Last Updated : 25 Apr, 2020 05:15 PM

1  

Published : 25 Apr 2020 05:15 PM
Last Updated : 25 Apr 2020 05:15 PM

கச்சா எண்ணெய் விலை வீழ்ந்தும் விடிவில்லை; 40 நாட்களாக மாறாத பெட்ரோல் டீசல் விலை: நுகர்வோர்களுக்குப் பலனளிக்க மனமில்லாத எண்ணெய் நிறுவனங்கள்

கோப்புப்படம்

புதுடெல்லி

பெட்ரோலியக் கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் படுவீழ்ச்சி அடைந்தும், அதன் பலன் இந்திய நுகர்வோர்களுக்கு எண்ணெய் நிறுவனங்கள் வழங்காமல் இருப்பது கேள்வியை எழுப்பியுள்ளது.

அமெரிக்க பிராண்ட் கச்சா எண்ணெய் விலை இந்த வாரத் தொடக்கத்தில் மைனஸ் 34 டாலராக விலையில் வீழ்ச்சி அடைந்தது. உற்பத்தி அதிகம், வாங்குவதற்கு நிறுவனங்கள் தயராக இல்லை என்பதால், உற்பத்தி நிறுவனங்களை வாங்கும் நிறுவனங்களுக்கு பணம் கொடுத்து ஸ்டாக் வைக்க வலியுறுத்தும் நிலைமை ஏற்பட்டது. இந்தத் தாக்கம் ஆசியச் சந்தையில் எதிரொலித்து கச்சா எண்ணெய் பேரல் 20 டாலராக வீழ்ச்சி அடைந்தது. இதனால் மக்களுக்கு ஏதேனும் பலன் அளிக்கும் வகையில் டீசல், பெட்ரோலின் விலை குறையும் எனப் பரவலாக எதிர்பார்க்ப்பட்டது.

ஆனால், அனைத்தும் ஏமாற்றத்தில் முடிந்துள்ளது. கரோனா வைரஸைக் காரணம் காட்டி, எண்ணெய் நிறுவனங்கள் கடந்த 40 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையை மாற்றமால் வைத்துள்ளனர்.

கடந்த 2018-ம் ஆண்டிலிருந்து நாள்தோறும் விலையை மாற்றிக்கொள்ள அனுமதியளித்தும் கடந்த 40 நாட்களாக விலையில் மாற்றம் செய்யாதது ஏன் என்ற கேள்வி எழுகிறது.

கடைசியாக பெட்ரோல், டீசல் விலையில் உற்பத்தி வரி லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தப்பட்டது. அப்போதுகூட கச்சா எண்ணெய் விலை 30 சதவீதம் சரிந்து 35 டாலராக ஒரு பேரல் இருந்தது. அந்தப் பலனையும் மக்களுக்கு வழங்காமல் மத்திய அரசு உற்பத்தி வரியை உயர்த்தி எடுத்துக்கொண்டது.

மார்ச் 14-ம் தேதியிலிருந்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 40 முதல் 50 சதவீதம் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்தியச் சந்தைக்குள் பேரல் 20 டாலராகவும் சரி்ந்தது. ஆனால் கரோனாவைக் காரணமாகக் காட்டி, சில்லறை விலையில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை. நுகர்வோருக்குப் பலனும் கிடைக்கவில்லை.

கடந்த மார்ச் 14-ம் தேதி பெட்ரோலியக் கச்சா எண்ணெய் விலை பேரல் 35 டாலராக இருந்தது. அப்போது இந்தியாவில் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ரூ.69.87 பைசாவாகவும், டீசல் விலை ஒரு லிட்டர் ரூ.62.58 பைசாவாகவும் இருந்தது. ஏற்குறைய 40 நாட்களில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்தபோதும், ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.69.59 பைசாவுக்கும், ஒரு லிட்டர் டீசல் விலை 62.29 பைசாவுக்கும் விற்பனை செய்யப்படுவது நுகர்வோர்களை ஏமாற்றும் செயல்தானே.

உண்மை நிலவரம் என்பது கடந்த மார்ச் 16-ம் தேதியிலிருந்து எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை நாள்தோறும் சர்வதேச சந்தைக்கு ஏற்றார்போல் மாற்றவில்லை. நாள்தோறும் விலையை மாற்ற வேண்டும் என்ற செயல்முறை இருந்தும் அதை எண்ணெய் நிறுவனங்கள் கடந்த 40 நாட்களாக அமல்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து பெயர் குறிப்பிட விரும்பாத எண்ணெய் நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “கடந்த மார்ச் மாதத்திலிருந்து கச்சா எண்ணெய் விலை 15 டாலர்கள் சரிந்துவிட்டன. இதன் பலனாக பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 5 குறைக்கப்பட்டிருக்க வேண்டும். எண்ணெய் நிறுவனங்கள் கணக்கின்படி ஒரு டாலர் கச்சா எண்ணெய் விலையில் சரிந்தால், பெட்ரோல், டீசல் விலையில் 40 பைசா குறைக்க வேண்டும்.

அந்த வகையில் லிட்டருக்கு 5 ரூபாய் குறைக்க வேண்டும். ஆனால், குறைக்கவில்லை. மத்திய அரசு கடந்த மாதம் உற்பத்தி வரியை 3 ரூபாய் உயர்த்தியது போல் எதிர்காலத்திலும் உயர்த்தும் என்பதால் அந்த விலை உயர்வைச் சமாளிக்க இந்த விலைக் குறைப்பின் பயனை மக்களுக்குத் தராமல் எண்ணெய் நிறுவனங்கள் வைத்துக்கொண்டன. மேலும் லாக் டவுன் காலகட்டத்தில் எண்ணெய் நிறுவனங்களுக்கு விற்பனை 50 சதவீதம் சரிந்துவிட்டது'' எனத் தெரிவித்தார்.

கடந்த 15 மாதங்களில் மத்திய அரசுக்கு வருவாய் ஈட்டும் விதத்தில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.1.77 பைசாவும், டீசல் லிட்டருக்கு ரூ.13.47 பைசாவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு கலால் வரி மூலம் ரூ.99 ஆயிரம் கோடி ஈட்டிய நிலையில் 2016-17 ஆம் ஆண்டில் இது ரூ.2.42 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபரில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.2 குறைக்கப்பட்டது. கடந்த 2018-ம் ஆண்டில் லிட்டருக்கு ரூ.1.50 பைசா குறைக்கப்பட்டது. ஆனால், கடந்த 2019 ஆம் ஆண்டு லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் முதல் இப்போது வரை பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை 12 முறை மத்திய அரசு அதிகரித்துள்ளது, 2 முறை குறைத்துள்ளது. இந்தக் காலகட்டத்தில் சர்வதேசச் சந்தையில் விலைச் சரிவை கச்சா எண்ணெய் சந்தித்தபோதெல்லாம், அந்தப் பலனை மக்களுக்குக் கிடைக்கவிடாமல், மத்திய அரசு வரியாக எடுத்துக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x