Published : 26 Apr 2020 02:54 PM
Last Updated : 26 Apr 2020 02:54 PM
கரோனா யுத்தத்தின் பாதியில் நிற்கிறோம். கவனமாகச் செயல்படுங்கள். போரை மக்கள் நடத்தினால்தான் வெற்றி கிடைக்கும் என்று பிரமதர் மோடி மன் கி பாத் நிகழ்ச்சியில் அறிவுறுத்தினார்.
ஒவ்வொரு மாதத்திலும் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று, வானொலியில் 'மன் கி பாத்' என்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசி வருகிறார். கரோனா வைரஸ் பரவுவது தீவிரமடைந்துள்ள நிலையில் இதுவரை 800க்கும் மேற்பட்டோரின் உயிரைக் குடித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் 26 ஆயிரத்தைக் கடந்துவிட்டனர்.
இந்நிலையில், இன்று 41-வது 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மக்களிடம் பேசியதாவது:
''கரோனா வைரஸுக்கு எதிரான போரை மக்கள் ஏற்று நடத்தினால் மட்டுமே இந்த நாடு பெருந்தொற்று நோயிலிருந்து மீண்டு வர முடியும். கரோனா வைரஸ் தாங்கள் வசிக்கும், வாழும் பகுதிகளில் இன்னும் தாக்கவில்லை என்று மக்கள் மனநிறைவு கொள்ளக்கூடாது.
கரோனா யுத்தத்தின் நடுப்பகுதியில் நாடு இருக்கிறது. மக்கள் வரும் காலங்களிலும் கவனத்துடன், முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். பொருளாதார நடவடிக்கைக்காக மத்திய அரசு, மாநில அரசுகள் லாக் டவுனைத் தளர்த்திவிட்டாலும் மக்கள் எச்சரிக்கையுடன் செயல் பட வேண்டும்
மக்கள் யாரும் அதீத நம்பிக்கை கொள்ள வேண்டாம். தங்கள் நகரை, கிராமத்தை, அலுவலகத்தை கரோனா தாக்கவில்லை என்று உற்சாகமும் அடைய வேண்டாம். அதுபோன்ற தவறான எண்ணத்தை விதைக்காதீர்கள். கரோனாவில் அனுபவப்பட்ட நாடுகள் அதிகமாக பாடங்கள் எடுத்துள்ளன. நாம் கவனக்குறைவாகச் செயல்படும்போதுதான் விபத்துகள் ஏற்படும் என்பதை நினைவுபடுத்துகிறேன்.
அவசரகாலப் பணியாளர்கள், மக்கள் நலப் பணியாளர்கள் இந்த வைரஸை எதிர்த்துப் போரிட்டு வருகிறார்கள். மக்களின் தீர்மானத்தால் வர்த்தகம், அலுவலகம், கல்வி நிறுவனங்கள், மருந்துத்துறை அனைத்திலும் புதிய மாற்றங்களை நோக்கி நகர்கின்றன.
நெருப்பு, கடன் , நோய் ஆகியவற்றை முதல் வாய்ப்பிலேயே எளிதாக எடுத்தால் அது வளர்ந்துவிடும். ஆபத்தான நிலைக்குச் செல்லும். நம்மை முழுமையாக மிரட்டும். ஆதலால், எச்சரிக்கை உணர்வோடு இருக்க வேண்டும்.
ஏழைளுக்கு உணவு, மருந்துகள் வழங்கி பலரும் உதவி செய்கிறார்கள். அது ஒரு மகா யாகத்துக்கு ஒப்பானதாகும். இந்தப் போரை நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் வீரராக இருந்து போரிட்டு வருகிறோம். இந்தச் சூழலிலும் உதவி தேவைப்படும் நாடுகளுக்கு மருந்துகளை, உணவுகளை நாம் அனுப்பி வருகிறோம்.
முகக்கவசம் அனைவரும் அணிதல் நாகரிக சமூகத்தின் ஒரு பகுதியாக மாறும். மக்கள் பொது இடங்களில் எச்சில் துப்புவதை நிறுத்திவிட்டார்கள். இதுபோன்ற மோசமான பழக்கத்தை நிறுத்த இதுவே சரியான நேரம். இது நம்முடைய சுத்தத்தை மட்டும் அதிகப்படுத்தாமல் நோய் பரவுவதிலிருந்து காக்கும்.
நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பாரம்பரிய யோகா, ஆயுர்வேதத்தின் மூலம் முடியும். மக்கள் அதில் கவனம் செுலுத்தலாம். யோகாவை ஏற்றது போல், இந்தியாவின் பாரம்பிரய மருத்துவத்தை உலகம் புரிந்துகொள்ளும். நூற்றுக்கணக்கான ஆண்டுகள் அந்நிய ஆட்சியால், நம்முடைய பாரம்பரியத்தை நாம் மறந்துவிட்டோம்
மக்கள் அனைவரும் covidwarriors.gov.in என்ற இணையதளத்தில் சேர்ந்து மருத்துவர்கள், உள்ளாட்சி நிர்வாகத்துடன் இணைந்து சேவை செய்யுங்கள். மக்கள் அனைவருக்கும் அக்சய திரிதியை, ரமலான் வாழ்த்துகள். ரமலான் மாதத்தில் இதற்கு முன் மக்கள் தொழுததைவிட கூடுதலாக உலகின் நன்மைக்காக பிரார்த்தனை செய்யுங்கள். வழக்கமான உற்சாகத்துடன் ரமலானைக் கொண்டாடுங்கள்.
இந்த கரோனா வைரஸ் உலகம் முழுவதும் பண்டிகைகளைக் கொண்டாடும் விதத்தை மாற்றிவிட்டது. பிகு, பைசாகி, தமிழ்ப் புத்தாண்டு, விஷு, ஒடியா புத்தாண்டு அனைத்தின் கொண்டாட்டத்தையும் மாற்றிவிட்டது. மக்கள் வீட்டுக்கள் இருந்தபடியே கொண்டாடினார்கள்.
கரோனா வைரஸ் மூலம் மக்கள் இந்த உலகத்தைப் பார்க்கும் கோணமும், சுகாதாரப் பணியாளர்களை அணுகும் முறையும் மாறியுள்ளது. முக்கியத்துவம் தெரிந்துள்ளது. பக்கத்தில் இருக்கும் கடைக்காரர்களின் அருமை தெரிந்துள்ளது.
மக்கள் தொடர்ந்து சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும். 2 அடி தொலைவில் மற்றவர்களுடன் பேச வேண்டும். அதுதான் ஆரோக்கியமாக வாழவைக்கும்’’.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT