Last Updated : 26 Apr, 2020 08:01 AM

 

Published : 26 Apr 2020 08:01 AM
Last Updated : 26 Apr 2020 08:01 AM

கர்நாடகாவில் கரோனா பாதிக்காத மாவட்டங்களில் தொழிற்சாலைகள் இயங்க அனுமதி- உரிமையாளர்கள், தொழிலாளர்கள் மகிழ்ச்சி

பெங்களூரு

கர்நாடகாவில் கரோனா வைரஸ் பாதிப்பு இல்லாத 9 மாவட்டங்களில் தொழிற்சாலைகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கர்நாடகாவில் ஒரு மாதத்துக்கு பிறகுஊரடங்கு விதிமுறைகள் தளர்த்தப்பட்டன. பெங்களூருவில் உள்ள தகவல் தொழில்நுட்ப மற்றும் உயிரி தொழில்நுட்ப நிறுவனங்கள் கடந்தபுதன்கிழமை முதல் 50 சதவீதஊழியர்களுடன் இயங்க அனுமதிக்கப்பட்டது. இதையடுத்து பேக்கரி, செல்போன் ரீசார்ஜ் கடை, வாகன பழுது நீக்கும் கடைகள் மீண்டும் திறக்க அனுமதிக்கப்பட்டது. மேலும் கரோனா பாதிப்பு இல்லாத பகுதிகளில் வேளாண் மற்றும்கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில் கர்நாடக தலைமைச் செயலாளர் விஜயபாஸ்கர் நேற்று பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கர்நாடகாவில் சனிக்கிழமை மாலை நிலவரப்படி 489 பேர் கரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதில் 183 பேர்குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். பெங்களூரு, மைசூரு, கல்புர்கி உள்ளிட்ட மாவட்டங்களில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளதால், அங்கு ஊரடங்கு விதிமுறைகள் தீவிரமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

அதேவேளையில் ராம்நகர், கொப்பல், ஷிமோகா, சிக்கமகளூரு, கோலார், சாம்ராஜ்நகர், ரெய்ச்சூர், ஹாவேரி, ஹாசன் ஆகிய 9 மாவட்டங்களில் இதுவரை ஒருவருக்கு கூட கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை. இந்தபகுதிகள் பசுமை மண்டலமாகஅறிவிக்கப்பட்டு, படிப்படியாகஊரடங்கு விதிமுறைகள் தளர்த்தப்படும். அங்குள்ள தொழிற்சாலை உரிமையாளர்களுடன் அதிகாரிகள் கடந்த சில தினங்களுக்கு முன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினர்.

இதைத் தொடர்ந்து கரோனாபாதிப்பு இல்லாத‌ ராம்நகர், கொப்பல், ஷிமோகா, சிக்கமகளூரு, கோலார், சாம்ராஜ்நகர், ரெய்ச்சூர், ஹாவேரி, ஹாசன் ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரிய தொழிற்சாலைகள் வரும் திங்கள்கிழமை முதல் இயங்க அனுமதி வழங்கப்படுகிறது. இங்குள்ள தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் முக கவசம் அணிதல், கிருமி நாசினி பயன்படுத்துதல், சமூகஇடைவெளி பின்பற்றுதல் உள்ளிட்ட பாதுகாப்பு கட்டுப்பாடுகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றும் தொழிற்சாலைகளில் கரோனா வைரஸ் தொற்றை கண்டறியும் மருத்துவப் பரிசோதனை மையம் அமைக்கப்பட வேண்டும். தொழிலாளர்களை பாதுகாப்பாக அழைத்துவர அரசுப் பேருந்துகளை ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும். பேருந்தில் 40 சதவீதம் மட்டுமே இருக்கைகளை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட விதிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

கர்நாடக அரசின் இந்த அறிவிப்பால் கொப்பல், ரெய்ச்சூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பணியாற்றும் நூற்பாலை தொழிலாளர்களும், கோலார் மாவட்டத்தில் உள்ள ஆட்டோமொபைல் தொழிற்சாலை தொழிலாளர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுபோல் அவற்றின் உரிமையாளர்களும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x