Published : 25 Apr 2020 01:37 PM
Last Updated : 25 Apr 2020 01:37 PM
அச்சுறுத்திவரும் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் உலக அளவில் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் கிரேட் லாக் டவுனை மத்திய அரசு அமல்படுத்தி இன்றுடன் ஒரு மாதம் முடிகிறது.
சீனாவில் தானே கரோனா வைரஸ் இருக்கிறது, இந்தியாவுக்கு எப்படி வரும், அதிலும் சென்னைக்கு எப்படி வரும் என்று கேட்டவர்கள் அனைவரும் திகைத்துப் போயுள்ளனர். இந்திய அளவில் ஹாட் ஸ்பாட் இடங்களில் முக்கியமான நகரங்களாக சென்னையும் இடம் பெற்றுள்ளது.
கரோனா வைரஸ் பாதிப்பின் அளவும், உயிரிழப்பும் நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இதுவரை கரோனாவால் 24,500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 775 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் இந்த எண்ணிக்கை அனைத்தும் லாக் டவுன் காலத்தில்தான் அதிகரித்துள்ளது என்பதை மறந்துவிடக்கூடாது
மத்திய அரசு லாக் டவுன் முடிவை மிக விரைவாக எடுத்துள்ளது. அதனால்தான் அமெரிக்கா, இத்தாலி நிலைக்கு இந்தியா செல்லவில்லை என்று மத்திய அரசுத் தரப்பிலும், மருத்துவர்கள் தரப்பிலும் கூறப்படுகிறது. இந்த லாக் டவுனை அமல்படுத்தியதால்தான் கரோனா பாதிப்புகள் இரட்டிப்பு ஆகும் இடைவெளி அதிகரித்துள்ளது என்று மத்திய அரசு சார்பிலும் மக்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், நாளுக்கு நாள் கரோனா வைரஸின் பாதிப்பு அதிகரித்து வருகிறதே தவிர குறையவில்லை என்பது நிதிர்சனம். இதை மக்களிடம் தெரிவிக்க ஏன் அதிகாரிகள் தயங்குகிறார்கள் எனத் தெரியவில்லை. கரோனா பாதிப்பின் வேகம் தடுக்கப்பட்டு இருக்கிறதே தவிர பாதிப்பு தடுக்கப்படவில்லை என்பதற்கு புள்ளிவிவரங்கள்தான் சாட்சியாகும்.
கடந்த மார்ச் மாதம் நடுப்பகுதியில் மத்திய அரசு போக்குவரத்துக் கட்டுப்பாடுகளைத் தீவிரமாக அமல்படுத்தியது. ஆனால், அதற்குப் பதிலாக இந்தியாவுக்கு அதிபர் ட்ரம்ப் வந்து சென்றவுடனே அதாவது பிப்ரவரி மாத இறுதிலேயே அமல்படுத்தியிருந்தால் இந்த பாதிப்பு பெருமளவு குறைந்திருக்கும்.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடந்த பிப்ரவரி மாதத் தொடக்கத்திலிருந்து கரோனாவின் ஆபத்தைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். மிகப்பெரிய சுனாமி வருகிறது, மிகப்பெரிய ஆபத்து வரப்போகிறது என பலமுறை எச்சரித்தார். ஆனால் நாடாளுமன்றத்தை நடத்துவதில் மட்டுமே அக்கறை காட்டிய மத்திய அரசு, தடுப்பு நடவடிக்கையில் தீவிரம் காட்டவில்லை. நாடாளுமன்றத்தை ஏப்ரல் 3-ம் தேதி வரை நடத்தியே தீருவோம் எனக் கூறிவிட்டு மார்ச் 22-ம் தேதிக்கு முன்பாகவே முடித்துக்கொண்டது.
இந்தியாவில் கடந்த ஜனவரி 30-ம் தேதி முதல் கரோனா நோயாளி கேரளாவில் அடையாளம் காணப்பட்டார். அதன்பின் கரோனா வைரஸின் தாக்கம் நாட்டில் மெல்ல அதிகரிதத்தைத் தொடர்ந்து 54 நாட்களுக்குப் பின் ஆதாவது கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் கட்ட லாக் டவுன் ஏப்ரல் 14-ம் தேதி வரை கொண்டு வரப்பட்டது.
