Published : 07 Aug 2015 09:53 AM
Last Updated : 07 Aug 2015 09:53 AM
ராணுவத்தில் பணியாற்றிய மோப்ப நாய், குதிரை, கோவேரிக் கழுதைகள் கருணைக்கொலை செய்யப்படுவதை தடுக்க புதிய முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி அவற்றை தொண்டு நிறுவனங்களிடம் (என்ஜிஓ) தத்து கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்திய ராணுவத்தில் சுமார் 10,000 குதிரைகள்-கோவேரி கழுதைகள், 1,000 மோப்பநாய்கள் உள்ளன. மலை, குளிர் பிரதேசங்களில் குதிரை, கோவேரி கழுதைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவை ராணுவ வீரர்களுக்கு உணவு, ஆயுதங்களை சுமந்து செல்கின்றன.
காஷ்மீரின் லடாக் மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் மலைகளில் ஹெலிகாப்டர், வாகனங்கள் செல்ல முடியாத பகுதிகளுக்கு குதிரைகளும் கோவேரிக் கழுதைகளும் பொதிகளை சுமந்து செல்கின்றன. குடியரசு தலைவரின் பாதுகாப்பு படையிலும் குதிரைப்படை உள்ளது. உலகில் இங்கிலாந்து, இந்தியா ஆகிய இருநாடுகளில் மட்டுமே குதிரைப் படை இன்னும் பயன்பாட்டில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதேபோல மோப்பநாய்கள் வனப்பகுதிகளில் புதைத்து வைக்கப்படும் கண்ணிவெடி, வெடிகுண்டு போன்றவற்றை கண்டுபிடிக்க பெரிதும் உதவி வருகின்றன.
குரைக்காத மோப்ப நாய்கள் சந்தேகமானவற்றை காட்டி கொடுக்க வேண்டி காதுகளை அசைத்து காட்டும் பண்பு உடையது. இதை புரிந்து கொண்டு அதன் பயிற்சியாளர் குண்டுகளை கண்டுபிடித்து அகற்றுவார்.
இந்த மூன்று விலங்குகளையும் பராமரிக்க ’ஆர்.வி.சி’ (Remount Veterinary Core) என்ற பெயரில் ராணுவத்தில் தனிப்பிரிவு உள்ளது. பொதுவாக குதிரை சுமார் 17 ஆண்டுகள், கோவேரிக் கழுதை 15 ஆண்டுகள், மோப்பநாய் 6 முதல் 8 ஆண்டுகள் வரை ராணுவத்தில் பணியாற்றுகின்றன. அதன் பிறகு ஓய்வு பெறும் விலங்குகளை பராமரிக்க ராணுவத்தில் தனியாக முகாம்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் நோய்வாய்ப்பட்டு சிகிச்சைக்கு பலனளிக்காமல் இருக்கும் விலங்குகளுக்கு ஊசி மருந்து செலுத்தி கருணைக்கொலை செய்யப்படுகின்றன.
இதை எதிர்த்து பொதுநல அமைப்புகள் மற்றும் விலங்குகள் ஆர்வலர்கள் டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இவை கடந்த ஜூன் மாதத்தில் விசாரணைக்கு ஏற்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்திய ராணுவம் சார்பில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், கருணைக்கொலை செய்வதை தடுக்கும் வகையில் வேறு பல புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் சார்பில் மோப்பநாய்களுக்கான மறுவாழ்வு திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளது. வரும் செப்டம்பர் 9-ல் மீண்டும் விசாரணைக்கு வர இருக்கும் இந்த வழக்கில் இந்திய ராணுவம் சார்பில் புதிய திட்ட அறிக்கைகள் நீதிபதிகள் முன்னிலையில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து ’தி இந்து’விடம் ராணுவத்தின் ஆர்.வி.சி வட்டாரங்கள் கூறியபோது, விலங்குகளை கருணை கொலை செய்வது என்பது ஒருவகையில் விலங்குகள் கொடுமை தடுப்புச் சட்டம் 1960-ஐ மீறுவதாகும். இதனால் அவற்றை பொதுநல அமைப்புகளிடம் தத்து கொடுக்க யோசித்து வருகிறோம் என்று தெரிவித்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT