Published : 25 Apr 2020 06:54 PM
Last Updated : 25 Apr 2020 06:54 PM

இதுதான் உயர்ந்த உள்ளம்: கர்நாடகாவில் தன் நிலத்தை விற்று ஏழைகளுக்கு உணவளிக்கும் சகோதரர்கள்

உதவும் கரங்கள்: பிரதிநிதித்துவப் படம்.

கர்நாடகாவில் வர்த்தகம் செய்யும் இரண்டு சகோதரர்கள் லாக்-டவுன் காலத்திலும், அதனால் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு உதவ தங்களது நிலத்தை விற்றுள்ளது பாராட்டுக்களைப் பெற்றுத்தந்துள்ளது.

கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தில் தாஜமுல் பாஷா, முஸாமில் பாஷா என்கிற சகோதரர்கள் கோலாரில் தினக்கூலிகள் லாக் டவுன் காலத்தில் படும் கஷ்டங்களைப் பார்க்கப் பொறுக்க முடியாமல் தங்கள் நிலத்தை ரூ.25 லட்சத்துக்கு விற்று நிதி திரட்டியுள்ளனர்.

இதன் மூலம் முதற்கட்டமாக ஏழைகளுக்கு வேண்டிய உணவு தானியங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள், எண்ணெய் ஆகியவற்ற வாங்கியுள்ளனர். தங்கள் வீட்டுக்கருகே டெண்ட் கொட்டகை போட்டு ஏழைகளுக்கும் தினக்கூலிகளுக்கும் உணவளிக்க சமுதாய சமையற்கூடம் உருவாக்கினர்.

உணர்ச்சிவயப்பட்ட நிலையிலிருந்த தாஜமுல் பாஷா தனியார் ஆங்கில ஊடகத்துக்குத் தெரிவிக்கும் போது, “எங்கள் பெற்றோர் நாங்கள் சிறுவயதாக இருந்த போதே இறந்து விட்டனர். தாய் வழிப் பாட்டி எங்களை வளர்த்தார்கள். கோலாரில் இந்து, முஸ்லிம்கள், சீக்கியர்கள் எந்த வித மதப்பாகுபாடுமின்றி எங்களுக்கு உதவினர்” என்றார்.

பாஷா சகோதரர்கள் வாழைத்தோட்டம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலும் ச்செய்து வருகின்றனர்.

இதுவரை பாஷா சகோதரர்கள் 3,000 ஏழைக்குடும்பங்களுக்கு உணவுப்பொருள், எண்ணெய்,சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை விநியோகித்தனர். மேலும் சானிட்டைசர்கள், முகக்கவசங்களையும் ஏழைகளுக்கு வழங்கியுள்ளனர்.

கோலார் நிர்வாகம் இவர்களுக்கு விநியோகம் செய்ய சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது.

இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 24,506 ஆக அதிகரித்துள்ளது. 775 பேர் பலியாகியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x