அந்த 21 நாட்கள் காலகட்டத்திலும் கரோனாவின் தாக்கம் தணியாததைத் தொடர்ந்து ஏப்ரல் 15-ம் தேதி முதல் மே 3-ம் தேதி வரை 2-ம் கட்ட லாக் டவுன் அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது
அதாவது ஜனவரி 30-ம் தேதி முதல் மார்ச் 25-ம் தேதி வரையிலான 54 நாட்களில் கரோனாவால் நாட்டில் 519 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.11 பேர் உயிரிழந்தனர். ஆனால், மார்ச் 25-ம் தேதி முதல் ஏப்ரல் 25-ம் தேதி (இன்று) வரை ஒரு மாத முடிவில் கரோனாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24,500 ஆக அதிகரித்துள்ளது. இந்த 30 நாட்கள் காலகட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஏறக்குறைய 47 மடங்கு அதிகரித்துள்ளது.
உயிரிழப்பைப் பொறுத்தவரை மார்ச் 25-ம் தேதி 11 பேராக இருந்த நிலையில், ஒரு மாதத்தில் 775 ஆக அதிகரித்துள்ளது. உயிர் பலியும் 70 மடங்காக அதிகரித்துள்ளது.
இந்த ஒரு மாத காலகட்டத்தில் கரோனாவின் பாதிப்பு குறைந்திருக்கிறதா அல்லது அதிகரித்துள்ளதா அல்லது பரவும் வேகம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதா? இந்த மூன்றில் எதைப் பொருத்திப் பார்க்கிறது மத்திய அரசு எனத் தெரியவில்லை. மக்களுக்கும் புரியவில்லை.
முதல்கட்ட லாக் டவுனில் முதல் வாரம் முடிந்தபோது அதாவது மார்ச் 31-ம் தேதி வரை 1,397 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர், 35 பேர் உயிரிழந்தனர். 2-வது வாரத்தில் 878 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 24 பேர் பலியாகியிருந்தனர். 3-வது வார லாக் டவுன் முடிவில் ஒட்டுமொத்தமாக 10,815 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர், 353 பேர் உயிரிழந்தனர்.
அதாவது 5 ஆயிரம் பேர் கரோனாவால் பாதிக்கப்படுவதற்கு எடுத்துக்கொள்ள தேவைப்பட்ட காலம் 69 நாட்கள். ஆனால் 5 ஆயிரத்திலிருந்து 10 ஆயிரம் எண்ணிக்கையைக் கடக்க 6 நாட்கள் தேவைப்பட்டன. ஏப்ரல் 7-ம் தேதி 5 ஆயிரம் பாதிப்பைத் தொட்டு 13-ம் தேதி 10 ஆயிரத்தை அடைந்தது.
ஏப்ரல் 18-ம் தேதி 6 நாட்களில் கரோனாவின் வேகம் அதிகரித்து 5 ஆயிரம் எண்ணிக்கை அதாவது 15 ஆயித்தை அடைந்தது. அடுத்த 3 நாட்களில் 15 ஆயிரத்திலிருந்து 20 ஆயிரத்தை அடைந்துள்ளது.
21-ம் தேதி 20 ஆயிரத்தை எட்டியுள்ள பாதிப்பு இன்றைக்குள் (25-ம்தேதி) 25 ஆயிரத்தை எட்டிவிடும். 4 நாட்களில் அடுத்த 5 ஆயிரத்தை அடைந்துள்ளது. இந்தக் கணக்கீட்டின்படி பார்த்தால் கரோனா பரவும் வேகம் குறைந்துள்ளது என்று எவ்வாறு எடுத்துக்கொள்வது?
மக்களிடையே தீவிரமான சமூக விலகலைக் கொண்டுவருதல், தனிமனிதர் சுத்தத்தை அதிகப்படுத்துதல், லாக் டவுனைத் தீவிரமாக அமல்படுத்துதல் ஆகிய நடவடிக்கைகளோடு, பரிசோதனை செய்யும் அளவின் வேகத்தை அதிகப்படுத்த வேண்டும்.
அமெரிக்கா, இத்தாலி போன்ற நாடுகளில் கரோனா பரவும் வேகத்தை ஒப்பிட்டு நம்நாட்டில் குறைவான வேகத்தில் பரவுகிறது என்று ஆறுதல் பட்டுக்கொள்கிறது மத்திய அரசு. ஆனால், அந்த நாடுகளில் மேற்கொள்ளப்படும் பரிசோதனையோடு ஏன் ஒப்பிடுவதில்லை? அந்த நாடுகளின் பரிசோதனை நிலவரத்தோடு ஒப்பிட்டால் நாம் மிகவும் பின்தங்கித்தானே இருக்கிறோம்.
ஏற்கெனவே 21 லாக் டவுனால் நாட்டின் பொருளாதாரம் மிகக்கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில் 2-ம் கட்ட லாக் டவுனில் பாதிப்பு தீவிரமாகும். அதைச் சரிகட்டவே பொருளாதார நடவடிக்கைகளை வேகப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இது வரவேற்கக்கூடியது என்றாலும் லாக் டவுன் தளர்த்தல் என்பது மிகவும் கவனத்துடன் செய்யக்கூடிய செயலாகும் என உலக சுகாதார அமைப்பு தொடர்ந்து எச்சரித்து வருகிறது.
இதே கருத்தைத்தான் பல மருத்துவ வல்லுநர்களும் வலியுறுத்துகிறார்கள். டெல்லி கங்கா ராம் மருத்துவமனையின் தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் அரவிந்த் குமார் கூறுகையில், “ஒரு மாத லாக்டவுன் காலம் இந்தியாவுக்கு அதிகமான பலனைக் கொடுக்கும். அமெரிக்கா, இத்தாலி போன்று நிலைமை வராமல் தடுத்துள்ளது.
ஆனால், இந்த லாக் டவுன் காலகட்டத்தை எவ்வாறு ஆக்கபூர்வமாகப் பயன்படுத்திக்கொண்டோம் என்ற கேள்வி இருக்கிறது. மருத்துவ வசதிகளை அதிகப்படுத்த வேண்டும், பரிசோதனைகளை விரைவுபடுத்தி, அளவை அதிகப்படுத்தி இருக்கவேண்டும்.
இதைவிட முக்கியமானது, லாக் டவுனைத் தளர்த்தும்போது அதீதமான கவனத்துடன் செயல்பட வேண்டும். மிகவும் மெதுவாகவே செயல்பட வேண்டும். மே மாதம் வரை பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள், மத வழிபாட்டுத் தலங்கள், பெரிய சந்தைகளை மூடி வைத்திருக்க வேண்டும். பச்சை மண்டலத்தில் மட்டும் முதலில் மக்களை வெளியே நடமாட அனுமதித்து, அதன்பின் ஆர்ஞ்சு மண்டலத்திலும், கடைசியாக சிவப்பு மண்டலத்துக்கும் வர வேண்டும்” எனத் தெரிவித்தார்.
போர்டிஸ் மருத்துவமனையில் நுரையீரல் சிகிச்சை வல்லுநரான ரவி சேகர் கூறுகையில், “ மத்திய அரசு விரைவாக லாக் டவுன் கொண்டுவந்தது வரவேற்கக்கூடியது. இதனால் வைரஸ் பரவும் வேகம் குறைந்துள்ளதே தவிர வைரஸ் பரவுவது தடுக்கப்படவில்லை. இதுவரை கடந்த காலங்கள் சவாலானவை இல்லை. இனிமேல் லாக் டவுனை எவ்வாறு தளர்த்தப்போகிறோம் என்பதில்தான் உண்மையான சவால் காத்திருக்கிறது. படிப்படியாக லாக் டவுனைத் தளர்த்த வேண்டும். இல்லாவிட்டால் விளைவுகளை நினைத்துப் பார்க்க முடியாது. லாக் டவுனைத் தளர்த்தும்போது மிக மிக எச்சரிக்கையாக சாதுர்யமாகச் செயல் பட வேண்டும்” எனத் தெரிவித்தார்.
தற்போது லாக் டவுனை மே 3-ம் தேதி தளர்த்துவதற்கான பணிகளில் மத்திய அரசு மெல்ல ஈடுபட்டு வருகிறது. கரோனா வைரஸின் தாக்கம் குறையாதபோது எந்த அடிப்படையில் லாக் டவுன் தளர்த்தப்படும் என்ற கேள்வியை வல்லுநர்கள் வைக்கிறார்கள்.
பிடிஐ தகவல்களுடன்...
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT