Published : 26 Apr 2020 04:38 PM
Last Updated : 26 Apr 2020 04:38 PM
கரோனா வைரஸைக் கண்டுபிடிக்கும் பரிசோதனை நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் பேருக்கு நடத்தப்பட வேண்டும். அதற்கு இடையூறாக இருக்கும் தடைகளைத் தகர்க்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து கரோனா வைரஸ் குறித்த எச்சரிக்கைகளை மத்திய அரசுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கொடுத்து வந்தார். கரோனா வைரஸ் இந்தியாவுக்குள் வந்தபின் உடனடியாக லாக் டவுனை அறிவிக்கவும் வலியுறுத்தினார்.
லாக் டவுனால் கரோனா வைரஸ் கட்டுக்குள் இருக்குமே தவிர, பரவுவதைத் தடுக்க இயலாது. ஆதலால், மக்களுக்குத் தீவிரமாக பரிசோதனை நடவடிக்கைகளைத் தொடர வேண்டும் எனத் தெரிவித்தார். ஆனால் இப்போது நாள் ஒன்றுக்கு 40 ஆயிரம் முதல் 49 ஆயிரம் பரிசோதனை நடத்தப்பட்டு வரும் நிலையில் அது போதாது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்
இது தொடர்பாக ட்விட்டரில் ராகுல் காந்தி பதிவிட்ட கருத்தில், “தீவிரமாகப் பரிசோதனை செய்வதுதான் கரோனா வைரஸைத் தோற்கடிக்கும் ஆயுதம். இப்போது இந்தியாவில் நாள்தோறும் 40 ஆயிரம் கரோனா பரிசோதனைகள் செயயப்படுகின்றன. இதை ஒரு லட்சமாக உயர்த்த வேண்டும்.
மக்களுக்கு அதிகமாக கரோனா பரிசோதனை நடத்துவதுதான் வைரஸைத் தடுக்கும் வழி என்று வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். நாள்தோறும் நாம் இப்போது செய்யும் 40 ஆயிரம் பரிசோதனைகளை ஒரு லட்சமாக அதிகரிக்க வேண்டும். பரிசோதனைக் கருவிகள் போதுமான அளவில் இருப்பு இருக்கிறது. பிரதமர் மோடி வேகமாகச் செயல்பட்டு , தடைகளைக் களைந்து பரிசோதனைகளை வேகப்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதே கருத்தை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான மணிஷ் திவாரியும் முன்வைத்துள்ளார். அவர் நிருபர்களிடம் பேசுகையில், “ நம் நாட்டில் இருக்கின்ற வளங்கள் மூலம் நாள்தோறும் ஒரு லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை நடத்த முடியும். ஆனால், ஏன் 40 ஆயிரம் பேருக்கு மட்டுமே நடத்தப்படுகிறது.
பிரச்சினையின் அளவைக் குறைத்துக் காட்ட மத்திய அரசு முயல்கிறதா அல்லது பரிசோதனையின் அளவை அதிகரித்தால், அதனால் வரும் விளைவுகளைச் சமாளிக்கத் திறமையில்லை என உணர்கிறதா?
கரோனா வைரஸைச் சமாளித்து லாக் டவுனைத் தளர்த்தல், அடுத்த 3 மாதத்தில் நிலைமையைச் சீராகக் கொண்டு சேர்த்தல் ஆகியவற்றுக்கு பிரதமர் மோடி முழுமையான, விரிவான நடவடிக்கைகளை நாளை நடக்கும் முதல்வர்கள் கூட்டத்தில் எடுப்பார் என நம்புகிறோம்.
லாக் டவுன் முடிந்த பின் என்ன செய்யலாம், அதன்பின் வரும் பிரச்சினைகள் குறித்து மாநிலங்கள் திட்டமிட முடியாத சூழலில், இந்த பேரிடரைச் சமாளிக்க தேசிய அளவில் திட்டம் ஏதும் இல்லை. அடுத்த 3 மாதங்களுக்கு ஒவ்வொரு மாநிலத்தைச் சமாளிக்கவும், நாடு முழுவதற்கும் திட்டங்களை வகுக்க வேண்டும். வல்லுநர்கள் கருத்துப்படி கரோனா வைரஸ் இங்கு சிறிது காலம் பாதிப்பு ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
சொந்த மாநிலங்களுக்கும், கிராமத்துக்குள்ளும் செல்ல முடியாமல் தவிக்கும் புலம்பெயர் தொழிலாளர்களைச் சமாளிக்க மத்திய அரசிடம் ஏதும் திட்டம் இருக்கிறதா?'' எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT