரசு வெளியிடும் அனைத்து அறிக்கைகளையும் புரிந்து கொள்ள முடியாமல் அந்த அறிக்கையைப் புரிந்துகொள்ள மற்றொரு துணை அறிக்கை விடும் சூழல்தான் இருக்கிறது. பணமதிப்பு நீக்கத்திலிருந்து இந்த நிலை தொடர்கிறது. இதிலிருந்து ஆட்சி நிர்வாகத்தில் இருப்பவர்கள் ஆழ்ந்த சிந்தனையின்றி முடிவுகளை எடுக்கிறார்கள். திறமையின்மையாக இருக்கிறார்கள் என்பதை நிரூபிக்கிறார்கள்.
கரோனா வைரஸை வகுப்புவாத சாயம் பூசக்கூடாது. இந்தியர்கள் அனைவரும் சேர்ந்து போரிடினால்தான் கரோனாவை ஒழிக்கமுடியும், வெல்ல முடியும். ஆனால், பொறுப்பில்லாமல் தப்லீக் ஜமாத் நிர்வாகிகள் செய்த செயல் மன்னிக்க முடியாது என்றாலும், அதற்காக ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் இலக்காக்கக் கூடாது. இது சமூகத்தில் பெரும் பிளவுகளை உருவாக்கும், இந்தியாவின் வலிமையை உருக்குலைக்கும்.
இந்த வகுப்புரீதியான பிரச்சாரம் உலகின் பல நாடுகளில் பணியாற்றும் இந்தியர்களால் செய்யப்படுகிறது. இதில் மத்திய அரசு தலையிட்டு நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் இது கரோனவுக்கு எதிரான தோல்வியாக மாறிவிடும்''.
இ்வ்வாறு சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT